உள்ளடக்கத்துக்குச் செல்

சபாபதி நாவலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபாபதி நாவலர்
பிறப்பு1846
கோப்பாய், யாழ்ப்பாணம்
இறப்பு1903 (அகவை 56–57)
சிதம்பரம், தமிழ்நாடு
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுசைவத்திற்கும், தமிழுக்கும் தொண்டாற்றியவர், புலவர்.
சமயம்சைவ சமயம்
பெற்றோர்சுயம்புநாதர்
தெய்வயானை

சபாபதி நாவலர் (1845/1846[1] - 1903) பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புகழ் மிக்க பெரும்புலவராய், சொல்லாற்றல் மிக்கவராய், சைவத்துக்கும், தமிழுக்கும் சிறந்த தொண்டாற்றியவர். யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் தமிழ்நாட்டு மன்னர்களாலும், மடத்துத்தலைவர்களாலும் மற்றும் அக்காலப் புலவர்களாலும் பாராட்டப் பெற்றவர்.

தோற்றம்

[தொகு]

இலங்கையின் வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணத்தில், வடகோவை என்னும் ஊரில் 1846 ஆம் ஆண்டில் சபாபதி நாவலர் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் சுயம்புநாதப் பிள்ளை. தாயின் பெயர் தெய்வயானை. சைவ வேளாளர் குலத்தினைச் சேர்ந்தவர். இவர் அக்காலப் புலவர்களில் சிறந்தவராகவும், சொல்வன்மை மிக்க கல்வியாளராகவும் விளங்கினார்.

கல்வி

[தொகு]

சபாபதியார் உரிய காலத்தில் கல்விப் பயிற்சிக்குப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பெற்றார். தொடக்கத்தில் பிரம்மசிறீ ஜெகந்நாதையர் என்பார் அக்காலத்திலே வடகோவைப் பகுதியிலே வடமொழி, தமிழ் ஆகிய மொழிகளிலே சிறந்து இருந்தார். அவரிடம் சபாபதிப் பிள்ளை சிலகாலம் பயின்ற பின்னர், நீர்வேலி சிவசங்கர பண்டிதர் என்பவரிடம் தமிழையும், வடமொழியையும் கற்றார். அக்கால வழக்கப்படி ஆங்கிலத்தையும் நன்கு கற்றார்.

தமிழ்நாட்டில் தொண்டு

[தொகு]

கல்வி இவருக்கு எளிதாக வந்து எய்தியது. இவர் சிறந்த புலமை எய்தியதை அறிந்த ஆறுமுக நாவலர், தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் தம்மால் நிறுவப்பட்ட சைவபிரகாச வித்தியாசாலையில், தலைமை ஆசிரியராக இருக்குமாறுப் பணித்தார். அங்ஙனமே, அப் பணியினை ஏற்று, சில ஆண்டுகள் சபாபதி நாவலர் சிதம்பரத்தில் பணியாற்றினார். சிதம்பரத்தில் இருக்கையிலே "ஏம சபாநாத மான்மியம்" என்னும் வடமொழி நூலைத் தமிழில் மொழிபெயர்த்துச் சிதம்பரம் சபாநாத புராணம் என்னும் பெயரில் 893 செய்யுட்கள் கொண்டதாக எழுதி 1895-ஆம் ஆண்டு வெளியிட்டார்.

அருளுரை பெறுதல்

[தொகு]

அக்காலத்தில் திருவாவடுதுறையில், சுப்பிரமணிய தேசிகர் பதினாறாம் பட்டத்து ஆசிரியராக அமர்ந்திருந்தார். அவர் நூற்றுக்கணக்கான மாணவர்களைச் சேர்த்து, தம்மிடத்தில் பாடங்கற்குமாறு செய்திருந்தார். அத் தேசிகருடையை பெருமைகளைக் கேள்வியுற்ற சபாபதி நாவலர், திருவாடுதுறையை அடைந்து, அத் தேசிகரிடம் அருளுரை பெற்று, அவர்கள் முன்னிலையில், பன்னிரண்டு ஆண்டுகள், அறிவு நூல்களையெல்லாம் முறையாகக் கற்றுணர்ந்தார். இலக்கிய, இலக்கணங்களிலும், வேதாந்த சித்தாந்த நூல்களிலும் சிறந்த புலமையுடையவரானார்.

நாவலர் என்னும் பட்டம்

[தொகு]

சபாபதியார் புலமைப் பெற்ற பிறகு, அவைகளில் சொற்பொழிவு செய்தலிலும் வல்லவரானார். சொல் வன்மையும், அவர்க்கு இயற்கையிலே அமைந்துவிட்டது. நாவன்மையுடையவர்க்கு, "நாவலர்" என்னும் பட்டம் அளிப்பது வழக்கம். ஆயின் அக்காலத்தில் ஆறுமுக நாவலர் ஒருவர் மட்டுமே, 'நாவலர்' என்னும் பட்டம் பெற்றிருந்தார். பிறகு, இவருக்கும் அப்பட்டத்தைத் தந்தனர். திருவாவடுதுறையில் ஒரு பேரவையைக் கூட்டி, இவரை சொற்பொழிவு ஆற்றச் செய்து, அப்பேரவையில் சுப்பிரமணிய தேசிகர், இவருக்கு 'நாவலர்' என்னும் சிறப்புப் பெயரை வழங்கியருளினார்.

சிவஞானபோதம்

[தொகு]

சிவஞானபோதம் என்பது சிறந்த சைவ சித்தாந்த நூல் ஆகும். அதன் உரை, "மாபாடியம்" என்று புகழ்ந்து கூறப்படுவது ஆகும். சிவஞானபோத மாபாடியம் என்னும் சைவ சித்தாந்த மெய்ஞ்ஞான நூல், சைவ சமயத்துக்கொரு 'முடிமணி' போன்று விளங்கும் சிறப்புடைய நூலாகும். இந்நூலினை, ஆதீனத்தலைவர் தகுந்த அறிவும் பக்குவம் உடையவர்களைக் கண்டு, அவர்களுக்கு மட்டுமே படிப்பதற்குக் கொடுப்பது வழக்கம். தேசிகரவர்கள் சபாபதி நாவலரிடம் கொண்டிருந்த நன்மதிப்பால், அந்நூலை சபாபதி்க்கு நல்கிக் கற்றுணரச் செய்தார்.

சொற்பொழிவுகள்

[தொகு]
  • நாவலருடைய பேரறிவும், சொல்லாற்றலும் புலவர்களாலும் பாராட்டப்பெற்றன. கல்வியறிவோடு சொல் வன்மையும் ஒருவர்க்கு இருக்குமாயின் அது பொன்மலர் மணம் பெற்றது போலாகும் என்று அறிஞர் கூறுவர். தமிழ்நாடு முழுவதும், நாவலர் புகழ் பரவியது. ஆங்காங்கு உள்ளவர்கள் நாவலரை யழைத்துச் சொற்பொழிவுகள் செய்யுமாறு செய்தனர். இவர் சைவ சமய வளர்ச்சியின் பொருட்டும் தமிழ்மொழி வளர்ச்சியின் பொருட்டும் பல சொற்பொழிவுகள் செய்தார். சைவ சமயப் பெருமையை எல்லாரும் அறியுமாறு செய்தார். இராமநாதபுரம் சேதுபதி மன்னர், மதுரை ஆதீனத்துத் தலைவர், திருவாவடுதுறைச் சுப்பிரமணிய தேசிகர், அம்பலவாண தேசிகர், சூரியனார் கோயில் ஆதீனம் முத்துக்குமார தேசிக சுவாமிகள் முதலியோர் நாவலருடைய சமயத் தொண்டுகளை மிகவும் வியந்து பாராட்டிப் போற்றினார்கள்.
  • இவர் சென்னையில் தங்கியிருந்தபோது, திருமயிலை, திருவொற்றியூர், கந்தகோட்டம் முதலிய இடங்களில் சைவ சமயச் சொற்பொழிவுகள் பல செய்து சைவ சமயத்தின் தனிச் சிறப்பை எல்லாரும் உணருமாறு செய்தார்.

நாவலரும், சேதுகாவலரும்

[தொகு]

இராமநாதபுரத்துச் சேதுமன்னர், நாவலரின் கல்வித் திறமும் சொல்வன்மையும் கண்டு மிக்க மதிப்பு வைத்திருந்தார். நாவலர் சிதம்பரம் சென்றபோது, அங்கு சென்ற பாஸ்கர சேதுபதி மன்னர் நாவலரைக் கண்டு உரையாடினார். அவரைத் தம்முடன் இராமநாத புரத்துக்கு அழைத்துச் சென்று அரண்மனையில் தங்கச் செய்தார். சேது நாட்டில் சிலகாலம் தங்கியிருந்து சமயத்தொண்டு செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். நாவலர் அதற்கு இணங்கிச் சில திங்கள் அங்கே தங்கியிருந்தார். பிறகு மன்னரோடு உத்தரகோசமங்கை என்னும் ஊருக்குச் சென்றார். இறை வழிபாடு ஆற்றியபின் மன்னர் தலைமையில் நாவலர் வேத நெறி தழைத் தோங்க என்னும் பெரியபுராணச் செய்யுள் அடியைத் தலைப்பாகக் கொண்டு மிகச் சிறந்த ஒரு சொற்பொழிவு ஆற்றினார். அதன் பின்னர் மன்னரோடு பல திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டார். பின்னர்த் திருச்செந்தூர், தூத்துக்குடி, திருக்குற்றாலம் ஆகிய இடங்கட்குச் சென்று வழிபட்டதோடு சொற்பொழிவும் நிகழ்த்தினார். அதன் பின்னர் அரசரும் நாவலரும் இராமநாதபுரத்தை அடைந்தனர். வேந்தர், நாவலர்க்குப் பாராட்டு விழா நடத்தி மூவாயிரம் பொற் காசுகள் நன்கொடையாக வழங்கினார். மேலும், வேண்டிய போது உதவி செய்வதாகவும் கூறினர். நாவலர், சேதுவேந்தரிடம் விடைபெற்றுக்கொண்டு சென்னையை அடைந்தார்[2].

சபாபதி நாவலரின் மாணவர்கள்

[தொகு]

நாவலரிடத்தில் மாணவர் பலர் வந்து கல்வி கற்றுச் சிறப்படைந்தனர். அவர்களுள்,

  1. சிதம்பரம் அ. சோமசுந்தர முதலியார்,
  2. விழுப்புரம் இராமசாமி பிள்ளை,
  3. மாகறல் கார்த்திகேய முதலியார்,
  4. மயிலை சு. சிங்காரவேலு முதலியார்,
  5. மாவை விசுவநாத பிள்ளை,
  6. சிதம்பரம் சிவராமச் செட்டியார்,
  7. திருமயிலை பாலசுந்தர முதலியார்,
  8. கழிபுரம் சிப்பிரகாச பண்டிதர் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

இவரால் இயற்றப்பெற்ற நூல்கள்

[தொகு]
  • 168 செய்யுட்களாலான, ஏசு மத நிராகரணம் என்ற நூல் எழுதி, கிறிஸ்துவக் கொள்கைகளை மறுத்தார்.
  • திருச்சிற்றம்பல யமக வந்தாதி
  • திருவிடைமருதூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி
  • மாவையந்தாதி
  • நல்லைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம்
  • திராவிடப் பிரகாசிகை
  • சென்னையில் அச்சகம் ஒன்றை நிறுவி, அதிலிருந்து ஞானாமிர்தம் என்னும் இதழை வெளியிட்டார்.
  • திருச்சிற்றம்பலவந்தாதி
  • வடகோவைச் செல்வ விநாயகர் இரட்டைமணிமாலை
  • வதரிநகர்த் தண்டபாணிக் கடவுள் பதிகம்
  • புறவார் பனங்காட்டூர்ப் புறவம்மை பதிகம்
  • சிதம்பரம் பாண்டிநாயக மும்மணிக்கோவை
  • இலக்கண விளக்கப் பதிப்புரை மறுப்பு
  • ஞான சூடாமணி[3]

மொழிபெயர்ப்பு நூல்கள்

[தொகு]
  • 893 செய்யுட்களைக் கொண்ட சிதம்பர சபாநாத புராணம் என்னும் நூலை இயற்றி, 1895 ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்நூல் ஏம சபாநாத மான்மியம் என்னும் வடமொழி நூலின் மொழிபெயர்ப்பாகும்.
  • அப்பய்ய தீட்சிதர் என்பவர் இயற்றிய சிவகர்ணாமிர்தம் என்னும் வடமொழி நூலினைத் தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டார்.
  • வடமொழியில் இயற்றப்பெற்ற பாரத தாற்பரிய சங்கிரகம், இராமாயண தாற்பரிய சங்கிரகம் என்னும் நூல்களையும், தமிழில் மொழிப்பெயர்த்தார். இவ்விரு வடமொழி நூல்களும், மேற்கூறிய தீட்சிதரால் எழுதப்பட்டவையே ஆகும்.

மறைவு

[தொகு]

இறுதிக் காலத்தில் நாவலர் சிதம்பரத்தில தங்கிருத்தார். அங்கும் சைவ சமயச் சொற்பொழிவுகள் பல செய்தார். பிறகு திருத்தில்லையில் தங்கிருந்தபோது, 1903ஆம் ஆண்டில், தமது ஐம்பத்தெட்டாவது அகவையில் இயற்கை எய்தினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிறந்த ஆண்டு: சாலிவாகன சகாப்தம் 1766
  2. யாழ்ப்பாணப் புலவர்கள், திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், ஆசிரியர்: புலவர். சொ. முருகேச முதலியார்
  3. "ஸ்ரீ சபாபதி நாவலரவர்கள் இயற்றிய ஞான சூடாமணி". திருநெல்வேலி : கணேசன் அச்சுக்கூடம். 1948.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]
தளத்தில்
சபாபதி நாவலர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபாபதி_நாவலர்&oldid=3242996" இலிருந்து மீள்விக்கப்பட்டது