உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர். முத்துசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். முத்துசாமி
பிறப்புஜனவரி 5, 1926
நாகர்கோவில், தமிழ்நாடு
இறப்புசூன் 27, 1988(1988-06-27) (அகவை 62)
கொழும்பு, இலங்கை
பணிஇசையமைப்பாளர்
அறியப்படுவதுசிங்களத் திரப்பட இசையமைப்பாளர்
பெற்றோர்ராமையா பாகவதர்
வாழ்க்கைத்
துணை
நீலியா பெரேரா
பிள்ளைகள்மோகன்ராஜ், சித்துராங்கி, பிரசன்னவதனி, கீர்த்திகா

ஆர். முத்துசாமி (R. Muthusamy, சனவரி 5, 1926 - சூன் 27, 1988) ஈழத்து இசையமைப்பாளர், பாடகர். 225 தமிழ் மற்றும் சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.[1] இந்தப் படங்களில் இடம்பெற்ற சில பாடல்கள் இசைத்தட்டு விற்பனையில் சாதனை படைத்துள்ளன. திரைப்பட இசையில் மட்டுமின்றி கருநாடக இசையிலும் தேர்ச்சி பெற்றவர்.[2]

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

ராமையா ஆசாரி முத்துசாமி என்ற இயற்பெயர் கொண்ட ஆர் முத்துசாமி தமிழ்நாட்டில், நாகர்கோவில் என்ற ஊரில் ராமையா பாகவதர் என்பவருக்குப் பிறந்தார். தந்தை ஒரு இசையமைப்பாளர்.[2]

சிறு வயதிலேயே முத்துசாமி இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தை அவருக்கு குட்டி வயலின் ஒன்றை மகனுக்கு வாங்கிக் கொடுத்தார். 10 வயதாகும் போது வயலினில் ஓரளவு தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் மேலும் பயிற்சி பெற்று சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் வயலின் வாசிக்க சந்தர்ப்பங்கள் கிடைத்தன.[2]

திரைப்படங்களில்

[தொகு]

முதலாவது சிங்களத் திரைப்படம் ‘கடவுனு பொறந்துவ’ 1947, சனவரி 21 ஆம் திகதி இலங்கையில் வெளியிடப்பட்டது. இதன் இசையமைப்பு சென்னையிலேயே இடம்பெற்றது.[2] இப்படத்தின் இசையமைப்பாளர் ஆர். நாராயண ஐயர் முத்துசாமியை தனது உதவியாளராக ஆக்கிக்கொண்டார்.[1] இதன் தயாரிப்பாளரான எஸ். எம். நாயகம் இலங்கைக்கு வருமாறு அவரை அழைத்தார். அந்த அழைப்பை ஏற்று இலங்கைக்கு வந்த முத்துசாமி 1952 அக்டோபரில் இலங்கை வானொலியில் சேர்ந்து கொண்டார். அங்கு டி. எஸ். மணிபாகவதரின் இசைக்குழுவில் வயலின் இசைக்கலைஞராகப் பணியாற்றினார்.[2] எஸ். எம். நாயகம் கொழும்பின் புறநகரான கந்தானையில் 1953 இல் சுந்தர முருகன் நவகலா சவுன்ட் ஸ்டூடியோ (எஸ். பி. எம். ஸ்டூடியோ) என்ற பெயரில் திரைப்படக் கலையகம் ஒன்றை ஆரம்பித்து அதன் இசைப் பிரிவுக்கு முத்துசாமியைப் பொறுப்பாளர் ஆக்கினார்.[2]

இதனையடுத்து 1953 இல் கே. குணரத்தினம் தயாரித்த ‘பிரேம தரங்கய’ படத்தின் மூலம் தனது 27வது வயதில் முத்துசாமி முதல் முதலாக இசையமைப்பாளரானார்.[1] அப்படத்தின் சிறப்பாக இசையமைத்ததற்காக தென்னிந்திய ஊடகவியலாளர்கள் சங்கம் அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வழங்கியது.[2]

இதனையடுத்து ‘புதும லேலி’ (1953) ‘அஹங்கார ஸ்திரீய’, ‘மாதலங்’, ‘ஹித்த ஹொத்த மினிஹெக்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து சிங்கள மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.[2]

பிரபல இயக்குனர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின் "சந்தேஷய" படத்தில் ‘பிருதுகீசிகாரயா’ என்ற பாடல் மூலம் எச். ஆர். ஜோதிபால என்ற புதிய பாடகருக்கு முத்துசாமி வாய்ப்பளித்திருந்தார். தென்னிந்தியப் பாடகர்கள் பலர் முத்துசாமியின் இசையமைப்பில் பாடியுள்ளனர். சிங்களப் பாடகி நந்தாமாலினி ‘தருவா காகெத’ என்ற படத்தில் இவர் இசையமைத்த பாடல் மூலம் அறிமுகமானார்.[2]

1972 இல் இலங்கையில் வெளிவந்த குத்துவிளக்கு தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைத்துப் பாடியிருக்கிறார்.

பாடகராக

[தொகு]

‘சிதக மஹிம’ என்ற படத்தில் சுஜாதா அத்தநாயக்கவுடன் இவர் பாடிய ‘மதுரயாமே’ என்ற பாடல் மிகவும் புகழ்பெற்ற பாடலாகும். 1958இல் மீண்டும் இலங்கை வானொலியில் சேர்ந்து கொண்ட முத்துசாமி மாஸ்டர் 1981 வரை 24 வருடங்கள் அந்த நிறுவனத்தில் பணியாற்றினார்.[2]

விருதுகள்

[தொகு]
  • சிங்கள திரையிசைக்கு ஆற்றிய சேவையை கெளரவிக்கும் வகையில் 1956 இல் அன்றைய பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல இவருக்கு கெளரவ இலங்கைக் குடியுரிமையை வழங்கினார்.[2]
  • அதிக படங்களில் இசையமைத்தமைக்காக 1974 இல் முத்துசாமிக்கு ‘தீபசிகா’ விருது வழங்கப்பட்டது.[2]
  • சிங்களப் படவுலகில் இவரது இசைப் பங்களிப்பை அங்கீகரித்த லிவியிவி அமைப்பு இவரை கெளரவித்தது.[2]
  • 1987 இல் அப்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் செ. இராசதுரை இவருக்கு ‘லயஞானவாருதி’ என்ற பட்டத்தை வழங்கினார்.[3]

குடும்பம்

[தொகு]

1961 அக்டோபர் 7ஆம் திகதி முத்துசாமி நீலியா பெரேரா என்ற சிங்களப் பெண்ணை திருமணம் செய்தார். முத்துசாமி மாஸ்டர் நீலியா தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் மு. மோகன்ராஜ் அப்சராஸ் என்ற இசைக் குழுவை நடத்தி வருகிறார். சித்திராங்கி, பிரசன்னவதனி, கீர்த்திகா என்ற மூன்று மகள்களும் உள்ளனர்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Immortal Muttusamy". சண்டே டைம்சு. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2016.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 "Incomparable master composer". டெய்லிநியூசு. 26 சூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2016.
  3. 3.0 3.1 "அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர்". தினகரன். 27 சூன் 2010. Archived from the original on 2012-03-22. பார்க்கப்பட்ட நாள் 29 சூலை 2017.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._முத்துசாமி&oldid=3678898" இலிருந்து மீள்விக்கப்பட்டது