பாடாங் பெசார்
பாடாங் பெசார் | |
---|---|
Padang Besar | |
பெர்லிஸ் | |
அடைபெயர்(கள்): கடைவலச் சொர்க்கம் | |
ஆள்கூறுகள்: 6°39′38″N 100°19′18″E / 6.66056°N 100.32167°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பெர்லிஸ் |
உருவாக்கம் | 1820 |
அரசு | |
• சட்டமன்ற உறுப்பினர் | காவ் ஆக் கோங் (Khaw Hock Kong) |
ஏற்றம் | 27 m (89 ft) |
உயர் புள்ளி | 810.2 m (2,658.1 ft) |
தாழ் புள்ளி | 0 m (0 ft) |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | ஏறக்குறைய 10,000 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 02100 |
மலேசியத் தொலைபேசி எண் | +604 |
பாடாங் பெசார் (மலாய்: Padang Besar P.B.; ஆங்கிலம்: Padang Besar); என்பது மலேசியா, பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். மலேசியா-தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ளது. இதுவே மலேசியாவின் ஆக வடக்கே உள்ள நகரம். இதனை நாட்டின் நுழைவாயில் நகரம் என்றும் அழைப்பதும் உண்டு.
கங்கார் நகரத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும்; தாய்லாந்து அட் யாய் நகரத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இங்குள்ள உள்ளூர்வாசிகள் பாடாங் பெசார் நகரத்தை பெக்கான் சியாம் அல்லது சயாம் நகரம் என்றும் அழைக்கிறார்கள்.[1]
இரு நாடுகளின் எல்லை சோதனைச் சாவடிகளுக்கு இடையில் இந்த நகரம் அமைந்து இருப்பதால், இந்த நகரத்தை கடைவலச் சொர்க்கம் என்றும் அடைமொழி பெற்று உள்ளது. மலேசியர்களின் பிரபலமான இடமாக விளங்கும் இந்த நகரம் ஒவ்வொரு வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது.[2]
வரலாறு
- 1913-ஆம் ஆண்டில், பெர்லிஸ் பாடாங் பெசார் நகரத்தையும் சிங்கப்பூர் நகரத்துடன் இணைக்கும் இரயில் இணைப்பு உருவாக்கப்பட்டது.
- 1918-ஆம் ஆண்டில், பாடாங் பெசார் நகரத்தையும்; தாய்லாந்தில் உள்ள ஹாட்சாய்; சோங்லா நகரங்களை இணைக்கும் இரயில் இணைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தாய்லாந்துக்கு நேரடியாக இரயில் மூலமாகக் கடப்பதற்கான சேவையும் தொடங்கியது.
- 1928 ஆம் ஆண்டில், உள்ளூர் சீன குடிமக்களின் விருப்பத்தின் கீழ் முதல் சீன தொடக்கப்பள்ளி கட்டப்பட்டது.
இரண்டாம் உலகப் போர்
- டிசம்பர் 1941-இல், இரண்டாம் உலகப் போரின்] போது ஜப்பானியர்கள் மலாயாவுக்குள் படையெடுத்து வருவதைத் தற்காலிகாமாகத் தாமதப் படுத்துவதற்கு பிரித்தானிய படைகள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த இராணுவத் தற்காப்பு நடவடிக்கைக்கு ஆபரேஷன் குரோகோல் (Operation Krohcol) என்று பெயர்.
- 1960-களில், மலேசியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையிலான எல்லைக் கோட்டில் இருந்து 1 மீ தொலைவில் உள்ள தற்போதைய புதிய பாடாங் பெசார் இரயில் நிலையத்திற்கு அருகே தங்க முக்கோண வணிகப் பகுதி ( Golden Triangle Commercial Area) உருவாக்கப்பட்டது. இது மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் ஒரு பிரபலமான கடைவலச் சொர்க்கமாக மாறியது. தவிர, இந்த பகுதியில் கடத்தல் தீவிரமானது. அதுவே மலேசியா மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் கவனத்தையும் ஈர்த்தது.
- 1970-இல், இரண்டாவது தேசியத் தொடக்கப்பள்ளி கட்டப்பட்டது.
புதிய குடிநுழைவு வளாகம்
- 1990-களில், புதிய பாடாங் பெசார் குடிநுழைவு வளாகம் கட்டப்பட்டது. இதற்கிடையில், பழைய இரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு உள்நாட்டு உலர் துறைமுகமாக மேம்படுத்தப்பட்டது. மலேசியா; தாய்லாந்து இரண்டு நாடுகளின் சோதனைச் சாவடிகளும் பாதசாரி பாலம் மூலமாக இணைக்கப் பட்டன.
- 1994-ஆம் ஆண்டில், இந்தப் பகுதியில் கடத்தல் நடவடிக்கைகள் தீவிரமானதால், இங்கிருந்த தங்க முக்கோண வணிகப் பகுதி இடிக்கப்பட்டது. இதனால் தாய்லாந்தி���் எல்லைப் பொருளாதாரமும்; இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளும் பாதிப்பு அடைந்தன. புதிய வணிகப் பகுதி (Aked Niaga Padang Besar) கட்டப்பட்டது.
- 2000-ஆம் ஆண்டில், பாடாங் பெசார் மேல்நிலைப் பள்ளி கட்டப்பட்டது.
- அக்டோபர் 2014-இல் மலேசியாவில் இரயில் மின்மயமாக்கல் திட்டம் நிறைவு அடைந்தது. கட்டுமானக் காலம் 6 ஆண்டுகள்.
எல்லை சோதனைச் சாவடி
பழைய பாடாங் பெசார் சாலைக்குப் பதிலாக புதிய வடக்கு-தெற்கு விரைவுசாலை (மலேசியா) பாடாங் பெசார் நகரத்துடன் இணைக்கப்பட்டது. இது தாய்லாந்து எல்லையை எளிதாகக் கடக்க வழிவகுத்தது. மலேசியாவின் இந்த வடக்கு-தெற்கு விரைவுசாலை சாலை; தாய்லாந்தின் சதாவோ நெடுஞ்சாலையுடன் நேரடியாக இணைந்தது.
எல்லை தடுப்புகள்
1970-ஆம் ஆண்டுகளில், மலேசியா; தாய்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும், தங்களின் பொதுவான எல்லையில் தடுப்புச் சுவர்களைக் கட்டின.
பெர்லிஸ் / சாத்தூன் வளாகம்; பெர்லிஸ் / சோங்லா வளாகம்; மற்றும் கெடா / சோங்லா வளாகம்; ஆகிய எல்லை வளாகங்களில் தீவிரமாக இயங்கி வந்த கடத்தல்களைக் கட்டுப்படுத்த சிமெண்ட், எஃகு கலவை; முள்வேலி; இரும்பு வேலிகள் கொண்ட சுவர்கள் எழுப்பப்பட்டன.
இரு நாடுகளும் தங்களின் சொந்த எல்லைக்குள்; தங்களின் சொந்தச் சுவர்களை சிறிது இடைவெளி விட்டு கட்டின. அந்த வகையில் சுமார் 10மீ அகலம் உள்ள ஒரு துண்டு இடைவெளி உருவானது. எந்த மனிதனுக்கும் சொந்தம் இல்லாத நிலம் no-man's-land என்று அழைக்கப் பட்டது.
போதைப்பொருள் கடத்தல்
அதனால் இந்த நிலப் பகுதி போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு வசதியான அடைக்கலமாகவும் மாறியது. அங்கு நடைபெற்று வந்த அனைத்துக் கடத்தல்க��ையும் எல்லைச் சுவர்களினால் தடுக்க இயலவில்லை.
2001-ஆம் ஆண்டில், இரு நாடுகளின் எல்லையில் ஒரே ஒரு சுவரை மட்டும் கட்டுவதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. அந்தச் சுவர் தாய்லாந்து எல்லைக்குள் அமைந்தது. புதிய எல்லைச் சுவர் 2.5 மீ உயரம் கொண்டது. சுவரின் கீழ் பாதி வரையில் திண்கரை; மேல் பாதியில் எஃகு முள்வேலி. அடிவாரத்தில் முள்வேலி சுவர்கள்.
சுவர் நிர்மாணிப்பதற்கு கடத்தல் மற்றும் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கான காரணங்கள் சொல்லப்பட்டன. இருந்தாலும், பாதுகாப்பு காரணங்கள் தான் முக்கியமான காரணங்கள்.
மலேசிய கம்யூனிஸ்டு குழுக்கள்
1970-ஆம் ஆண்டுகள்; மற்றும் 1980-ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் மலேசிய கம்யூனிஸ்டு குழுக்கள் மலேசியா தாய்லாந்து எல்லைப் புறங்களில் செயல்பட்டு வந்தன. மற்றும் 1990-ஆம் ஆண்டுளில் தெற்கு தாய்லாந்தில் சில கிளர்ச்சிக் குழுக்களின் செயல்பாடுகளும் தீவிராமாக இருந்தன.
அந்தக் கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கமே மலேசியா - தாய்லாந்து எல்லைச் சுவர் நிர்மாணிப்பதற்கான தலையாயக் காரணமாக அமைந்தது.
சுற்றுலா
முன்பு காலத்தில் விவசாயத் துறைதான் பாடாங் பெசார் உள்ளூர் குடிமக்களுக்கு அதிகமாக வருமானம் ஈட்டிய துறையாக இருந்தது. ஆனால் அந்தப் பழைய விவசாயத் துறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இப்போது சுற்றுலா, அனைத்துலக வர்த்தகம் மற்றும் தளவாடத் துறைகள் தான் மிக முக்கியமான இலாபம் தரும் துறைகளாக விளங்குகின்றன.
பாடாங் பெசார் தொழில் பகுதி, பெர்லிஸ் மாநிலத்திலேயே மிக முக்கியமான தொழில் பகுதிகளில் ஒன்றாகவும் கருதப் படுகிறது.
1960-ஆம் ஆண்டு தொடங்கி பாடாங் பெசார் பிரபலமான கடைவலச் சொர்க்கமாக விளங்கி வருகிறது. இந்த நகரத்திற்கு மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளில் இருந்தும் சுற்றுலா வணிக நோக்கங்களுக்காகப் பொதுமக்கள் அடிக்கடி வந்து போகிறார்கள்.[3]
இப்போது எல்லாம், இந்த நகரத்திற்கு ஒவ்வொரு வார இறுதியிலும் மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் தீபகற்ப மலேசியா மற்றும் தென் தாய்லாந்து பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பார்வையாளர்கள் வருகை தருகிறார்கள்.[4]
பாடாங் பெசார் சுற்றுலா தலங்கள்:
- குவா கெலாம் - சுண்ணாம்பு குகை (Gua Kelam)
- சுப்பிங் - மலேசியாவின் மிகப் பெரிய அளவில் கரும்பு விளைவிக்கப்படும் இடம்.
- பெர்லிஸ் மாநில வனப்பூங்கா - மலேசியாவின் ஒரே இலையுதிர் காட்டுப் பூங்கா. (Perlis State Park)[5]
- தீமா தாசோ ஏரி (Timah Tasoh Lake)[6]
மக்கள் தொகையியல்
2007-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பாடாங் பெசார் நகரத்தின் மக்கள் தொகை 13,748. ஆகும். இனங்களின் அடிப்படையில் மக்கள் தொகை அமைப்பு:
மலாய்க்காரர்கள்: 73.52%
சீனர்கள்: 23.23%
இந்தியர்கள்: 2.82%
மற்றவர்கள்: 0.59% - பெரும்பான்மையானவர் தென் தாய்லாந்தைச் சேர்ந்த தாய்லாந்து முஸ்லிம்கள்.
மேற்கோள்கள்
- ↑ Padang Besar is a border town between Perlis and Songkhla Province di Thailand. Among Malaysians, it is known as Pekan Siam.
- ↑ The town is a shopping heaven and popular destination for Malaysians because of the duty-free shopping complex in between the border checkpoints of the two countries.
- ↑ "Padang Besar is also on the main railway line between Kuala Lumpur and Bangkok and it is a popular stop off for tourists travelling between Thailand and Malaysia and even further onto Singapore". Archived from the original on 2020-02-18. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
- ↑ Padang Besar has been a popular shopping destination among Malaysians who converge there for duty-free shopping, mainly of household items from Thailand. Until the crossing at Bukit Kayu Hitam was opened in the 1980's, Padang Besar was the main crossing from the west coast of Peninsular Malaysia into Thailand.
- ↑ Perlis State Park boasts stunning limestone caves, especially Gua Wang Burma and Gua Kelam, which is said to be the longest cave in Peninsula Malaysia (3.6-kilometres). The limestone caves there are at least 500 million years old! Its highest peak is Gunung Perlis, which is 733-metres above sea level and the northernmost point of Peninsular Malaysia.
- ↑ "Lake Timah Tasoh is a man-made reservoir. It gets its name from the two rivers of Sungai Timah and Sungai Tasoh (Sungai means river) which flow into the lake". Archived from the original on 2021-02-05. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
வெளி இணைப்புகள்
- சுற்றுலா மலேசியா - பாடாங் பெசார் பரணிடப்பட்டது 2014-06-26 at the வந்தவழி இயந்திரம்