ஒல்லாந்து
ஒல்லாந்து Holland | |
---|---|
நெதர்லாந்தில் வடக்கு, தெற்கு ஒல்லாந்து (செம்மஞ்சள்) | |
நாடு | நெதர்லாந்து |
மிகப்பெரிய குடியிருப்புகள் | பட்டியல்
|
பரப்பளவு | |
• மொத்தம் | 7,511 km2 (2,900 sq mi) |
• நிலம் | 5,476 km2 (2,114 sq mi) |
மக்கள்தொகை (1 நவம்பர் 2019)[1] | |
• மொத்தம் | 65,83,534 |
• அடர்த்தி | 1,203/km2 (3,120/sq mi) |
இனம் | ஒல்லாந்தர் |
நேர வலயம் | ஒசநே+1 (ம.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (கோடை ம.ஐ.நே) |
ஒல்லாந்து (Holland, ஹாலந்து) என்பது ஒரு புவியியல் நிலப்பரப்பும்,[2] நெதர்லாந்தின் மேற்குக் கடற்கரையில் உள்ள முன்னாள் மாகாணமும் ஆகும்.[2] 10 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை, ஒல்லாந்து புனித உரோமைப் பேரரசுக்குள் ஒல்லாந்துப் பெருங்குடிகளால் ஆளப்பட்ட ஒரு மாவட்டமாக இருந்தது. 17 ஆம் நூற்றாண்டிற்குள், ஒல்லாந்து மாகாணம் ஒரு கடல்சார், பொருளாதார சக்தியாக உயர்ந்தது, புதிதாக விடுதலை பெற்ற இடச்சுக் குடியரசின் மற்ற மாகாணங்களில் ஆதிக்கம் செலுத்தியது.
முன்னாள் ஒல்லாந்து மாவட்டத்தின் பரப்பளவு தோராயமாக இரண்டு தற்போதைய இடச்சு மாகாணங்களான வடக்கு ஒல்லாந்து, தெற்கு ஒல்லாந்து எனப் பிரிக்கப்பட்டுள்ளதுடன், நெதர்லாந்தின் மூன்று பெரிய நகரங்களும் இதில் அடங்கும்: தலைநகர் (ஆம்ஸ்டர்டம்), ஐரோப்பாவின் மிகப்பெரும் துறைமுக நகரம் (ராட்டர்டேம்), அரசுத் தலைநகர் (டென் ஹாக்) ஆகியவையாகும். நவம்பர் 2019 கணக்கெடுப்பின்படி ஒல்லாந்தின் மக்கள் தொகை 6,583,534,[1] மக்கள் தொகை அடர்த்தி 1203/கிமீ2 ஆகும்.
நெதர்லாந்து நாடு முழுவதையும் குறிக்க ஒல்லாந்து என்ற பெயர் அடிக்கடி முறைசாரா முறையில் பயன்படுத்தப்படுகிறது.[2] இந்த சாதாரண பயன்பாடு பொதுவாக மற்ற நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, ஆனாலும் பல இடச்சுக்காரர்களால் கூட பயன்படுத்தப்படுகிறது.[3] இருப்பினும், நெதர்லாந்தில் உள்ள சிலர் (குறிப்பாக ஒல்லாந்து அல்லது மேற்குப் பகுதிகளுக்கு வெளியே உள்ளவர்கள்) முழு நாட்டிற்கும் இந்தப் பெயரைப் பயன்படுத்துவது விரும்பத்தகாதது அல்லது தவறானது என்று கருதுகின்றனர்.[4] சனவரி 2020 இல், நெதர்லாந்து முழு நாட்டிற்கும் ஒல்லாந்து என்ற பெயரைப் பயன்படுத்துவதை அதிகாரப்பூர்வமாகக் கைவிட்டது.[5]
வரலாறு
[தொகு]தொடக்கத்தில், ஆலந்து புனித உரோமைப் பேரரசின் தொலைதூர மூலையில் இருந்தது. படிப்படியாக, அதன் பிராந்திய முக்கியத்துவம் நெதர்லாந்தின் வரலாற்றில் ஒரு தீர்க்கமானதுடன், இறுதியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் வரை அதிகரித்தது.
ஒல்லாந்து மாவட்டம்
[தொகு]12 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, ஒல்லாந்தாக மாறிய பகுதியில் வசிப்பவர்கள் பிரீசியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இப்பகுதி ஆரம்பத்தில் பிரீசியாவின் ஒரு பகுதியாக இருந்தது. 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில், மேற்கு-பிரிசியா புனித உரோமைப் பேரரசில் ஒரு தனி மாவட்டமாக மாறியது. 896 முதல் 931 வரை ஆட்சி செய்த முதலாம் திர்க் என்பது உறுதியாக அறியப்பட்ட முதல் மாவட்ட ஆட்சியாளர் ஆவார். அவருக்குப் பின் 1101 வரை பலர் ஆட்சி செய்தனர். 1299 இல் முதலாம் யோவான் வாரிசுகளின்றி இறந்ததை அடுத்து, இம்மாவட்டம் இரண்டாம் யோவானுக்குக் கைமாறியது. ஐந்தாம் வில்லியம் (1354-1388) ஆட்சிக்கு வந்தபோது, அவர் ஐநாட், சீலாந்துக்கும் ஆட்சியாளரானார்.
1287 இல் செயிண்ட் லூசியாவில் இடம்பெற்ற வெள்ளத்திற்குப் பிறகு, பிரிசியாவின் பகுதி ஒரு பகுதியான மேற்கு பிரீசுலாந்து கைப்பற்றப்பட்டது. இதன் விளைவாக, ஒல்லாந்து, மேற்கு பிரீசியா மாநிலங்கள் உட்பட பெரும்பாலான மாகாண நிறுவனங்கள், ஐந்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக "ஒல்லாந்தும் மேற்கு பிரீசியாவும்" என்பதை ஒரு அலகாகக் குறிப்பிடுகின்றன. ஊக், காட் போர்கள் இந்தக் காலப்பகுதியில் தொடங்கியதை அடுத்து, ஒல்லாந்து, ஜக்கோபா (ஜாக்குலின்) ஆகிய மாவட்டங்களின் ஆட்சியாளர்கள் 1432 இல் நல்ல பிலிப்பு என்று அழைக்கப்படும் பர்கண்டியின் மூன்றாம் பிலிப்பிற்கு விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
1432 இல், ஒல்லாந்து பர்கண்டிய நெதர்லாந்தின் ஒரு பகுதியாகவும், 1477 முதல் ஆப்சுபர்கின் பதினேழு மாகாணங்களின் ஒரு பகுதியாகவும் ஆனது. 16 ஆம் நூற்றாண்டில், இந்த மாவட்டம் ஐரோப்பாவில் மிகவும் அடர்த்தியான நகரமயமாக்கப்பட்ட பகுதியாக மாறியது, பெரும்பான்மையான மக்கள் நகரங்களில் வாழ்ந்தனர். பர்கண்டிய நெதர்லாந்திற்குள், ஒல்லாந்து வடக்கில் ஆதிக்கம் செலுத்தும் மாகாணமாக இருந்தது. ஒல்லாந்தின் அரசியல் செல்வாக்கு அந்தப் பகுதியில் பர்கண்டியின் ஆதிக்கத்தின் அளவைப் பெரிதும் தீர்மானித்தது. ஒல்லாந்து மாவட்டத்தின் கடைசி ஆட்சியாளர் மூன்றாம் பிலிப்பு, இரண்டாம் பிலிப்பு, எசுப்பானிய மன்னர் என்று அழைக்கப்படுகிறார். 1581 ஆம் ஆண்டில் அவர் பதவி விலகல் சட்டத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார், இருப்பினும் எசுப்பானியாவின் மன்னர்கள் 1648 இல் மூன்சுட்டர் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் வரை ஒல்லாந்தின் ஆட்சியாளர் (கவுண்ட் ஆஃப் ஹாலந்து) என்ற பெயரிடப்பட்ட முறையீட்டைத் தொடர்ந்தனர்.
இடச்சுக் குடியரசு
[தொகு]எண்பதாண்டுப் போரின்போது ஆப்சுபர்குகளுக்கு எதிரான இடச்சுக் கிளர்ச்சியில், கிளர்ச்சியாளர்களின் கடற்படை வாட்டர்கியூசன், 1572 இல் பிரில் நகரில் தங்கள் முதலாவது நிலையான தளத்தை நிறுவினர். இந்தப் பின்னணியில், பெரிய இடச்சுக் கூட்டமைப்பில் ஒரு இறையாண்மை கொண்டதாக உள்ள ஒல்லாந்து, கிளர்ச்சியின் மையமாக மாறியது. இது ஐக்கிய மாகாணங்களின் பண்பாட்டு, அரசியல் மற்றும் பொருளாதார மையமாக மாறியது, 17 ஆம் நூற்றாண்டில், இடச்சுப் பொற்காலம், உலகின் பணக்கார நாடாக மாறியது. எசுப்பானியாவின் மன்னர் ஒல்லாந்தின் ஆட்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, நிர்வாக மற்றும் சட்டமன்ற அதிகாரம் ஒல்லாந்து மாநிலங்களிடமே இருந்தது.
இடச்சு குடியரசின் மிகப்பெரிய நகரங்கள் ஒல்லாந்து மாகாணத்தில் ஆம்ஸ்டர்டம், ராட்டர்டேம், லைடன், அல்க்மார், டென் ஹாக், டெல்ஃப்ட், டோர்ட்ரெக்ட், ஆர்லெம் ஆகியவையாகும். ஒல்லாந்தின் பெரிய துறைமுகங்களிலிருந்து, ஒல்லாந்து வணிகர்கள் ஐரோப்பா முழுவதிலும் உள்ள இடங்களுக்குப் பயணம் செய்தனர், அத்துடன் ஐரோப்பா முழுவதிலும் இருந்து வணிகர்கள் ஆம்ஸ்டர்டாமிலும், ஒல்லாந்தின் பிற நகரங்களிலும் வணிகம் செய்யக் கூடினர்.
பல ஐரோப்பியர்கள் ஐக்கிய மாகாணங்களை, நெதர்லாந்தின் ஏழு ஐக்கிய மாகாணங்களின் குடியரசு என்று கருதாமல் ஒல்லாலந்து என்று முதலில் கருதினர். ஒல்லாந்து பற்றிய வலுவான அபிப்பிராயம் மற்ற ஐரோப்பியர்களின் மனதில் விதைக்கப்பட்டது, பின்னர் அது ஒட்டுமொத்தமாக குடியரசின் மீது முன்வைக்கப்பட்டது. மாகாணங்களுக்குள்ளேயே, கலாச்சார விரிவாக்கத்தின் படிப்படியான மெதுவான செயல்முறையானது, மற்ற மாகாணங்களின் "ஒல்லாந்துமயமாக்கலுக்கும்", குடியரசு முழுவதற்கும் ஒரே மாதிரியான கலாச்சாரத்திற்கும் வழிவகுத்தது. நகர்ப்புற ஒல்லாந்தின் பேச்சுவழக்கு நிலைமொழியாக மாறியது.
பிரான்சின் ஆட்சியில்
[தொகு]பிரெஞ்சுப் புரட்சியால் ஈர்க்கப்பட்டு பத்தாவியக் குடியரசு உருவாக்கம் மேலும் மையப்படுத்தப்பட்ட அரசாங்கத்திற்கு வழிவகுத்தது. ஒல்லாந்து ஒரு ஒற்றையாட்சி மாநிலமாக மாறியது. அதன் இறையாண்மை 1798 இல் நிர்வாக சீர்திருத்தத்தால் மேலும் குறைக்கப்பட்டது, அதன் பிரதேசம் 'ஆம்ஸ்டெல்', 'டெல்ஃப்', 'டெக்சல்', 'செல்டே என் மாசின்' ஒரு பகுதி எனப் பல துறைகளாக பிரிக்கப்பட்டது.
1806 முதல் 1810 வரை, பிரான்சின் முதலாம் நெப்போலியன் தனது அண்ணன் லூயி நெப்போலியனாலும், பின்னர் சிறிது காலம் லூயியின் மகனான நெப்போலியன் லூயிஸ் போனபார்ட்டாலும் "ஒல்லாந்து இராச்சியம்" என்ற பெயரில் ஆளப்பட்டது. இந்த இராச்சியம் நவீன நெதர்லாந்தாக மாற்றம் பெற்ற பெரும்பாலானவற்றை உள்ளடக்கியது.[6]
தாழ்நிலை நாடுகள் பிரெஞ்சுப் பேரரசால் இணைக்கப்பட்ட காலத்தில் (1810 முதல் 1813 வரை), ஒல்லாந்து சுய்டெர்சீ, பௌச்-டி-லா-மியூஸ் ஆகிய இரண்டு பிரான்சியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. 1811 முதல் 1813 வரை, சார்லஸ்-பிரான்சுவா லெப்ரூன் அதன் ஆளுநராகப் பணியாற்றினார்.[7] 1813 ஆம் ஆண்டில், இடச்சு பிரமுகர்கள் ஐக்கிய நெதர்லாந்தின் இறையாண்மைப் பகுதியாக அறிவித்தனர்.
நெதர்லாந்து இராச்சியம்
[தொகு]1815 இல், ஒல்லாந்து நெதர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் ஒரு மாகாணமாக மீட்டெடுக்கப்��ட்டது. 1830 பெல்சியப் புரட்சிக்குப் பின்னர், ஒல்லாந்து 1840 ஆம் ஆண்டில் தற்போதைய மாகாணங்களான வடக்கு ஒல்லாந்து, தெற்கு ஒல்லாந்து எனப் பிரிக்கப்பட்டது.[8] 1850 முதல், தேசத்தை உருவாக்கும் ஒரு வலுவான செயல்முறை நடந்தது, ஒல்லாந்து நகரங்களை அதன் மையமாக கொண்டு, நெதர்லாந்து கலாச்சார ரீதியாகவும், பொருளாதார ரீதியாக நவீனமயமாக்கல் செயல்முறையாலும் ஒருங்கிணைக்கப்பட்டது.[9]
புவியியல்
[தொகு]ஒல்லாந்து நெதர்லாந்தின் மேற்கில் அமைந்துள்ளது. இது வடகடலில் ரைன், மாசு ஆற்றுவாய்களில் அமைந்துள்ளது. இது ஏராளமான ஆறுகளையும், ஏரிகளையும் கொண்டுள்ளது. விரிவான உள்நாட்டுக் கால்வாய் மற்றும் நீர்வழி அமைப்பைக் கொண்டுள்ளது. தெற்கே சீலாந்து உள்ளது. கிழக்கில் ஐசெல்மீர் மற்றும் நான்கு டச்சு மாகாணங்கள் எல்லைகளாக உள்ளது.
ஒல்லாந்து கடலோர மணற்குன்றுகளின் நீண்ட வரிசையால் கடலில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. ஒல்லாந்தின் மிக உயரமான இடம், கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 55 மீட்டர் (180 அடி) உயரத்தில் உள்ளது,[10] மணற்குன்றுகளுக்குப் பின்னால் உள்ள பெரும்பாலான நிலப்பரப்பு கடல் மட்டத்திற்குக் கீழே உள்ள தாழ்நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. தற்போது ஒல்லாந்தின் மிகக் குறைந்த புள்ளி, கடல் மட்டத்திலிருந்து 7 மீட்டர் (23 அடி) கீழே உள்ள ராட்டர்டாமுக்கு அருகிலுள்ள ஒரு தாழ்நிலமாகும். ஒல்லாந்தை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க முந்தைய நூற்றாண்டுகளில், காற்றாலைகள் பயன்படுத்தப்பட்டன. காற்றாலைகளால் ஆன நிலப்பரப்புகள் இன்றும் ஒல்லாந்தின் அடையாளமாக மாறியுள்ளன.
ஒல்லாந்து 7,494 சதுர கிலோமீட்டர்கள் (2,893 சதுர மைல்கள்) நிலத்தையும் நீரையும் உள்ளடக்கியது, இது நெதர்லாந்தின் பரப்பளவில் சுமார் 13% ஆகும். நிலத்தை மட்டும் பார்த்தால், அது 5,488 சதுர கிலோமீட்டர் (2,119 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது. 2018 இல் ஒருங்கிணைந்த மக்கள் தொகை 6.5 மில்லியனாக இருந்தது.[11]
ஒல்லாந்தின் முக்கிய நகரங்கள் ஆம்ஸ்டர்டாம், ரோட்டர்டாம், டென் ஹாக் ஆகியனவாகும். ஆம்ஸ்டர்டம் முறையாக நெதர்லாந்தின் தலைநகரமும், அதன் மிகப்பெரிய நகரமுமாகும். ராட்டர்டேம் துறைமுகம் ஐரோப்பாவின் மிகப்பெரியதும், மிக முக்கியமான துறைமுகங்களுள் ஒன்றுமாகும். டென் ஹாக் நெதர்லாந்தின் அரசாங்கம் உள்ள நகரமாகும். இந்த நகரங்கள், உத்ரெக்ட் மற்றும் பிற சிறிய நகராட்சிகளுடன் இரான்ட்சுடாடு என்ற ஒற்றை நகரக் குழுமத்தில் இணைகின்றன. ராண்ட்சுடாட் பகுதி ஐரோப்பாவின் மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றாகும். மாகாணத்தின் பெரும்பகுதி இப்போதும் கிராமப்புறத் தன்மையைக் கொண்டுள்ளது. மீதமுள்ள வேளாண்மை நிலங்களும் இயற்கைப் பகுதிகளும் மிகவும் மதிப்புமிக்கவையாகப் பாதுகாக்கப்படுகின்றன. விளை நிலங்களில் பெரும்பாலானவை தோட்டக்கலை மற்றும் பசுமைக்குடில் விவசாய வணிகங்கள் உட்படத் தீவிர வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "CBS Statline". Archived from the original on 2017-08-03. பார்க்கப்பட்ட நாள் 2020-01-10.
- ↑ 2.0 2.1 2.2 G. Geerts & H. Heestermans, 1981, Groot Woordenboek der Nederlandse Taal. Deel I, Van Dale Lexicografie, Utrecht, p 1105
- ↑ Netherlands vs. Holland பரணிடப்பட்டது 2020-11-24 at the வந்தவழி இயந்திரம், Netherlands Board of Tourism & Conventions
- ↑ "Holland or the Netherlands?". Dutch Embassy in Sweden. Archived from the original on 27 October 2016. பார்க்கப்பட்ட நாள் 15 December 2012.
- ↑ Romano, Andrea (January 7, 2020). "The Netherlands Will No Longer Be Called Holland". Travel + Leisure (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-05.
- ↑ Willem Frijhoff, "Hollands hegemonie" in Thimo de Nijs and Eelco Beukers (eds.), 2002, Geschiedenis van Holland, Vol. 2, p. 468
- ↑ C.F. Gijsberti Hodenpijl (1904) Napoleon in Holland, pp. 6–7.
- ↑ G. Geerts & H. Heestermans, 1981, Groot Woordenboek der Nederlandse Taal. Deel II, Van Dale Lexicografie, Utrecht, p 1831-1832
- ↑ Hans Knippenberg and Ben de Pater, "Brandpunt van macht en modernisering" in Thimo de Nijs and Eelco Beukers (eds.), 2003, Geschiedenis van Holland, Vol. 3, p. 548
- ↑ "Highpoints of the Netherlands". Archived from the original on 20 September 2015.
- ↑ [1] பரணிடப்பட்டது 2018-07-27 at the வந்தவழி இயந்திரம் Statline CBS: Bevolkingsontwikkeling per maand.