சதுரகராதி
சதுரகராதி என்பது வீரமாமுனிவரால் உருவாக்கப்பட்ட முதல் தமிழ்-தமிழ் அகராதி.
முன்னாளைய நிகண்டுகள்
[தொகு]வீரமாமுனிவரின் காலத்திற்கு முன் நிகண்டுகள் என்னும் செய்யுள் வகை நூல்கள் தாம் சொல்லுக்கு பொருள் கூறும் நூல்கள். அகராதி போல் வேண்டும் சொற்களுக்கு உடனே பொருள் அறியும் வசதி இல்லாதவையாக நிகண்டுகள் இருந்தன. வீரமாமுனிவருக்கு முன் ஐரோப்பியர் சிலர் தமிழ்-போர்த்துக்கீசியம், தமிழ்-இலத்தீன் போன்ற இரு மொழிகளில் அமைந்த அகராதிகளை உருவாக்கியிருந்தனர் (எடுத்துக்காட்டாக, அந்தம் தெ புரவென்சா [Antam de Provença] என்பவர் எழுதி, ஜூலை 30, 1679இல் அம்பலக்காடு என்னும் இடத்தில் இயேசு சபை குருக்களால் பதிக்கப்பட்ட தமிழ்-போர்த்துக்கீசிய அகராதியைக் குறிப்பிடலாம். அந்நூல் புரவென்சா இறந்து பத்து ஆண்டுகளுக்குப் பின் அச்சேறியது. அதற்கு முன்னரே என்றிக்கே என்றீக்கசு (1520-1600) தமிழ்-போர்த்துக்கீசிய அகராதி இயற்றியிருந்தார் எனத் தெரிகிறது. ஆனால் அது கிடைக்கவில்லை.
வீரமாமுனிவரின் முதல் முயற்சி
[தொகு]வீரமாமுனிவர் 1710இல் தமிழகம் வந்தார். அதற்கு முன்பாக தமிழகராதிகள் இருந்தாலும் தமிழ்-தமிழ் அகராதிகள் இருக்கவில்லை. சதுரகராதி என்ற பெயரில் வீரமாமுனிவர் முதல் தமிழ்-தமிழ் அகராதி படைத்தார். 1732 நவம்பர் திங்கள் 21ஆம் நாள் சதுரகராதி நிறைவுற்றதை வீரமாமுனிவர் அந்நூலின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார். சதுரகராதி முதலில் 1919ஆம் ஆண்டில் அச்சு நூலாக வெளியிடப்பட்டது.[1] பண்டைய நிகண்டு முறையைக் கடந்து, அகராதி என்றொரு புது வகைப் படைப்பு தமிழில் தோன்ற வீரமாமுனிவர் காரணமானார்.
சதுரகராதி: பொருள் என்ன?
[தொகு]ஒரு மொழியில் உள்ள சொற்கள் அனைத்தையும் அகர முதலிய எழுத்து வரிசையில் தொகுத்து, அவற்றிற்கான பொருளை அதே மொழியிலோ, வேறொரு மொழியிலோ எடுத்துரைப்பது அகராதி ஆகும். சொல்லின் பொருளோடு அதன் உச்சரிப்பு, தோற்றம், இலக்கியத்தில் வந்துள்ள இடம், அது வழங்கும் நாடு முதலியனவும் அகராதியில் குறிக்கப்படும்.
சதுகராதி பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. பெயர் அகராதியில் சொற்பொருளும், பொருள் அகராதியில் ஒரு பொருளைக் குறிக்கும் பல சொல்லும், தொகை அகராதியில் இணைந்துவரும் இலக்கியக் கலைச்சொற்களும், தொடை அகராதியில் எதுகையும் வருகின்றன.[2]
திவாகரம், பிங்கலம் முதலிய நிகண்டுகளில் உள்ள பொருளடக்கத்தை வீரமாமுனிவர் சதுரகராதியில் அகர வரிசைப்படுத்தியுள்ளார். சதுரகராதியை உருவாக்குவதற்குத் தாம் நிகண்டுகளைப் பயன்படுத்தியதாக வீரமாமுனிவரே நூலின் முகவுரையில் கூறுகிறார். மேலும், சதுரகராதியைப் படைக்க கடின உழைப்பு தேவைப்பட்டது எனவும் முனிவர் குறிப்பிடுகிறார். பழைய நூல்களைக் கவனமாகப் பார்வையிட்டு, படி எடுப்போரால் வந்த பிழைகளை நீக்கி, வடமொழி சொற்களை அம்மொழி அறிஞர் துணைகொண்டு திருத்தி, சதுரகராதி என்னும் கருவூலத்தை வளம்பெறச் செய்ததாகக் கூறுகிறார்.
சதுரகராதியின் சிறப்பு
[தொகு]Thesaurus என்னும் இலத்தீன் சொல்லைப் பயன்படுத்தி, சதுரகராதியைக் கருவூலம் என்று வீரமாமுனிவர் குறிப்பிடுவது கருதத்தக்கது. சொல்லுக்குப் பொருள் தருவது அகராதி. ஒத்த கருத்துடைய சொற்களை ஓரிடத்தில் சேர்த்துக் கொடுப்பது கருவூலம். ஆகும். சதுரகராதியில் ஒவ்வொரு பொருளுக்கும் பல கோணங்களிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நெடில், கீழெதுகை, தொடைப்பதம், அனுபந்த அகராதி என்ற உட்பிரிவுகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
செய்யுள் வடிவில் அமைந்த நிகண்டுகளிலிருந்து தமிழரை விடுவித்து, எதுகை தேடி சொற்பொருள் காணும் சிர���ம் தவிர்த்து, அகர வரிசையில் எளிதாக பொருள் காண முனிவர் வழிசெய்தார். சதுரகராதியில் பெயர்ச் சொற்களாக ஏறக்குறைய 12 ஆயிரம் சொற்கள் உண்டு. பிற்காலத்தில் தோன்றிய எண்ணிறந்த தமிழ் அகராதிகளுக்கு முன்னோடியாக அமைந்தது சதுரகராதி. 1732இல் முதல்முறை வெளியானதிலிருந்து சதுரகராதி பல முறை பதிக்கப்பட்டுள்ளது.
சதுரகராதிக்கு எழுதிய இலத்தீன் முன்னுரையில் முனிவர் இவ்வாறு கூறுகிறார்: Vulgaris linguae lexicon, ubi quaslibet lectiones Latine, Gallice, ac Lusitane explico (தமிழில்: பொதுத்தமிழ் அகராதியில் ஒவ்வொரு சொல்லுக்கும் இலத்தீனிலும், பிரஞ்சிலும், போர்த்துக்கீசியத்திலும் விளக்கம் தருகிறேன்). மேலும் இந்த நூலின் அமைப்பு பற்றி அதன் முகவுடையில் முனிவர் பின்வருமாறு கூறுகிறார்மேலொட்டு உரை,செந்தமிழில் எழுதப்பட்டுள்ள நூல்களில் உள்ள பெரும்பாலான எல்லாச் சொற்களையும் தொகுத்து அவற்றினுள் பொதிந்துள்ள இருமை, பன்மைப் பொருள்களை அவற்றின் ஆற்றலோடுகொடுத்துள்ளேன்.ஒரு பொருள் பல சொற்களாக உள்ள பெயர்ச் சொற்களைக் கொடுத்து அந்தச்சொற்கலைக் கையாண்டுள்ள ஆசிரியர்கள் அங்கங்கே கொள்உம் கருத்தை அறிந்து, அவை கொள்ளும் பல்வேறு நிலைகளையும் காட்டி உள்ள்ளேன். தமிழ் மொழியின் எண் அடிப்படையில் வழங்கும் எண் மலைகள், எழு கடல்கள் அறு சுவைகள்,... போன்ர எண் அடைச் சொற்களின் விரிவுகளை மூன்றாம் பிரிவில் தந்துள்ளேன்.இறுதியாக செய்யுட்கள் இயற்றப் பயன்படும் முதலெழுத்து வேறுபட்ட ஒரே அசை கொண்ட ஒலி ஒர்றுமை உள்ள சொர்றொகுதியைத் தொகுத்துள்ளேன்மேலொட்டு உரை
கி.பி1824இல் முழு வடிவில் தொகுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டைந்நூலில் ஒவ்வொரு பிரிவின் பின்னும் துணைப்பகுதியும் பிழை நீக்கப் பகுதியும் கொடுக்கப் பட்டுள்ளன.இந்த துணைப்பகுதியில் சில சொற்களுக்குக் கூடுதலாக உள்ள பொருள்களும் இலக்கணக்குறிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. சான்று அசைப்பு - சொல் அசோகம் - மன்மதன் கணை அரி - அழகு அரிப்பிடி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.tamilvu.org/library/ldttam/html/ldttaml4.htm
- ↑ http://www.tamilvu.org/library/ldttam/html/ldttam06.htm