இந்தோனேசிய மொழி

இந்தோனேசியாவில் பேசப்படும் மொழி

இந்தோனேசிய மொழி (ஆங்கிலம்: Indonesian language) இந்தோனேசியாவின் அதிகாரப்பூர்வ மொழி. பல நூற்றாண்டுகளாக இந்தோனேசியத் தீவுகளுக்கு இடையே இடைத் தரகர் மொழியாகச் செயற்பட்டு வந்த இந்தோனேசியாவின் ரியாவு மாநிலத்தின் பேச்சு வழக்கினைச் சார்ந்ததாகும்.

இந்தோனேசிய மொழி
Bahasa Indonesia
بهاس ايندونيسيا
பகாசா இந்தோனேசியா
நாடு(கள்)இந்தோனேசியா, கிழக்குத் திமோர்
பிராந்தியம்தென்கிழக்கு ஆசியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
43 மில்லியன்  (2010 கணக்கெடுப்பு)[1]
இரண்டாம் மொழியாகப் பேசுவோர்: 156 மில்லியன் (2010 கணக்கெடுப்பு)[1]
இலத்தீன் அரிச்சுவடி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
இந்தோனேசியா
மொழி கட்டுப்பாடுபுசத் பகாசா
மொழிக் குறியீடுகள்
ISO 639-1id
ISO 639-2ind
ISO 639-3ind
மொழிக் குறிப்புindo1316[2]
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.
இந்தோனேசியாவில் போக்குவரத்துக் குறியீடு.

இந்தோனேசியா, கிழக்கு திமோர் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. மலாய் மொழியைச் சார்ந்தது. 1945-இல் இந்தோனேசியா சுதந்திரம் பெற்றபோது வரையறுக்கப்பட்டுத் தனிமொழியானது. கிட்டத்தட்ட 100% இந்தோனேசியர்களால் சரளமாகப் பேசப்படக் கூடிய இம்மொழி, உலகில் அதிகளவு மக்களால் பேசப்படும் மொழிகளுள் ஒன்றாக விளங்குகிறது.

பொது

தொகு

இந்தோனேசிய மொழியில் சாவக மொழியின் செல்வாக்கு மிகுந்து இருப்பதுடன் அரபு, சமசுகிருதம், தமிழ், சிங்களம், ஆங்கிலம், நெதர்லாந்து மொழி, சீனம் போன்றவற்றில் இருந்து பெறப்பட்ட ஏராளமான வேற்று மொழிச் சொற்கள் காணப்படுகின்றன.

சகார்த்தாவிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் பேசப்படும் மொழி வழக்கில் பத்தாவி மொழியின் தாக்கம் அதிகம். இதன் இலக்கணவமைப்பு பெரும்பாலும் அரபு மொழியின் இலக்கணவமைப்பை ஒத்திருப்பதையும் காண முடிகின்றது. எனினும், இந்தோனேசிய மொழியில் பால், எண், இடம், காலம், ஒருமை-பன்மை போன்ற வேறுபாடுகள் காணப்படுவதில்லை.

வரிவடிவம்

தொகு

அவுத்திரனீசிய மொழிகளில் ஒன்றாகிய இந்தோனேசிய மொழி மலாய மொழியின் தரப்படுத்தப்பட்ட ஒரு வடிவமாகும். இந்தோனேசியாவின் அலுவல் முறை மொழியாகிய இது சிங்கப்பூர், மலேசியா, கிழக்குத் திமோர் போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது.

இந்தோனேசியாவில் சாவக மொழியைப் பேசுவோரே பெருமளவிற் காணப்பட்ட போதிலும் பல்லாயிரக் கணக்கான தீவுகளிலும் பல நூற்றுக் கணக்கான மொழிகளும் பல்லாயிரக் கணக்கான வட்டார வழக்குகளும் காணப்படுகின்றன.

முன்னர் இம்மொழி அரபு வரிவடிவத்தைச் சேர்ந்த சாவி எழுத்து முறையில்[3] எழுதப்பட்ட போதிலும் இருபதாம் நூற்றாண்டில் இலத்தீன் எழுத்துக்களில் எழுதப்படத் தொடங்கியது. 1972 ஆம் ஆண்டில் இதன் பழைய எழுத்தமைப்பு மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது[4]. திருத்தப்பட்ட எழுத்தமைப்புக்கள் பின்வருமாறு:

சர்வதேச
ஒலிக்குறிப்பு
பழைய
எழுத்தமைப்பு
புதிய
எழுத்தமைப்பு
நெருங்கிய
தமிழ் ஓசை
/u/ oe u
// tj c ச்ச
// dj j
/j/ j y
/ɲ/ nj ny
/ʃ/ sj sy இச
/x/ ch kh

ஒலி அரிச்சுவடி

தொகு

உயிர்

a e i o u ai au oi
ஒய்

உயிர்மெய்

b c d f g h j k kh l m n ny ng p q r s sy t v w x y z
1 2 ஃப 3 4 ஃவ5 க்ஸ ஜ்ஜ

குறிப்புகள்

1. தும்பு என்பதில் வரும் பகரம் போன்று ஒலிக்கும்.
2. மொழியில் பெரும்பாலான இடங்களில் அச்சம் என்பதில் வரும் சகரம் போன்று ஒலிக்கும்.
3. தங்கம் என்பதில் வரும் ககரம் போன்று ஒலிக்கும்.
4. தாகம் என்பதில் வரும் ககரம் போன்று ஒலிக்கும். பெரும்பாலும் அரபு மொழிச் சொற்களில் பயன்படுத்தப்படுகிறது.
5. F எழுத்தின் ஓசையை நெருங்கி ஒலிக்கும்[5].

இவை தவிர sh என்பது அரபு மொழியின் ஸாத் எனும் ஒலியையும் th என்பது அரபு மொழியின் தா (இந்தோனேசியாவிலும் மலேசியாவிலும் தோ எனப்படுகின்றது) எனும் ஒலியையும் குறிக்கப் பயன்படுகின்றன. ஆயினும் அஸ்ஹன்தி (Ashanti) என்பது போன்ற சில பெயர்களில் இவை சேர்ந்து வரும் போது இவற்றைப் பிரித்து வாசிக்கப்படுவதுண்டு.

இலத்தீன் எழத்தாகிய X என்பது இந்தோனேசிய மொழிச் சொற்களில் பயன்படுத்தப்படுவதில்லை. இதற்குப் பதிலாக KS ஆகிய இரு எழுத்துக்களுமே பயன்படுத்தப்படுகின்றன. முன்னர் வாடகை வண்டியை Taxi எனக் குறிக்கப்பட்ட போதிலும், தற்காலத்தில் Taksi (தக்ஸி) என்றே எழுதப்படுகிறது.

ஒலியமைப்பு

தொகு

இந்தோனேசிய மொழியில் குறில், நெடில் வேறுபாடுகள் காணப்படுவதில்லை. ஆயினும் மொழியும் போது வெவ்வேறு இடங்களில் குறிலாகவும் நெடிலாகவும் மொழியப்படுவதுண்டு. பொதுவாக மொழியின் தொடக்கத்தில் வரும் உயிர்மெய் ஓசைகள் குறிலாகவும், நெடிலாக ஒலித்த பின் தொடரும் வேறுபட்ட உயிர் மெய் குறிலாகவும் ஒலிப்பதுண்டு.

ம(ச்)சம் மா(ச்)சம் (macam-macam), ஜலான் ஜாலன் (jalan-jalan) என்பது போன்று ஒரே சொல் இரட்டித்து வரும் போது முதலாவதில் குறிலாகவும் பின்னர் நெடிலாகவும் மொழியப்படும் இடங்களும் காணப்படுகின்றன. ஆயினும் இதற்குப் பொதுவான விதி என்று எதனையும் கூறுவது கடினம்.

தமிழில் காணப்படும் சில ஓசைகள் இந்தோனேசிய மொழியில் காணப்படுவதில்லை. சட்டம் என்பதில் வருவது போன்ற டகர ஒலியோ, வந்தான் என்பதில் வருவது போன்ற தகர ஒலியோ இந்தோனேசிய மொழியில் காணப்படுவதில்லை.

அடம் என்பதில் வருவது போன்ற டகர ஒலி D எனும் எழுத்தினாலும், தரம் என்பதில் வருவது போன்ற தகர ஒலி T எனும் எழுத்தினாலும் குறிக்கப்படுகின்றன[6]. எனவே, bukit (குன்று) என்பதை புக்கிட் என்று ஒலிபெயர்ப்பது போன்ற ஒலிபெயர்ப்புக்கள் பிழையாகி விடுகின்றன. அது புக்கித் என்று ஒலிபெயர்க்கப்பட்டாக வேண்டும்.

இந்தோனேசிய மொழியில் ஒரே எழுத்து இரு வேறு விதமாக மொழியப்படுவதும் இரு எழுத்துக்கள் ஒருங்கமைய மொழியப்படுவதுமுண்டு. அடிப்படையில் இந்தோனேசிய மொழியில் காணப்படாத F, Z போன்ற எழுத்துக்கள் வேற்றுமொழிகளிலிருந்து பெறப்பட்ட சொற்களை எழுதப் பயன்படுகின்ற. ஆயினும் இவை மொழியப்படும் விதம் வேறுபட்டுக் காணப்படும். எடுத்துக் காட்டுக்களாவன:

இந்தோனேசியம் தமிழ்
ஒலிபெயர்ப்பு
பொருள்
maaf மஅஃப் மன்னியுங்கள்
azan அஜான் தொழுகை அழைப்பு

முற்காலத்தில் V எனும் எழுத்து தமிழின் வகரத்தைப் போன்றே மொழியப்பட்டு வந்துள்ளமை பண்டைய மலாய ஆக்கங்களிலிருந்து தெளிவாகின்றது. பண்டைய கல்வெட்டுக்கள், சுவடிகள் போன்றவற்றை வாசிக்கும் போது இம்முறையே பின்பற்றப்படுகிறது. ஆயினும் வகரம் தற்காலத்தில் W எனும் எழுத்தால் எழுதப்படுகின்ற அதே வேளை, V எனும் எழுத்து F எனும் எழுத்தின் ஓசையை நெருங்கி ஒலிக்கிறது.

E எனும் எழுத்து வருமிடங்களில் எகரமாக மொழியப்படுவதும் அகரத்துக்கும் எகரத்துக்கும் இடைப்பட்டதாக மொழியப்படுவதும் என இரு விதங்களுண்டு. தமிழில் அகரமாக எழுதப்படும் அத்தகைய இடங்கள் இம்மொழியை அறியாத தமிழர்களுக்கு விளங்கிக் கொள்வதில் குழப்பத்தையேற்படுத்தலாம்.

Nasi gudeg என்பதை நாஸி குடெக் என்று கூறுவதில்லை. அது நாஸி குடக் எனப்படுகிறது. Emas, enam, enak போன்ற சொற்களில் உள்ள E என்பது அகரத்துக்கும் எகரத்துக்கும் அஃகானுக்கும் ஒரு முக்கோணமிட்டு நடுவில் ஒலிப்பது போன்று தோன்றும். இதையும் வேறு சில சொற்களின் ஒலியமைப்பையும் பழக்கத்திலேயே புரிந்து கொள்ள வேண்டும்.

எடுத்துக் காட்டாக, tahu என்ற சொல்லில் உள்ள h என்ற எழுத்தைக் குறுக்கி தாஉ என்பது போன்று மொழிந்தால் அறி/அறிவேன் என்றவாறு பொருளேற்படினும், அதிலுள்ள h எழுத்தை அழுத்தி தாகு என்று மொழிந்தால் அது ஒரு உணவுப் பண்டத்தின் பெயராகும்[7].

இந்தோனேசிய மொழியில் சாவக மொழியைப் போன்றே பெரும்பாலான சொற்களின் இறுதியில் வரும் K எனும் எழுத்து மொழியப்படாதிருப்பதும் சில வேளைகளில் கால் மாத்திரையளவு மொழியப்படுவதுமுண்டு. அத்தகைய சொற்கள் ஆய்த எழுத்து இறுதியில் வருவது போன்றே பெரும்பாலும் மொழியப்படுகின்றன[3].

எடுத்துக் காட்டாக batuk (பத்துஃ), demak (டெமாஃ), perak (பெராஃ) போன்ற சொற்களைக் குறிக்கலாம். பத்துக் அல்லது பத்துகு என்றவாறோ, டெமாக் அல்லது டெமாகு அல்லது தெமாகு என்றவாறோ, பெராக், பெராகு, பேராக் என்றவாறோ மொழியும் போது இத்தகைய சொற்களின் பொருள் மாறுபடலாம். இவ்வாறான ஒலிபெயர்ப்பு “வட்டுக் கோட்டைக்கு வழிகேட்டால் துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு” என்ற கதையைப் போன்ற நிகழ்வுகளுக்கு வழிவகுக்கலாம்.

ஒலிபெயர்ப்பு

தொகு

இந்தோனேசிய மொழியில் சில ஓசைகள் தமிழுக்கு நெருங்கி ஒலிக்கின்ற போதிலும் அவற்றுட் சில இந்தோனேசியச் சூழலுக்குப் பழகாத வேற்று மொழிக்காரால் தெளிவாகப் புரிந்து கொள்ளப்படுவது கடினமாகும். அதனால், அது வேற்று மொழிக்காரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் வாய்ப்புக்கள் அதிகம்.

இந்தோனேசிய மொழி, மலேசிய மொழி என்பன ஒரே மொழியின் இரு வேறு தரப்படுத்தல்களே. ஆயினும் இவற்றின் ஜாவி வரிவடிவம், இலத்தீன் வரிவடிவம் என்பன எங்கும் ஒத்திருப்பதுடன் ஒலிப்பு முறையும் ஒன்றாவே இருப்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இலத்தீன் எழுத்துக்களால் எழுதப்படும் சொற்கள் ஒரே விதமாகவே மொழியப்படுகின்றன.

இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற நாடுகள் பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த காலத்தில் இலங்கைத் தமிழர்கள் பலர் அன்றைய மலாயாவுக்கு அரசாங்கப் பணிகளுக்காகச் சென்றிருந்தனர். ஆங்கில மொழிக் கல்வி பெற்றிருந்த அவர்களே மலாய மொழிப் பெயர்களைத் தமிழில் எழுதத் தொடங்கியிருந்தனர்.

எனவே அவர்கள் ஆங்கில மொழியில் ஒலிப்பதே போன்று மலாய மொழிப் பெயர்களை எழுதி விட்டனர். இதன் காரணமாக இன்று வரை சில சொற்கள் தமிழில் மலாய மூலத்துக்கு மாற்றமாகவே புழக்கத்திலுள்ளன. எடுத்துக் காட்டுக்கள் சில பின்வருமாறு:

பழைய
முறை
புதிய
முறை
தவறான
ஒலிபெயர்ப்பு
சரியான
ஒலிபெயர்ப்பு
kampoeng kampung கம்போங் கம்புங்
tanjoeng tanjung தஞ்சோங் தஞ்சுங்
soengai sungai சுங்கை சுஙை
Manjoeng Manjung மஞ்சோங் மஞ்சுங்

இத்தகைய தவறான ஒலிபெயர்ப்புக்கு மேலும் பல உதாரணங்களைக் காட்டலாம். மலாய்சியா (Malaysia) என்பது மலேசியா என்றெழுதப்படுவதும், மலாயா (Malaya) என்பது மலேயா என்றெழுதப்படுவதும், மலாயு (Melayu) என்பது மலே (Malay) என்றெழுதப்படுவதும், குவாளா ளும்பூர் (Kuala Lumpur) என்பது கோலாலம்பூர் என்றெழுதப்படுவதும் இத்தகைய ஆங்கில வழி ஒலிபெயர்ப்பின் விளைவுகளே.

உண்ணாட்டு மொழிகளின் தாக்கம்

தொகு

இந்தோனேசியாவில் காணப்படும் பல நூற்றுக் கணக்கான மொழிகளையும் பல்லாயிரக் கணக்கான பண்பாடுகளையும் கொண்டோர் இந்தோனேசிய மொழி என்ற பெயரில் தரப்படுத்தப்பட்ட ஒரு மொழியினூடாகவே இணைக்கப்படுகின்றனர். பல்வேறு மொழிக்காரரும் தத்தம் மொழியின் சொற்களைப் புகுத்திப் பேசுவதுமுண்டு.

அவரவரது தாய்மொழிக்கு ஏற்றவாறு இந்தோனேசிய மொழிச் சொற்கள் மொழியப்படுவதுமுண்டு. இதன் காரணமாக சாவகம், சுண்டா, மதுரா, பாலி, பத்தா, படாங், அச்சே, கொரொன்தாளோ, மகசார், பஞ்சார் போன்ற பல்வேறு மொழிகளினதும் சொற்கள் இந்தோனேசிய மொழியை வளப்படுத்துகின்றன.

ஆயினும் ஒரே சொல் இரு வேறு மொழிகளில் இரு வேறு பொருள் கொடுப்பதுண்டு. எடுத்துக் காட்டாக, இந்தோனேசிய மொழியில் பீரு என்றால் நீல நிறம். மதுரா மொழியில் பீரு என்றால் பச்சை நிறம்.

இந்தோனேசியாவில் சொற்றொடர்களைச் சுருக்கி மொழியும் வழக்கம் காணப்படுகிறது. பெயர்களையும் அவ்வாறே சுருக்கி மொழிவதுண்டு. எடுத்துக் காட்டாக, நாஸி கோரெங் (nasi goreng) என்பதை நஸ்கோர் (nasgor) என்று மொழிவதும் சுகர்னோ ஹத்தா (Soekarno-Hatta) என்பதை சுத்தா (Soetta) என்றும் மொழிவதும் சர்வ சாதாரணம்.

ஆயினும் இத்தகைய சுருக்கல் இடத்துக்கிடம் வேறுபட்ட விதத்தில் புரிந்து கொள்ளப்படுவதுமுண்டு. எடுத்துக் காட்டாக, ஜகார்த்தாவில் பனிக்கட்டியிட்ட இனிப்பான தேனீர் என்பதை எஸ் தேஹ் மானிஸ் (es teh manis) என்று கூறப்படுகிறது.

இதுவே மேடானில் குளிர்ந்த இனிப்பான தேனீர் என்றவாறு, தேஹ் மானிஸ் டிஙின் (teh manis dingin) என்பதைச் சுருக்கி தேஹ் மாண்டி என்றோ (teh mandi) வெறுமனே மாண்டி (mandi) என்றோ கூறப்படுகிறது. உண்மையிலேயே மாண்டி என்றால் குளித்தல் என்று பொருள். இத்தகைய சொற் பயன்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதுண்டு.

உசாத்துணைகள்

தொகு
  1. 1.0 1.1 Badan Pusat Statistik (28 March 2013). "Penduduk Indonesia Hasil Sensus Penduduk 2010 (Result of Indonesia Population Census 2010)". pp. 421, 427. பன்னாட்டுத் தர தொடர் எண் 2302-8513. Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Indonesian". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. 3.0 3.1 http://gimonca.com/sejarah/pronounce.html
  4. http://www.omniglot.com/writing/indonesian.htm
  5. https://www.youtube.com/watch?v=FAoDPBn1Wm4
  6. http://forvo.com/languages/ind/
  7. http://www.indonesianpod101.com/indonesian-pronunciation/

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Indonesian language
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
மொழி பெயர்ப்பிகள்
அகராதி மென்பொருள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோனேசிய_மொழி&oldid=4176246" இலிருந்து மீள்விக்கப்பட்டது