உள்ளடக்கத்துக்குச் செல்

எகிப்தின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எகிப்தின் வரலாறு நீண்டதும் வளம் பொருந்தியதும் ஆகும், வளமான கரைப் பகுதிகளையும், வடிநிலங்களையும் கொண்ட நைல் நதியும், பண்டைய எகிப்தின் மூத்தகுடிகளின் சாதனைகளும், வெளிச் செல்வாக்கும் இதற்குக் காரணமாக இருந்துள்ளன. ரோசெத்தாக் கல்லைக் கண்டுபிடித்ததன் மூலம், பண்டை எகிப்தியப் படஎழுத்துக்களின் மர்மங்கள் அவிழ்க்கப்படும்வரை எகிப்துன் பழைய வரலாற்றின் பெரும் பகுதி அறியப���படாததாகவே இருந்தது. உலகின் ஏழு அதிசயங்களுள் இன்றும் நிலைத்திருப்பது எகிப்தில் உள்ள கீசாவின் மாபெரும் பிரமிட் மட்டுமே. அலெக்சாண்டிரியாவின் நூலகம், அந்த வகைக்கு ஒன்றே ஒன்றாகப் பல நூற்றாண்டுகள் இருந்தது.

எகிப்தில், ஆட்டேரியக் கருவி உற்பத்தியோடு கூடிய மனிதக் குடியேற்றம் குறைந்தது கிமு 40,000 வரை பழமையானது. கிமு 3,150-இல்எகிப்தின் முதல் வம்சத்தின் முதல் பாரோவான நார்மரின் கீழ் எகிப்து மற்றும் மேல் எகிப்தும் அரசியல் ரீதியாக ஒன்றாக இணைத்ததோடு, பண்டை எகிப்திய நாகரிகம் ஒன்றானது. பண்டைய எகிப்தை கிமு 525-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசு கைப்பற்றும் வரை, எகிப்தில் தாயக மக்களான எகிப்தின் முதல் வம்சம் முதல் இருபத்தாறாம் வம்சத்தவர்களின் ஆட்சியே நிலவியது. கிமு 332 இல், மசிடோனிய ஆட்சியாளரான மகா அலெக்சாந்தர், ஆக்கிமெனிட்டுகளை வீழ்த்தி எகிப்தைக் கைப்பற்றினார். இருப்பினும் புது எகிப்திய இராச்சியத்திற்கும் (கிமு 1550 – 1077), பிந்தைய எகிப்திய இராச்சியத்திற்கும் (கிமு 664 - கிமு 332) இடைப்பட்ட காலத்தில், கிமு 1069 முதல் கிமு 664 முடிய கிமு 332 முடிய நிலவிய எகிப்தியர் அல்லாத சூடானின் குஷ் இராச்சியத்த்னர் மற்றும் பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியர் போன்ற வெளிநாட்டவர்கள் பண்டைய எகிப்தை கைப்பற்றி ஆண்டனர். இதனை பிந்தைய கால எகிப்திய இராச்சியம் என அழைப்பர்.[1] அலெக்சாந்தரின் இறப்பிற்கு பின்னர், கிமு 336-இல் கிரேக்கப்படைத்தலைவர் தாலமி சோத்தர், எகிப்தில் தாலமைக் பேரரசு நிறுவினார். தொலமிகள், உள்ளூர் கலகக்காரர்களுக்கு முகம்கொடுக்கவேண்டி இருந்ததுடன், வெளியாருடனான போர்களிலும், உள்நாட்டுப் போர்களிலும் ஈடுபட்டதனால், இராச்சியம் வீழ்ச்சியடையத் தொடங்கி இறுதியாக கிமு 33-இல் எகிப்தை உரோமப் பேரரசு தன்னுடன் இணைத்துக்கொண்டது. கிளியோபாட்ரா இறந்த பின்னர் பெயரளவிலான எகிப்தின் சுதந்திரம் முடிவுக்கு வந்து, எகிப்து, உரோமப் பேரரசின் ஒரு மாகாணம் ஆனது.

எகிப்தில் உரோமரின் ஆட்சி, இடையே சசானியப் பேரரசின் கிபி 619 - 629 வரையான 10 ஆண்டுக் காலப்பகுதி தவிர, கிமு 30 முதல் கிபி 641 வரை நீடித்திருந்தது. எகிப்தை முசுலிம்கள் கைப்பற்றிய பின்னர், எகிப்தின் பகுதிகள், தொடர்ந்து வந்த கலீபகங்களினதும், பிற முசுலிம் வம்சங்களினதும் மாகாணங்கள் ஆயின. இவற்றுள் ராசிதீன் கலீபாக்கள் (632-661), உமையா கலீபகம் (661-750), அப்பாசியக் கலீபகம் (750-1258), குர்துபா கலீபகம் (756-1031), பாத்திம கலீபகம் (909-1171), அய்யூப்பிய வம்சத்தின் எகிப்தின் மம்லுக் சுல்தானகம் (கிபி 1250 - 1517) என்பன இவற்றுள் அடக்கம். 1517 இல் துருக்கியின் ஓட்டோமான் சுல்தான் முதலாம் செலீம் கெய்ரோவைக் கைப்பற்றியதன் மூலம் எகிப்தை ஓட்டோமான் பேரரசுக்குள் இணைத்துக்கொண்டார்.

பிரான்சின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்த 1798 - 1801 காலப் பகுதியைத் தவிர்த்து, 1867 வரை எகிப்து, ஓட்டோமான் பேரரசின் பகுதியாகவே இருந்தது. 1867 இல் தொடங்கி எகிப்து, கேதிவேட் எகிப்து என்று அழைக்கப்பட்ட பெயரளவிலான திறை செலுத்தும் ஒரு அரசாக இருந்தது. ஆங்கிலேய-எகிப்தியப் போரைத் தொடர்ந்து 1882-இல் எகிப்து, பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. முதலாம் உலகப் போருக்குப் பின்னர், 1919-இல் இடம்பெற்ற எகிப்தியப் புரட்சியைத் தொடர்ந்து, எகிப்து இராச்சியம் நிறுவப்பட்டது. இது சட்டப்படியான தனியரசாக இருந்தபோதும், ஐக்கிய இராச்சியம் வெளிநாட்டு அலுவல்கள், பாதுகாப்பு மற்றும் சில விடயங்களில் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது. எகிப்தில் பிரித்தானிய ஆக்கிரமிப்பு 1954 வரை நீடித்தது.

வரலாற்றுக்கு முந்திய காலம் (கிமு 6,000 - கிமு 3150)

[தொகு]

நைல் ஆற்றுப் பகுதிகளிலும், பாலைவனச் சோலைகளிலும் பாறை எழுத்துக்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கிமு 10 ஆவது ஆயிரவாண்டுப் பகுதியில், வேட்டுவ-சேகரப் பண்பாடும், மீன்பிடிப் பண்பாடும், தானிய அரைப்புப் பண்பாட்டினால் மாற்றீடு செய்யப்பட்டது. தட்ப வெப்ப மாற்றங்களாலும், அளவு மீறிய மேய்ச்சலாலும், எகிப்தின் மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து சகாரா பாலைவனம் உருவாகியது. தொடக்ககாலப் பழங்குடி மக்கள் நைல் ஆற்றுப் பகுதிக்குப் புலம் பெயர்ந்து, ஒரு நிலையான வேளாண்மைப் பொருளாதாரத்தையும், மையப்படுத்தப்பட சமூகத்தையும் உருவாக்கினர்.[2]

பண்டைய எகிப்திய அரசமரபுகள்

[தொகு]

எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Third Intermediate Period of Egypt
  2. Midant-Reynes, Béatrix. The Prehistory of Egypt: From the First Egyptians to the First Kings. Oxford: Blackwell Publishers.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எகிப்தின்_வரலாறு&oldid=3364814" இலிருந்து மீள்விக்கப்பட்டது