கூட்டுத் தீக்குளிப்பு
கூட்டுத் தீக்குளிப்பு அல்லது ஜௌஹர் (Jauhar), இந்தியாவின் இராசபுத்திர மன்னர்களின் கோட்டைகளை தில்லி சுல்தான்கள் போன்றவர்கள் முற்றுகையிட்டு மிகக் கடுமையாகத் தாக்கும் போது, போரில் தோற்கும் நிலையில் இருப்பின், இராசபுத்திர மன்னர்களின் மனைவிகள் மற்றும் இராசபுத்திர குலப் பெண்கள், தில்லி சுல்தான் படைவீரர்களின் கையில் சிக்கிச் சீரழிவதைத் தடுக்கும் நோக்கில் பெரும் தீ வளர்த்து அதில் கூட்டாக தீக்குளிப்பதே ஜௌஹர் விழா எனும் கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வாகும்.[1] கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வை இராசபுத்திர பெண்கள் பெருமையாகக் கருதினார்கள்.
இரவில் கோட்டையில் நடக்கும் ஜௌஹர் விழாவின் போது, திருமணமான இராசபுத்திர குலப் பெண்கள் திருமண உடைகள் அணிந்து கொண்டு தங்கள் குழந்தைகளுடன் கூட்டாகத் தீக்குளிப்பர். ஜௌஹர் விழா நடந்த அடுத்த நாள் காலையில், கோட்டையில் இருக்கும் இராசபுத்திர படைவீரர்கள் குளித்து விட்டு, குங்குமப்பூ நிறத்திலான ��ெவ்வாடைகள் உடுத்திக் கொண்டு, கூட்டாகத் தீக்குளித்து இறந்த தங்கள் குல பெண்டிர் மற்றும் குழந்தைகளின் சாம்பலை நெற்றியில் இட்டு, துளசி இலைகளை மென்று கொண்டு, கைகளில் போர்க் கருவிகளை ஏந்தி, கோட்டைக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறி, ஜெய் பவானி என வீர முழக்கம் எழுப்பியவாறு, எதிரிகளை வெற்றி கொள்ளும் வரை அல்லது மடியும் வரை வீரமாகப் போரிடுவர்.
பெயர்க்காரணம்
[தொகு]ஜௌ எனும் சமசுகிருதச் சொல்லிற்கு ஜீவன் அல்லது வாழ்க்கை என்றும், ஹர் எனும் சொல்லிற்கு தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளல் என்று பொருளாகும்.
கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வுகள்
[தொகு]கூட்டுத் தீக்குளிப்பு[2] தொடர்பான ஆவணங்கள் வரலாற்று ஆசிரியர்களால் நன்கு ஆவணப்படுத்தப்படவில்லை.
கோரி முகமது போரில் தில்லியின் இறுதி இந்து மன்னரான பிரித்திவிராசு சௌகானைக் கொன்ற செய்தி அறிந்த பட்டத்து ராணி சம்யுக்தா, இராசபுத்திரப் பெண்களுடன் கூட்டாக தீக்குளித்து இறந்தார். [3]
தில்லி சுல்தான்களின் ஆட்சிக் காலங்களில் குறிப்பாக அலாவுதீன் கில்சி மற்றும் துக்ளக் ஆட்சிக் காலங்களில், தற்கால இராஜஸ்தான் மற்றும் குசராத்து பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த இராசபுத்திர குலப் பெண்களின் கூட்டுத் தீக்குளிப்புகள் நிகழ்வுகள் நடைபெற்றன.
1303[4], 1535, 1568 ஆம் ஆண்டுகளில் மேவார் நாட்டின் சித்தோர்கார் கோட்டையில் மூன்று முறை கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வுகள் நடந்தேறின. அலாவுதீன் கில்சி ஆட்சிக் காலத்திலும், துக்ளக் ஆட்சிக் காலத்திலும், ஜெய்சல்மேர் கோட்டையில் இரு கூட்டுத் தீக்குளிப்புகள் நடந்தேறின. மற்றொரு கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வு சந்தேரிக் கோட்டையில் நடந்தேறியது.
ஜெய்சல்மேர் கூட்டுத் தீக்குளிப்பு
[தொகு]தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி, ஜெய்சல்மேர் கோட்டையை ஏழு மாத முற்றுகைக்குப் பின்னர் கைப்பற்றும் தருவாயில், கோட்டைக்குள் இருந்த 24,000 இராசபுத்திர குலப் பெண்கள் பெரும் தீ வளர்த்து கூட்டாகத் தீக்குளித்து உயிர் துறந்தனர். [5] [6]
சித்தூர் தீக்குளிப்பு
[தொகு]1528இல் இராண சங்கா கண்வா போரில் மாண்ட பின்னர், மேவார் மற்றும் சித்தோர்கார் நாட்டுப் படைவீரர்கள், விதவையான இராணி கர்ணாவதியின் தலைமையில் ஒன்று திரண்டனர். குஜராத் சுல்தான் பகதூர் ஷா, சித்தூர் கோட்டையை கைப்பற்றியதால், இராணி கர்ணாவதியும், இராசபுத்திரப் பெண்களும் மார்ச் 8, 1528 இல் கூட்டுத் தீக்குளித்து இறந்தனர். இராசபுத்திர ஆண்கள், பகதூர் ஷா படைகளுடன் உயிர் துறக்கும் வரை கொடூரமாகப் போரிட்டு மாண்டனர்.[7][8]
மூன்றாம் சித்தூர் தீக்குளிப்பு
[தொகு]செப்டம்பர் 1567இல் அக்பர் சித்தூர் கோட்டையைப் பல மாதங்கள் முற்றுகையிட்டார்.[9] இறுதியில் கோட்டையைப் பீரங்கிகளால் தாக்கி, 22 பிப்ரவரி 1568 அன்று கோட்டையைத் திறந்து பார்க்கையில், இராசபுத்திரப் பெண்கள் கூட்டுத் தீக்குளித்து இறந்து போனதை கண்டார். இராசபுத்திர ஆண்கள், நெற்றியில் சாம்பலைப் பூசிக் கொண்டு, ஜெய் பவானி என வீர முழக்கம் இட்டவாறு, அக்பரின் படைகளுடன் இறக்கும் வரை போரிட்டனர். இக்கூட்டுத் தீக்குளிப்பு நிகழ்வுகள் அபுல் பசல் எழுதிய அக்பர் நாமாவில் குறிக்கப்பட்டுள்ளது.
கூட்டுத் தீக்குளிப்புக் காரணங்கள்
[தொகு]போரில் தில்லி சுல்தான் போன்ற எதிரிகள் கையில் தங்கள் குலப் பெண்கள் சிக்கிச் சீரழிந்து போவதை விட இறப்பதே மேல் என இராசபுத்திர குலத்தினர் எண்ணியதே கூட்டுத் தீக்குளிப்புக்கு காரணம் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். மேலும் இக்கூட்டுத் தீக்குளிப்பை மன்னர் குலப் பெண்களும் பெரும் தியாகமாக கருதினர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pratibha Jain, Saṅgītā Śarmā, Honour, status & polity
- ↑ Kayita Rani, the Royal Rajasthan
- ↑ What was the fate of sanyogita after death of prithviraj chouhan
- ↑ "Main Battles". Archived from the original on 2012-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-09-17.
- ↑ R.K. Gupta, S.R. Bakshi, Studies In Indian History: Rajasthan Through The Ages The Heritage Of ..., page 100
- ↑ Beny & Matheson. Page 149.; Khooni Itihaas, Arya Prakashan Mandi, Bikaner,1926
- ↑ R.K. Gupta, S.R. Bakshi, Studies In Indian History: Rajasthan Through The Ages The Heritage Of ..., page 124
- ↑ R.C.Agarwal,Bharatvarsha Ka Sampoorna Itihaas P. 378, S.Chand & Co., 1969
- ↑ R.K. Gupta, S.R. Bakshi, Studies In Indian History: Rajasthan Through The Ages The Heritage Of ..., page 125
வெளி இணைப்புகள்
[தொகு]- First Jauhar of Chittor பரணிடப்பட்டது 2015-02-05 at the வந்தவழி இயந்திரம்
- Second Jauhar of Chittor பரணிடப்பட்டது 2015-02-06 at the வந்தவழி இயந்திரம்
- Third Jauhar of Chittor பரணிடப்பட்டது 2015-02-05 at the வந்தவழி இயந்திரம்
- persian.packhum.org பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம் – The Akbarnama, Part II, Chapter 65, "H.M.'s Siege of the Fortress of Citũr"