அக்தர் இமாம்
அக்தர் இமாம் Akhtar Imam | |
---|---|
1954 ஆம் ஆண்டில் இமாம் | |
பிறப்பு | டாக்கா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 30 திசம்பர் 1917
இறப்பு | 22 சூன் 2009 டாக்கா, வங்காள தேசம் | (அகவை 91)
படித்த கல்வி நிறுவனங்கள் | பெதுன் கல்லூரி தாக்கா பல்கலைக்கழகம் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி |
அக்தர் இமாம் (Akhtar Imam) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒரு கல்வியாளராவார். ஒரு பெண்ணியவாதியாகவும் சமூக ஆர்வலராகவும் அறியப்படுகிறார். 1917 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். [1]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]பழைய டாக்காவின் நரிந்தா குடியிருப்புப் பகுதியில் 1917 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று இமாம் பிறந்தார். தனது தொடக்கக் கல்வி மற்றும் இடைநிலை தேர்வுகளை முறையே 1933 மற்றும் 1935 ஆம் ஆண்டுகளில் ஈடன் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் இடைநிலைக் கல்லூரிகளில் முடித்தார். [1] 1937 ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்த பெதுன் கல்லூரியில் தத்துவத்தில் தனது பட்டத்தை முடித்தார். இவர் படித்த தொகுதி ஆண்டில் முதலிடம் பெற்றதற்காக இமாமுக்கு கங்காமணி தேவி பதக்கம் வழங்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டில் டாக்கா பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1952 ஆம் ஆண்டில், பாக்கித்தானிய அரசாங்கத்தால் நாட்டிற்கு வெளியே உயர்கல்வியைத் தொடர வங்காள இசுலாம் கல்வி நிதியிலிருந்து உதவித்தொகை வழங்கப்பட்டது. ஏஜே ஐயர் மற்றும் எசுவி கீலிங் ஆகியோரின் பயிற்சியின் கீழ் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் தத்துவத்தில் முதுகலைப் படித்தார். 1963 முதல் 1965 ஆம் ஆண்டு வரை இமாம் நாட்டிங்ஙாம் பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் மேலும் ஆராய்ச்சி மேற்கொண்டார். [2]
தொழில்
[தொகு]படிப்பை முடித்த பிறகு, இமாம் தான் படித்த பழைய ஈடன் கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். 1940 ஆம் ஆண்டு முதல் 1956 ஆம் ஆண்டு வரை அங்கு கற்பித்தார். பினார் டாக்கா கல்லூ��ிக்கு பேராசிரியராக மாற்றப்பட்டார். இதனால் டாக்கா கல்லூரியின் முதல் பெண் பேராசிரியராக பணியில் சேர்ந்தவர் என்ற சிறப்பைப் பெற்றார். மேலும் அக்கல்லூரியில் ஒரு துறையின் முதல் பெண் தலைவராகவும் ஆனார். 1953 ஆம் ஆண்டு இமாம் டாக்கா பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் பகுதிநேர ஆசிரியராக சேர்ந்தார். இங்கும் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் ஆசிரியராக இருந்தார். 1956 ஆம் ஆண்டு அங்கு ஒரு தத்துவப் பாடத்தில் விரிவுரையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1 செப்டம்பர் 1956 அன்று, அதே பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதியின் நிரந்தர நிர்வாகியாகப் பதவியேற்றார்.
1968 ஆம் ஆண்டில் இவர் தத்துவத் துறையின் முதல் பெண் தலைவரானார். இதே ஆண்டில், பாக்கித்தான் தத்துவ காங்கிரசின் 15 ஆவது அமர்வில் பொதுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற சிறப்பைப் பெற்றார். சில காலத்திற்கு அங்கு செயலாளர் மற்றும் பொருளாளராகவும் இருந்தார். வங்காள தேச தத்துவ சங்கத்தின் முதல் அழைப்பாளரான இவர் வங்காள தேச தத்துவ காங்கிரசில் உறுப்பினராகவும் இருந்தார். பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் லேகிகா சங்கா என்ற அமைப்பின் தலைவராக இமாம் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். மூத்த பெண்களின் நலனுக்கான தொண்டு செய்யும் நிறுவனமான ஏமந்திகாவின் தலைவராகவும் இருந்தார். தத்துவம் பற்றிய பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். [1]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இமாமுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இமாம் 25 வயதாக இருந்தபோது அவரது கணவர் இறந்தார். இமாம் 2009 ஆம் ஆண்டு சூன் மாதம் 22 அன்று இறந்தார் [1] இலண்டன் அரச மருத்துவக் கழகத்தின் சுவரில் இமாமின் பெயர் பொறிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. [2]
அங்கீகாரம்
[தொகு]சமூகத்திற்கான இமாமின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் 2002 ஆம் ஆண்டு ரோக்கியா பதக்கம் வழங்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் டாக்கா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம் அதன் 75 வது நிறுவன ஆண்டு விழாவை முன்னிட்டு இமாமை மரியாதையுடன் கௌரவித்தது. 1998 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பொன்விழாவை முன்னிட்டு, சர்வதேச ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிக்கான கொல்கத்தா சர்வதேச சங்கம் அவருக்கு சிறப்பான வரவேற்பும் போராட்ட மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் நினைவுச்சின்னம் வழங்கியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Islam, Sirajul (2012). "Imam, Akhter". In Islam, Sirajul; Firoz, Rawsan (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- ↑ 2.0 2.1 "A Trailblazer, An Exemplary Mother". The Star. The Daily Star. 13 January 2012. பார்க்கப்பட்ட நாள் 19 November 2017.