உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லெம் ரோண்ட்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வில்ஹெம் ரொண்ட்ஜென் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வில்லெம் ரோண்ட்கன்
Wilhelm Röntgen
வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன்
வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன்
பிறப்பு (1845-03-27)மார்ச்சு 27, 1845
லென்னெப், புரூசியா
இறப்புபெப்ரவரி 10, 1923(1923-02-10) (அகவை 77)
மியூனிச், ஜெர்மனி
தேசியம் செருமனி
துறைஇயற்பியலாளர்
நிறுவனம்இசிட்ராசுபேர்கு பல்கலைக்கழகம்
ஓஃகெனைம்
கியீசன் பல்கலைக்கழகம்]]
வூர்ட்ஃசுபேர்க் பல்கலைக்கழகம்
மியூனிக் பல்கலைக்கழகம்
Alma materETH சூரிக்
சூரிக் பல்கலைக்கழகம்
துறை ஆலோசகர்ஆகஸ்ட் குண்ட்
முக்கிய மாணவர்எர்மன் மார்ச்,
ஆப்ராம் இயோஃப்
அறியப்பட்டதுஊடுகதிர்கள்
பரிசுகள்1901 இல் இயற்பியலில் நோபல் பரிசு
ரோண்ட்கனால் எடுக்கப்பட்ட ஆல்பேர்ட் ஃவான் கோல்லிக்கர் என்பவரின் கையின் ஊடுகதிர் அலைப் படிமம்

வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன் (Wilhelm Conrad Röntgen, இடாய்ச்சு ஒலிப்பு: [ˈvɪlhɛlm ˈʁœnt

iɡən];Wilhelm Conrad Röntgen, மார்ச் 27, 1845பெப்ரவரி 10, 1923) என்பவர் ஜெர்மனியைச் சேர்ந்த வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழக இயற்பியலாளர் ஆவார். இவர் நவம்பர் 8, 1895 இல், மின்காந்தக் கதிர்வீச்சு அலைத்தொடர் வரிசையில் ஊடுகதிர் (X-கதிர்) என்று இன்று அழைக்கப்படும் அலைகள் பகுதியைக் கண்டுபிடித்தார். இன்று இவை ஊடுகதிர் அலைகள், X கதிர்கள், புதிர்க்கதிர்கள், ரோண்ட்கன் கதிர்கள் என்று பலவிதமாக அழைக்கப்படுகின்றன. இக்கண்டுபிடிப்பிற்காக இவருக்கு 1901 இல் இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

வில்லெம் ரோண்ட்கன் மார்ச் 27, 1845 இல் ஜெர்மனி, பவேரியா மாகாணத்தில், லென்னெப் என்ற ஊரில் ஒரு துணி தயாரிக்கும் வணிகரும் தொழிலதிபருமான பிரீட்ரிக் கான்ராட் ரோண்ட்கன் என்பவருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். இவரது தாயார் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த சார்லொட் கொன்சிட்டாசு ஃபுரோவெயின் என்பவராவார். 1848 மார்ச்சு மாத்த்தில் வியாபார நிமித்தம் நெதர்லாந்தின் அப்பெல்டூர்ன் நகருக்கு குடி பெயர்ந்தனர். வில்லெம் அப்பெல்டூர்னில் ஒரு தனியார் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் 1861 முதல் 1863 வரை உட்ரெக்ட்டு தொழில்நுட்பக் கல்லுரியில் உயர் கல்வியையும் பயின்றார். பள்ளி ஆசிரியர் ஒருவரின் படத்தை அவருக்கு மரியாதை இல்லாதவாறு, இவருடன் பயின்ற மாணவ்ர் ஒருவர் வரைந்தார் என்றும், அவர் யார் என்று இவர் அடையாளம் காட்ட மறுத்தார் என்று இவரைக் கல்லுரியில் இருந்து வெளியேற்றினார்கள். பிறகு இவரால், பிற டச்சு சிம்னாசியம் என்னும் பள்ளிகள் எதிலும் சேர இயலவில்லை[1]. 1865 இல், சூரிக்கில் உள்ள ஃபெடரல் பொலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் பயின்றார். 1869 இல் சூரிக் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

1872 சூலை 7 ஆம் நாளில் அன்னா பேர்த்தா லூடுவிகு (1872 - 1919) என்பவரை மணந்தார். இவர்களுக்குப் பிள்ளைகள் இல்லாததால் அன்னாவின் சகோதரர் மகளான யோசபீன் பேர்த்தா லூடுவிகு என்பவரைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

பணி

[தொகு]

1874 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட இயற்பியல் துறையில் இராபர்ட் குண்ட் அவர்களுடன் பணியில் அமர்ந்தார். 1875-ல் வூர்ட்டென்பர்கு, ஓகெனைம் பல்கலைக்கழகத்திலும், 1876-ல் ஸ்ட்ராஸ்போர்க் பல்கலைக்கழகத்திலும், 1879 முதல் 1885 வரை செருமானியிலுள்ள கெயிசன் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய பின்னர் 1888-ல் வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழத்திலும் இயற்பியல் துறைத் தலைவராக இருந்தார். 1900 இல் மியூனிக் பல்கலைக்கழகத்தில் இணைந்து இறுதி வரையில் அங்கு இயற்பியல் துறைத் தலைவராக இருந்தார்.

ஆய்வுப்பணி

[தொகு]

பல ஆய்வகங்களிலும் அழுத்தம் குறைந்த வளிமங்களில் எவ்வாறு மின்னிறக்கம் நிகழ்கிறது என ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தன. அவரும் இவ்வாய்வில் தன்னை இணைத்துக் கொண்டார். 1895 ஆண்டு வெற்றிட குழாய் உபகரணங்களின் பல்வேறு வெளி விளைவுகளை ஆய்வு செய்துகொண்டிருக்கும் போது உருவாகும் எதிர்முனை கதிர்கள் அருகே உள்ள பேரியம் பிளாடினோசயனைடு பூசப்பட்ட அட்டையானது ஒளிர்வதை கண்டார். அதைத் தொடர்ந்து அவர் இருட்டு அறையில் மேலும் சில சோதனைகளை செய்து பார்த்தபோது இந்த ஒளிர்தலுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு வகை கதிர்களே காரணம் என்று அறிந்தார். எனினும் அதன் பண்புகள் தெரியாததால் அதற்கு எக்சு கதிர்கள் என்று பெயரிட்டார். பின்னர் அப்பெயரே நிலைத்துவிட்டது. இதை அவர் 1895 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று கண்டறிந்தார். அதற்கு இரண்டு வாரம் கழித்து தனது மனைவியின் கையை முதன்முதலின் ஊடுகதிர் படமெடுத்தார்.

ரோண்ட்கென் மூலக் கட்டுரையான ஒரு புது வகை கதிர்கள் என்ற தலைப்பில் 28 டிசம்பர் 1895 அன்று வெளியிட்டார். 5 சனவரி 1896 இல் ஒரு ஆஸ்திரிய பத்திரிகை ரோண்ட்ஜென் புதிய வகை கதிர்வீச்சு கதிர்களை கண்டறிந்ததை வெளியிட்டது. அவர் 1895 முதல் 1897 வரை எக்ஸ் கதிர்கள் பற்றி மூன்று ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். இன்று ரோண்ட்ஜென் கதிர்வீச்சு மருத்துவ சோதனையின் தந்தை எனப்படுகிறார்

ரோண்ட்கென் அவரது கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமைகள் கோரியதில்லை மேலும் அவருக்கு நோபல் பரிசு மூலம் கிடைத்த பணத்தை வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக அளித்தார். முதல் உலகப் போரின் போது ஏற்பட்ட வறுமை காரணமாக ரோண்ட்கென் முனிச் அருகே உள்ள வெய்தீம் என்ற கிராமத்தில் தன் இறுதி ஆண்டுகளை கழித்தார். ரோண்ட்கென் 1923 ஆண்டு பிப்ரவரி 10 அன்று குடல் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அவரின் இறப்பிற்கு பின்னர் அவரது விருப்பத்திற்கு ஏற்ப அவரது தனிப்பட்ட மற்றும் அனைத்து அறிவியல் உபகரணங்களும் அழிக்கப்பட்டன.

விருதுகள்

[தொகு]

இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு இவருக்கு 1901 இல் வழங்கப்பட்டது. இப்பணப்பரிசு முழுவதையும் அவர் தனது பல்கலைக்கழகத்துக்கே வழங்கி விட்டார். தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமம் பெற அவர் மறுத்து விட்டார்.

  • ரம்ஃபோர்ட் விருது (1896)
  • மட்டூச்சி விருது (Matteucci Medal) (1896)

நினைவு சின்னங்கள்

[தொகு]

இன்று டுசெல்டார்ஃப் நகருக்கு கிழக்கே 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரெம்ஸ்கிட்-லென்நேப்ராண்ட்கென் பகுதியில் அவர் பிறந்த வீட்டில் டச்சு ரோண்ட்கென் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

பல மொழிகளில் ரோண்ட்கெனின் பெயர் கதிரியக்க சிகிச்சை மற்றும் அதன் தயாரிப்புகளை குறிக்க "எக்ஸ்ரே" என்ற பெயருக்கு பதில் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துகாட்டாக சப்பானிய மொழியில் "ராண்டோகென்", லித்துவேனிய மொழியில் "ராண்ட்கெனோ", செர்பிய, குரோவேசிய மற்றும் ஈப்ருவில் "ரெண்ட்கென்", மற்றும் துருக்கிய "ரோண்ட்கென்" ஆகியவாறு குறிக்கபடுகிறது.

2004 நவம்பரில் ரோண்ட்கனியம்[2] தனிமத்துக்கு இவரது பெயர் வைக்கப்பட்டது.

படிமங்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Friedman, Meyer (16 November 1998). Medicine's 10 Greatest Discoveries. New Haven, CT: Yale University Press. p. 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0300075987. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  2. ஒலிப்பு: /rʌntˈɡɛniəm/ runt-gen-ee-əm

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லெம்_ரோண்ட்கன்&oldid=3663001" இலிருந்து மீள்விக்கப்பட்டது