உள்ளடக்கத்துக்குச் செல்

மராத்தியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மராத்தியர்/மகாராட்டிரர்
(मराठी लोक/महाराष्ट्रीय)
மொத்த மக்கள்தொகை
(70 - 80 மில்லியன்)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
அதிக அளவில் வாழும் இடங்கள்:

மகாராட்டிரம் • குஜராத் • மத்தியப் பிரதேசம்
கோவா • கருநாடகம் • ஆந்திரப் பிரதேசம் • தமிழ்நாடு[1]

பிற:

இசுரேல் • மொரீசியசு[1] • ஐக்கிய அமெரிக்கா •

ஐக்கிய இராச்சியம் • ஆத்திரேலியா
மொழி(கள்)
மராத்தி
சமயங்கள்
பிரதானமாக இந்து, சிறுபான்மையினர்: கிறித்தவம், பௌத்தம், யூதம், இசுலாம் & ஜைனம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
திராவிடர், கன்னடர், தெலுங்கர், குஜராத்தியர், தமிழர்

மராத்திய மக்கள் அல்லது மராத்தியர்கள் (மராத்தி: मराठी माणसं அல்லது महाराष्ट्रीय) என்போர் இந்தோ ஆரிய இனக்குழுவினராவார், இவர்கள் மகாராட்டிரத்திலும் மேற்கு இந்திய மாநிலங்களிலும் வாழ்கின்றனர். இவர்களின் மொழியான மராத்தி இந்தோ-ஆரிய மொழிகளின் தென் குழுவின் பகுதியாக உள்ளது. இவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 8 கோடியாகும்.

வரலாறு

[தொகு]

மகாராட்டிரம் முற்காலத்தில் தண்டகாரணியம்(”தண்டணை அளிக்கப்படும் காடு”) என்றழைக்கப்பட்டது. இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இக்காட்டில் பேய்களும் இன்ன பிற கொடிய உயிரினங்களும் வாழ்ந்ததாவும், அதனால் முனிவர்கள் மட்டுமே இங்கு தங்கியிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. கரன், தூசணன், சூர்ப்பனகை ஆகியோர் இராமனை இங்கே சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

கி.மு. 600 ஆண்டளவில், இப்பகுதி அசாகா என்றழைக்கப்பட்டது. நாசிக் நகருக்கருகிலுள்ள பஞ்சவதி ஆற்றருகே சூர்ப்பனகையின் மூக்கை இலட்சுமணன் அறுத்ததாகக் கூறப்படுகிறது. (நாசிக் - சமற்கிருதத்தில் மூக்கு என்று பொருள்) ஆரியர்களின் வருகைக்கு முன் இங்கு வேறு மக்கள் வாழ்ந்தனரா என்று அறியமுடியவில்லை.

மேற்கத்திய சத்ரபதிகள் குசராத், சிந்து, மகாராட்டிரம், இராசசுத்தான் ஆகிய உள்ளடக்கிய பகுதிகளை ஆண்டனர் என்று நம்பப்படுகிறது. இவர்கள் உச்சயினியைக் கைப்பற்றினர். பேரரசர் அசோகர் மகாராட்டிரத்தையும் தன் ஆட்சிப் பகுதிக்குள் உட்படுத்தினார். சில ஆண்டுகளுக்குப் பின்னர், சதவாகனர்கள் ஆட்சியைப் பிடித்தனர். இவர்கள் கருநாடகத்தையும் ஆந்திராவையும் உள்ளடக்கி மகாராட்டிரத்தையும் ஆட்சி செய்தனர். மராத்தியரில் பெரும்பான்மையினர் இவர்கள் மரபைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது.

சாலிவாகனன் என்ற அரசன் இப்பேரரசை விரிவுபடுத்தினான். சாலிவாகன நாட்காட்டி இன்றும் இப்பகுதிகளில் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. மராத்தியின் முன்னைய பேச்சு வடிவம் இவர்கள் காலத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் இராசுடிரகூடர்களும் ஆட்சி செய்தனர். பின்னர் யாதவ குலத்தினர் மராத்தி மொழியை ஆட்சி மொழியாக்கி ஆண்டதாகவும் கூறப்படுகிறது. தில்லி சுல்தான்களும் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளனர்.

பதினேழாம் நூற்றாண்டில் பேரரசர் சிவாஜி மராத்தியப் பேரரசை நிறுவினார். வாழ்நாளில் பல போர்களில் போரிட்ட சிவாஜி 1680 ஆம் ஆண்டில் இறந்ததாக அறியப்படுகிறது. சிவாஜியின் ஆட்சியில் மகாராட்டிரத்தை இழந்த முகலாயர்கள் 1681 ஆம் ஆண்டு மீண்டும் கைப்பற்றினர். சிவாஜியின் மகன் சம்பாஜி சிறு போரின் பின் பேரரசராக முடிசூட்டப்பெற்றார். ஆயினும், 1689 ஆம் ஆண்டில், அவுரங்கசீப்பினால் தண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

பின்னர் ராசாராம் என்னும் இளவரசர் முடிசூட்டப்பட்டு தென்னிந்தியாவை நோக்கி போரிட்டார். மீண்டும் 1707 ஆம் ஆண்டு பேரரசி தாராபாய் போரிட்டு 27 ஆண்டுகளுக்குப் பின் வெற்றி பெற்றார் சிவாஜியின் பெயரன் சாகு, மராத்தியப் பேரரசை விரிவுபடுத்தினார். அவர் இறந்த பின் 1749 ஆம் ஆண்டில் பெசாவர்கள் ஆட்சியைப் பிடித்தனர். இதன் பின்னர் ஆட்சியிலமர்ந்த சிண்டே, போன்சுலே, ஓல்கர் ஆகியோர் இந்தியத் துணைக்கண்டத்தின் நடுப்பகுதி முழுவதையும் ஆண்டனர். புனே செல்வாக்கு மிக்க தலைநகராக விளங்கியது. பின்னர் அகமது சா அபுதலியின் வெற்றியால் மராத்தியப் பேரரசு சிதறி சிறு சிறு நாடுகளானது. 1947 ஆம் ஆண்டு வரை நீடித்த இவ்வரசுகள் சிண்டே என்பவரின் முயற்சியால் இந்திய ஒன்றியத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டு மகாராட்டிரம் என்றானது.

இலக்கியம்

[தொகு]

யாதவ அரசர்களின் ஆட்சிக் காலத்தில் மராத்தி மொழியே ஆட்சி மொழியாக விளங்கியது. யாதவ அரசனான சிங்கனா கொடை வழங்கிய பொருட்களைப் பற்றிய குறிப்புகள் கொல்காபூர்க் கோவிலில் உள்ளன. ஏமாத்திரி என்பவரின் எழுத்துகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. கொலாப மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டே மராத்திய மொழியின் பழங்காலக் கல்வெட்டாகும். கருநாட்டகத்தின் சிரவணபெலகொலாவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டில் சிற்பி மற்றும் அரசர் பற்றிய குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன.

பழங்காலத்திலிருந்தே மராத்தியர் இலக்கிய மரபைக் கொண்டிருந்ததாக அறியப்படுகிறது. தியானேசுவர் என்னும் முனிவர் இலக்கியத்தை மக்களிடம் பரவச் செய்தார். இவரது படைப்பான தியானேசுவரி சிறந்த இலக்கியம் ஆகும். நாமதேவர் என்னும் முனிவரும் மராத்திய இலக்கியத்தை பரவச் செய்தார். இவர் மராத்திய கீக்கிய இலக்கியங்களை உருவாக்கியவர். பதினேழாம் நூற்றாண்டின் முக்தேசுவரரும், சமர்த்த தாசும், பதினெட்டாம் நூற்றாண்டின் வாமன பண்டிதரும் ரகுனாத பண்டிதரும் குறிப்பிடத்தக்கவர்கள். 1817 ஆம் ஆண்டில் மராத்திய நூலொன்று ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டதாகவும், 1841 ஆம் ஆண்டில் மராத்திய நாளேடு துவங்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது. மராத்திய நாடகங்களும் இக்காலத்திலேயே சிறப்பாக அரங்கேறின. லோகமானிய திலகரும் தமது கேசரி என்ற இதழின் மூலம் இலக்கியப் பார்வைகளை வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்கால மராத்திய பாடல்கள் சோதிபா பூலே என்பவரால் தொடங்கியவை. பிந்தைய கவிஞர்களான கேசவசுதா, பாலகவி, கோவிந்தராசா ஆகியோர் ஆங்கிலேயே இலக்கியத்தை அடியொற்றி தங்கள் கவிதைகளை எழுதியதாக அறியப்படுகிறது. தற்காலத்தில், எழுத்தாளர்கள் சிறுவர் நூல்கள், சிறுகதைகள், புதினங்கள் என எழுதுகின்றனர். விஷ்னு சகாராம் காண்டேகர் எழுதிய யயதி என்ற நூல் ஞானபீட விருதைப் பெற்றுத் தந்தது. சியாம் மனோகர், விசுராம் பெடேகர் ஆகியோர் நன்கறியப்பட்ட எழுத்தாளர்கள் ஆவர்.

இசுலாமிய, கிறித்தவ நூல்களும் மராத்திய மொழியில் எழுதப்பட்டுள்ளன. சாகிர் சேக் என்பரின் மராத்திய முசுலீம் எழுத்தாளர் இயக்கம் இசுலாமிய இளைஞர்களிடையே மராத்திய மொழியைக் கொண்டு சேர்க்கிறது. வில்லியம் கரே என்பார் விவிலியத்தை மராத்தி மொழியில் எழுதியவர். கிறித்தவ இயக்கங்களும் அறிவியல் அகரமுதலிகள், இலக்கண நூல்களை உருவாக்கின.

சமயம்

[தொகு]

மராத்தி மொழி பேசும் மக்களில் பெரும்பான்மையினர் இந்துக்கள் ஆவர். விட்டலன் என்ற பெயரில் வணங்கப்படும் கண்ணனே பிரபலமான கடவுள் என்றாலும் சிவன், பார்வதி, வினாயகரையும் வெவ்வேறு பெயர்களிலும், வடிவங்களிலும் வழிபடுகின்றனர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், லோகமானிய திலகரால் துவங்கி வைக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி பிரபலமான பண்டிகையாகும். மராத்தி இந்துக்கள் அனைத்து சாதி முனிவர்களையும் வணங்குவர்.

சிறுபான்மையினர் இசுலாமிய, கிறித்தவ, ஜைன, பௌத்த சமயங்களைப் பின்பற்றுகின்றனர். பௌத்த மராத்திகள் அம்பேத்கரின் வழிநடந்து, அறுபது ஆண்டுகளுக்கு முன் பௌத்த மதத்தைத் தழுவியவர்கள். கிறித்தவர்கள் மூன்று சதவீதத்தினர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 13-ஆம் நூற்றாண்டில், போர்த்துகேய யேசு சபையின் மூலம், மகாராட்டிரத்தில் கிறித்தவம் நுழைந்தது. கிறித்தவர்கள் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள். மராத்தி இசுலாமியர்கள் சூபி வழியைப் பின்பற்றுபவர்கள் ஆவர். சூபி ஞானிகளின் கல்லறைகளுக்கு செல்வதை இவர்களின் மார்க்கக் கடமையாகக் கொண்டுள்ளனர். இந்துக்களும் அதிக அளவில் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

ஏறத்தாழ 3,000 பேர் யூத மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் பலர் இசுரேலுக்கு குடிபெயர்ந்தனர். குடிபெயர்வதற்குமுன் 90,000 பேர் இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இந்திய நாட்டிலேயே மகாராட்டிரா மாநிலத்தில்தான் அதிக ஜைனர்கள் வசிக்கின்றனர்.

ஜைன மதத்தின் பழைய கல்வெட்டு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது புனேவிற்கு அருகிலுள்ள பாலே கிராமத்தின் குகைகளில் கண்டெடுக்கப்பட்டது. நவகார் மந்திரத்தை உள்ளடக்கிய இது, ஜைன பிராகிருதத்தில் எழுதப்பட்டது.

மராத்தியில் எழுதப்பட்டதாக அறியப்படும் பழைய கல்வெட்டு, கருநாடக மாநிலத்தின் சிரவணபெலகொலாவில் கண்டெடுக்கப்பட்டது. பகுபாலி சிலையின் இடது காலுக்கு கீழே உள்ள இது 981 CE காலத்தைச் சேர்ந்தது.

மகாராட்டிரத்தை, இராஷ்டிரகுடர்கள், சிலகரர்கள் போன்ற பல ஜைன ஆட்சியாளர்கள் ஆண்டிருக்கின்றனர். இவர்களால் பல கோயில்கள், கோட்டைகள் கட்டப்பட்டிருக்கின்றன. பழங்காலத்தில் அதிக அளவிலான மராத்தியர்கள் ஜைனர்களாக வாழ்ந்தனர் எனக் கூறப்படுகிறது.

பெயரிடும் முறை

[தொகு]

மகாராட்டிரம், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பெயரிடும் முறை ஏறத்தாழ ஒன்றே. எடுத்துக்காட்டாக, பிரபல துடுப்பாட்டக்காரர் சுனில் மனோகர் கவாசுகர் என்பவரின் பெயரில், சுனில் என்பது அவரின் பெயர். மனோகர் என்பது அவரின் தந்தையின் பெயர். கவாசுகர் என்பது குடும்பப் பெயர்.

இதுபோன்றே, திருமணமான பெண்கள் தங்களின் பெயர்களுடன் கணவரின் பெயரையும், குடும்பப் பெயரையும் ஏற்றுக்கொள்வர். மகாராட்டிரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தந்தையின் தந்தை பெயரை சூட்டும் வழக்கமும் உள்ளது.

சிலர் ஆண்களை, ராவ் என்றோ சாகேப் என்றோ அழைப்பர். இது போன்றே பெண்களின் பெயர்களுக்குப் பின் பாய் என்றோ தாய் என்றோ கூறி அழைப்பர். இது பொது வழக்கெனினும், அலுவலகங்களில் பயன்படுத்துவதில்லை. சில குடும்பப் பெயர்கள் ’கர்’ என முடியும். உதாரணமாக, அம்பேத்கர், டெண்டுல���கர், அன்வேகர், திவேகர், கனித்கர் என்று அழைக்கப்படுவர். அவர்களின் சொந்த ஊர்களை நினைவில் கொள்வதற்காக இவ்வாறு பெயரிடுகின்றனர்.

தொழிலைக் குறிக்கும் விதமான பெயர்களும் இடப்படுவதுண்டு. குறிப்பிடத்தக்கவை பாட்டீல் (கிராமத் தலைவர்), தேஷ்முக் (சில கிராமங்களுக்குத் தலைவர்), இனம்தர், தனேகர், குல்கர்னி (கிராம கணக்கர்), ஜோஷி ( பூசாரி, ஜோசியர்). மராத்த ஆட்சியாளர்களின் பெயர்களில் குறிப்பிடத்தக்கவை போஸ்லே, ஷிண்டே, கைக்வத், பவார் ஆகியவை. இவை ஆட்சியாளர்களின் பெயர்கள் மட்டுமின்றி பிற சாதியின் பெயர்களிலும் காணப்படுகின்றன.

பண்டிகைகள்

[தொகு]

மராத்தியரில் பெரும்பான்மையினர் இந்து சமயத்தவராகவும், பௌத்த சமயத்தவராகவும் வாழ்கின்றனர். ஆகவே, இந்துக்களின் பண்டிகைகளும் பௌத்த பண்டிகைகளும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. மராத்தியர் இயற்கை வழிபாடும் செய்கின்றனர்.

தீபாவளி, ஹோலி, மகர சங்கிராந்தி, கோகுலாஷ்டமி, மகா சிவராத்திரி ஆகிய பண்டிகைகளை மராத்திய இந்துக்கள் கொண்டாடுகின்றனர். அம்பேத்கர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா ஆகிய பண்டிகைகளை பௌத்த மராத்தியர்கள் கொண்டாடுகின்றனர். இவை தவிர, நாகங்கள், இயற்கை வழிபாடுகள் செய்வோரும் உள்ளனர். சமுதாயத்தினர் கூடுவதற்காக, கிராம திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

உணவு

[தொகு]

மராத்தியரின் உணவுப் பழக்கம் வேறுபாடுகளைக் கொண்டது. சமூகத்திற்கேற்ப உணவுப் பழக்கம் வேறுபாடுகளைக் கொண்டது. பெரும்பான்மை மராத்தியர் மாமிசம், முட்டை ஆகியவற்றை உண்பவர்களாய் இருந்தாலும், பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பால் மற்றும் சைவ உணவுகளையே உண்கின்றனர். தக்காணப் பீடபூமியில் கோதுமை போன்ற உணவை உண்கின்றனர். கொங்கன் பகுதியில் வாழ்பவர்கள் பெரும்பாலும் உணவில் தேங்காய் சேர்த்துக்கொள்கின்றனர். இந்துக்கள் சிலர் விரதம் இருப்பதும் உண்டு. விரதமிருக்கும் நாட்களில் அரிசி, கோதுமையால் செய்த உணவுகள் தவிர்க்கப்படும். இருப்பினும், பால், மற்றும் பழங்களை உண்பர். பஜ்ஜி, வட பாவவ், பாவ் பாஜி, மிசல் பாவ் ஆகியவை பிரபலமான துரித உணவுகளாகும். கிச்சடி, உப்புமா, பானிபூரி ஆகிய பாரம்பரிய உணவுகளும் பிரபலமானவை. குலாப் ஜாமூன், மோதகம், பாசுந்தி, கீர் ஆகியவை உணவின் முடிவில் வழங்கப்படுகின்றன.

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Ethnologue report for language code:mar
"https://ta.wikipedia.org/w/index.php?title=மராத்தியர்&oldid=3178815" இலிருந்து மீள்விக்கப்பட்டது