ஆப்கானிஸ்தானில் பௌத்தம்
ஆப்கானித்தானில் பௌத்தம், ஆப்கானிஸ்தானில் இசுலாம் அறிமுகமாதவற்கு முன், பௌத்தம் முக்கிய சமயமாக விளங்கியது.
ஆப்கானிஸ்தானில் பௌத்த சமயம், தெற்கில் இந்து குஷ் வரை பரவியிருந்தது. இப்பகுதியை ஆண்ட கிரேக்க செலூக்கியப் பேரரசு, மௌரியப் பேரரசுடன் கொண்டிருந்த ந��்புறவால், கிமு 305ல் ஆப்கானிஸ்தானில் பௌத்த சமயம் பரவியது. இதன் விளைவாக இப்பகுதியில் வாழ்ந்த கிரேக்க பாக்திரியா பேரரசு (கி மு 256 – கி மு 125) காலத்தில் கிரேக்க ஆட்சியாளர்களும், குடிமக்களும் பௌத்தத்தை பயின்றதால் கிரேக்க பௌத்தம் நன்கு வளர்ந்தது. [1] பின்னர் ஆப்கானிஸ்தானையும், வடக்கு பாகிஸ்தானையும் கி மு 180 முதல் கி பி 10 வரை ஆண்ட இந்தோ கிரேக்கர்களும் பௌத்த சமயத்தை பேணி வளர்த்தனர்.
குசான் பேரரசர் கனிஷ்கர் (கிபி 127 - 163) ஆட்சிக் காலத்தில் பௌத்த சமயம் அதன் உச்சத்தை தொட்டது. பௌத்த இலக்கியங்கள், கிரேக்க எழுத்துமுறையில் பாக்திரியா மொழியில் எழுதப்பட்டது. பௌத்தத்தை நடு ஆசியா, மேற்காசியா, திபெத் மற்றும் சீனாவில் பரப்ப பல பௌத்த அறிஞர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டனர். [2] (Chap. XXIX[3]).
கிரேக்கப் பேரரசர் மெனாண்டர் ஆட்சியின் போது, காபூலிருந்து சுமார் 150 கிமீ தொலைவில் உள்ள அலெக்சாண்டிரியா காக்கேசியா நகரத்திலிருந்து மகாதர்மரக்சிதர்[4] தலைமையில் ஏறத்தாழை 30,000 பௌத்த பிக்குகள், இலங்கையின் அனுராதபுரத்தில் ருவான்வெலிசாய எனப்படும் பெரிய தூபியை நிறுவ வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. .
கிரேக்க பாக்திரியப் பேரரசர் மிலிந்தர் எனும் மெனாண்டர் (கிமு 165 - 135) ஆட்சிக் காலத்தில் பௌத்த சமயத்தை பேணி வளர்த்தார் என்பதை நாகசேனர், பாளி மொழியில் எழுதிய மிலிந்த பன்ஹா எனும் பௌத்த நூல் மூலம் அறியமுடிகிறது. நடு ஆசியாவின் அமைந்த பாரசீக பௌத்த விகாரை, நடு ஆசியாவின் பௌத்த சமயத்தின் மையமாக விளங்கியது. ஆப்கானிஸ்தானில் இசுலாம் பரவும் வரை ஆப்கானிஸ்தானின் சிதியர்கள் மற்றும் பஷ்தூன் மக்கள் பௌத்த சமயத்தை பயின்றனர்.
வடக்கு ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் இருந்த நவ விகாரை பல நூற்றாண்டுகளாக, நடு ஆசியா பகுதிகளுக்கு, பௌத்த சாத்திரங்கள் பயிலும் மையமாக திகழ்ந்தது.
ஆப்கானிஸ்தானில் பௌத்தச் சின்னங்கள்
[தொகு]தெற்கு ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தின் மெஸ் ஐநக் மலைப்பகுதியில் 2,120 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட தூபி பகுதியில் 42 பௌத்த தொல்லியல் நினைவுச் சின்னங்கள், ஆகஸ்டு, 2010ல் கண்டெடுக்கப்பட்டது. இவற்றில் சில கிபி இரண்டாம் நூற்றாண்டு காலத்தியவை ஆகும். தற்போது இங்குள்ள தூபியும் பௌத்த நினைவுச்சின்னங்களும் சிதைந்த நிலையில் உள்ளது.
மேலும் மெஸ் ஐநாக் பகுதியில் இரண்டு பௌத்த தூபிகளும், கௌதம புத்தர் உருவச் சிலைகளும், வெள்ளி மற்றும் தங்க நாணயங்கள், நவரத்தினங்கள் மற்றும் சுதை ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டது. [5][6][7]
காசுனியில் சில பௌத்த தொல்லியல் களங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. [8]
ஆப்கானித்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரத்தின் மேற்கே 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பீமரன் தூபி சிதைந்த நிலையில் உள்ளது. [9] இத்தொல்லியல் களம் பீமரன் தூபிகளுக்கும், அதனருகே அகழாய்வில் கண்டுபிடித்த தங்கத்தால் செய்த அழகிய பீமரன் பேழைக்கும் பெயர் பெற்றது.
ஆப்கானிஸ்தானின் பாக்ராம் பகுதியில், கிபி முதலாம் நூற்றாண்டு காலத்திய கிரேக்கம் மற்றும் அரமேயம் மொழியில் எழுதப்பட்ட அசோகர் கல்வெட்டுக்கள், யானை தந்தத்தால் ஆன அழகிய பெண்கள், குதிரை வீரன் சிற்பங்களும், மீன் வடிவில் செய்யப்பட்ட உலோக நீர் குவளையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் பண்டைய காந்தாரப் பகுதியில் அமைந்த லோரியன் தங்கை பௌத்த தொல்லியல் களத்தில் 1896—இல் அலெக்சாண்டர் கட்டி தலைமையில் நடைபெற்ற அகழ்வாய்வுவின் போது, கிபி இரண்டாம் நூற்றாண்டின் கௌதம புத்தரின் பல சிற்பங்களும், தூபிகளும் கண்டெடுக்கப்பட்டது. அவைகள் கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் உள்ளது. [10]
-
யானை தந்தத்தில் செய்த பண்டைய இந்தியப் பெண்களின் சிற்பங்கள்
-
யானை தந்தத்தில் செய்த குதிரை வீரன் சிற்பம்
-
வண்ண நிற கண்ணாடி பாட்டில்
-
மீன் வடிவில் செய்யப்பட்ட நீர் பாத்திரம்
-
யானை தந்தத்தில், கிரேக்க கலைநயத்தில் வடிக்கப்பட்ட பெண் சிற்பம்
பௌத்தத்தின் வீழ்ச்சி
[தொகு]கிபி 715ல் அப்பாசியக் கலீபகத்தின் ஆட்சியின் போது, ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் வாழ்ந்த பல பாரசீக பௌத்த பிக்குகள், பட்டுப் பாதை வழியாக கிழக்கு சீனத்திற்கு சென்றனர். எஞ்சியிருந்தவர்களை இசுலாமிய சமயத்திற்கு கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டனர். சபாரித்து வம்சம், கசானவித்து வம்சம் மற்றும் இறுதியில் கோரி வம்ச ஆட்சியாளர்களால், ஆப்கானிஸ்தானில் பௌத்தம் முழுவதுமாக துடைத்தெறியப்பட்டது. [11][12][13]
பௌத்தச் சின்னங்களின் அழிவுகள்
[தொகு]ஆப்கானிஸ்தானில் பௌத்த சமயத்தின் நினைவுச் சின்னங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தது. அவைகள் உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத இசுலாமிய பேரினவாதத்தினர் அழித்தனர். இறுதியாக தலிபான்கள், பாமியான் மாகாணத்தில் இருந்த பாமியன் புத்தர் சிலைகள்களை, மார்ச் 2001 இல் வெடிவைத்துத் தகர்த்தனர்.
ஆப்கானிஸ்தானில் பாக்ராம் மற்றும் பீமரன் போன்ற பகுதிகளில் இருந்த நூற்றுக் கணக்கான தூபிகள் இடித்து சிதைக்கப்பட்டது.
இதனையும் காண்க
[தொகு]- பீமரன் தூபி
- பீமரன் பேழை
- பாமியன் புத்தர் சிலைகள்
- காந்தாரத்தின் இருக்கும் புத்தர்
- மெஸ் ஐநாக் தூபி
- லோரியன் தங்கை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Greco-Buddhism
- ↑ Foltz, Religions of the Silk Road, p. 46
- ↑ Full text of the Mahavamsa Click chapter XXIX
- ↑ Mahadharmaraksita
- ↑ Embassy of the United States, Kabul. Mes Aynak 10.29.2011 பரணிடப்பட்டது 2015-11-16 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "42 Buddhist relics discovered in Logar". Maqsood Azizi. Pajhwok Afghan News. Aug 18, 2010. Archived from the original on 2010-03-17. பார்க்கப்பட்ட நாள் 2010-08-23.
- ↑ "Afghan archaeologists find Buddhist site as war rages". Sayed Salahuddin. News Daily. Aug 17, 2010. Archived from the original on 2010-08-18. பார்க்கப்பட்ட நாள் 2010-08-16.
- ↑ Embassy of the United States, Kabul. Ghazni 10.26.2011 பரணிடப்பட்டது 2016-06-25 at the வந்தவழி இயந்திரம்
- ↑ DATING AND LOCATING MUJATRIA AND THE TWO KHARAHOSTES by Joe Cribb, 2015, p.27 et sig
- ↑ /photocoll/b/019pho000001003u01034000.html British Library Online
- ↑ Amy Romano (2003). A Historical Atlas of Afghanistan (illustrated ed.). The Rosen Publishing Group. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8239-3863-8. பார்க்கப்பட்ட நாள் 18 September 2011.
- ↑ Steven Otfinoski (2004). Afghanistan (illustrated ed.). Infobase Publishing. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-5056-2. பார்க்கப்பட்ட நாள் 18 September 2011.
- ↑ Berzin, Alexander (December 2006). "History of Buddhism in Afghanistan". http://studybuddhism.com/en/advanced-studies/history-culture/buddhism-in-mongolia-central-asia/history-of-buddhism-in-afghanistan. பார்த்த நாள்: June 5, 2016.