உள்ளடக்கத்துக்குச் செல்

செவ்வலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிபோர்னியக் கடற்கரையில் தோன்றிய செவ்வலை

செவ்வலை அல்லது சிவப்பு அலை (Red tide) எனப்படுவது ஒருவகை பாசித்திரள் நிகழ்வாகும், இதன் போது குறிப்பிட சில பாசியினங்கள் கடல் நீரின் மேற்பரப்பை முற்றாகச் சூழ்ந்து காணப்படுவதால் கடலின் நிறம் மாறுபட்டு செந்நிறமாகத் தோற்றமளிக்கின்றது. இந்நிகழ்வு பொதுவாக கடற்கரைப்பகுதிகளில் நடைபெறுகின்றது.

மிதவைவாழிகள் பிரிவில் அடங்கும் அலைதாவரங்கள் எனப்படும் பாசிகளின் பிரிவே இதற்குக்காரணம். ஈர்கசைவாழி (Dinoflagelate) போன்ற சில அலைதாவர இனங்கள் ஒளித்தொகுப்பு நிறமிகளைக் கொண்டுள்ளன, இவற்றின் நிறம் பச்சை, பழுப்பு, சிவப்பு என மாறுபடுகின்றது. மிகை அடர்த்தியாக பாசிகள் இருக்கும்போது நீரின் நிறம் அற்றுப்போய் இருளார்ந்ததாகவோ அல்லது ஊதா நிறம் தொடக்கம் இளஞ்சிவப்பு வரையிலான நிறவீச்சு எல்லையைக் கொண்டதாகவோ காணப்படுகின்றது, எனினும் சிவப்பு அல்லது பச்சை நிறமே இயல்பாகக் காணப்படுகின்றது. கடல் அலையின் மாற்றத்தால் இச்செயல் நிகழ்வதில்லை என்பதால் இவற்றைப் பொதுவாகப் பாசித்திரள் என்று அழைத்தலே தகும். ஆனால், பாசித்திரள் நிகழ்வுகள் அனைத்தும் நிறத்தை மாற்றக்கூடியன அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைத்துப் பாசித்திரள் நிகழ்வும் சிவப்பு நிறத்தைத் தருவன அல்ல.

சில செவ்வலைகள் பாசிகளால் உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை நச்சுப்பொருட்களையும் சேர்த்துக்கொண்டே தோன்றுகின்றது, இது கேடுமிக்க பாசித்திரள் எனப்படும். கடற்கரைச் சூழலில் மற்றும் கடலில் வசிக்கும் மீன், பறவைகள், கடற் பாலூட்டிகள் மற்றும் வேறு உயிரினங்களின் இறப்பிற்குச் செவ்வலைகளின் வெளிப்படையான விளைவேக் காரணமாகும். புளோரிடாவில் ஏற்பட்ட செவ்வலைகளால் இதுப்போன்ற பேரிழப்புகள் ஏற்பட்டன. இதற்குக் காரணமான பிரெவிடாக்சின் (brevetoxin) எனும் நரம்புமண்டலத்தைத் தாக்கும் நச்சுப்பொருளை கரெனியா பிரெவிசு (Karenia brevis) என்னும் ஈர்கசைவாழி உற்பத்திச் செய்கின்றது.

செவ்வலைகளின் விளைவுகள்

[தொகு]

கரெனியா பிரெவிசு அலைதாவரங்கள் மிகையான அடர்த்தியில் தோன்றும் போது செவ்வலைகள் உண்டாகின்றன. இவ்வாறு தோன்றும்போது இவ்வலைதாவரங்களில் இருந்து வெளிப்படும் நச்சுப்பொருளானது மீன் மற்றும் இதர விலங்குகளின் மைய நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்வதால் சுவாசிக்கமுடியாமல் விலங்குகள் இறந்துவிடுகின்றன. கரையோரப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் கூட இவற்றால் பாதிப்படைகின்றன. மாந்தரில் இவற்றின் நுகர்வு நடைபெற்றால் சுவாசம் தொடர்பான கோளாறுகள் ஏற்படலாம். செவ்வலை நச்சுப்பொருட்களால் மாசுற்ற கடல் உணவுகளை உண்ணுதல் மூலம் இத்தகைய தீயவிளைவுகள் உண்டாகும்.

மெக்சிக்கோ வளைகுடாவில் இவ்வாறான நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன.[1] செவ்வலைகள் நிகழ்வு ஒரு பொருளாதார நோக்கில் கேடுவிளைவிக்கும் சம்பவம் என்பதால் இவை உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றன. புளோரிடாவில் மற்றும் டெக்சாசில் இவற்றுக்கான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுகின்றது. அனைத்து செவ்வலைகளும் தீயவை அல்ல.

உசாத்துணைகள்

[தொகு]
  1. "The Gulf of Mexico Dead Zone and Red Tides". பார்க்கப்பட்ட நாள் December 27, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வலை&oldid=2744723" இலிருந்து மீள்விக்கப்பட்டது