உள்ளடக்கத்துக்குச் செல்

இலைசாந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லைசாந்தர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இலைசாந்தர்
ஏதென்சின் மதில் சுவர்களுக்கு வெளியே லைசாந்தர், அவைகளை அழிக்க உத்தரவிடுகிறார். 19 ஆம் நூற்றாண்டு சித்தரிப்பு
சார்புஎசுபார்த்தா
தரம்Navarch
போர்கள்/யுத்தங்கள்பெலோபொன்னேசியன் போர்

கொரிந்தியப் போர்

லைசாந்தர் (Lysander, கிரேக்கம்: Λύσανδρος; Lysandros; கிமு 395 இல் இறந்தார்) என்பவர் ஒரு எசுபார்த்தன் இராணுவ மற்றும் அரசியல் தலைவர் ஆவார். கிமு 405 இல் நடந்த ஈகோஸ்ப்பொட்டாமி சமரில் இவர் ஏதெனியன் கடற்படையை அழித்தார், ஏதென்சை சரணடையச் செய்தார். மேலும் பெலோபொன்னேசியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். காலியார்டஸ் போரில் இவர் இறக்கும் வரை அடுத்த தசாப்தத்தில் கிரேக்கத்தில் எசுபார்த்தாவின் ஆதிக்கம் நிலைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

எசுபார்த்தாவைப் பற்றிய லைசாந்தரின் பார்வை பெரும்பாலான எசுபார்த்தன்களிடமிருந்து வேறுபட்டது; அவர் ஏதெனியன் பேரரசை அகற்றி எசுபார்த்தன் மேலாதிக்கத்தை ஏற்படுத்த விரும்பினார்.[1]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

லைசாந்தரின் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. சில பழங்கால ஆசிரியர்கள் அவருடைய தாயார் ஒரு எலட் அல்லது அடிமை என்று பதிவு செய்கிறார்கள். லைசாந்தரின் தந்தை அரிஸ்டோக்ளிட்டஸ் ஆவார். அவர் எசுபார்த்தன் ஹெராக்ளிடேயின் உறுப்பினராக இருந்தார்; அதாவது, இவர் ஹெராக்கிள்சின் வம்சாவளியைச் சேர்ந்தவர். ஆனால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. லைசாந்தர் வறுமையில் வளர்ந்தார், மேலும் அவர் தன்னை கீழ்ப்படிதலுள்ளவராகவும், இணக்கமாகவும் காட்டிக்கொண்டார். புளூடார்க்கின் கூற்றுப்படி, இவர் ஒரு "மாந்த நற்பண்புகள் கொண்ட ஆண்" ஆவார்.[2]

நோட்டியம் சமர்

[தொகு]

கிமு 407 இல் ஏஜியன் கடலுக்கான எசுபார்த்தன் கடற்படை தளபதியாக (நவார்ச்) லைசாந்தர் நியமிக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில்தான் இவர் பாரசீக மன்னர் இரண்டாம் டோரியசின் மகனான இளைய சைரசின் நட்பையும் ஆதரவையும் பெற்றார்.

லைசாந்தர் எபேச்சை தளமாக கொண்ட ஒரு வலுவான எசுபார்த்தன் கடற்படையை உருவாக்கும் பணியை மேற்கொண்டார். இதனால் ஏதெனியர்களையும், அவர்களது கூட்டாளிகளையும் எதிர்கொள்ள முடியும் என்று கருதினார்.[2][3]

ஆல்சிபியாடீசு ஏதெனியப் பேரரசின் படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் சமோசுக்குச் சென்று தனது கடற்படையுடன் இணைந்து லைசாந்தரை போருக்கு இழுக்க முயற்சித்தார். எசுபார்த்தன் நவார்ச் லைசாந்தர் ஆல்சிபியாடீசுடன் போரிடுவதற்காக எபேச்சிலிருந்து வெளிவராமலேயே இருந்தார். பின்னர் அல்சிபியாடெஸ் கடற்படைக்கு தேவைப்பட்ட பணத்தைத் திரட்ட வெளியே சென்றபோது, ஏதெனியன் படையை அந்தியோக்கஸ் என்பவரின் பொறுப்பில் வைத்துவிட்டுச் சென்றார். இந்த நேரத்தில் லைசாந்தர் கிமு 406 இல் நோட்டியம் போரில் எசுபார்த்த கடற்படையைக் கொண்டு (பாரசீகர்களின் இளவரசர் இளைய சைரசின் உதவியுடன்) ஏதெனிய கடற்படையை தோற்கடித்தார். லைசாந்தரிரிடம் ஏற்பட்ட தோல்வியானது ஆல்சிபியாடீசின் எதிரிகளால் அவரது கடற்படை தளபதி பதவியைப் பறிக்க ஏற்ற வாய்ப்பாக ஆனது. அவர் பின்னர் மீண்டும் ஏதென்சுக்கு திரும்பவில்லை. திரேசியன் செர்சோனிஸில் தனக்குச் சொந்தமான நிலத்திற்கு அவர் வடக்கே பயணம் செய்தார்.

பதவியில் இல்லாத நிலை

[தொகு]

இந்த வெற்றியை ஈட்டிய பிறகு லைசாந்தர் எசுபார்த்தன் வசம் இருந்த தலைமைத் தளபதி (நவார்ச்சாக) காலிக்ராட்டிடாஸ் என்பவர் வசம் ஒப்படைக்கப்பட்டது. லைசாந்தர் தன் பதவியை விட்டு வெளியேறியபோது பாரசீக இளவரசர் போருக்கு வழங்கிய நிதி அனைத்தையும் சைரசிடம் திருப்பி ஒப்படைத்தார்.[4]

கிமு 406 இல், காலிக்ராடிடாஸ் ஒரு கடற்படையைத் திரட்டி, லெஸ்போஸ் தீவின், மிதிம்னாவுக்குச் சென்று, அதை அவர் முற்றுகையிட்டார். இந்த நடவடிக்கை ஏதெனியனுக்கான தானிய விநியோகத்துக்கு அச்சுறுத்தலாக ஆனது. இதனால் ஏதென்சு அவர்களின் தளபதி கோனன் தலைமையில் முற்றுகையிலிருந்து அப்பகுதியைக் காக்க ஒரு கடற்படையை அனுப்பியது. காலிக்ராட்டிடாசின் படைகளுக்கும் கோனானின் படைகளுக்கும் ஏற்பட்ட சமரில் தோல்வியுற்ற கோனான் மிட்டிலீனிக்கு பின்வாங்கினார், அங்கு அவர் காலிக்ராட்டிடாஸின் எசுபார்த்தன் கடற்படையால் முற்றுகை இடப்பட்டார்.

கோனனை விடுவிப்பதற்காக, ஏதெனியர்கள் புதியதாக ஒரு கடற்படையைத் திரட்டினர். அது பெரும்பாலும் புதிதாகக் கட்டப்பட்ட கப்பல்களைக் கொண்டதாகவும், அனுபவமற்ற பணியாளர்களால் நிர்வகிக்கப்பட்டதாகவும் இருந்தது. இந்த கடற்படை எசுபார்த்தன் விட மாற்றக் குறைந்ததாக இருந்தபோதிலும், ஏதெனியர்கள் வழக்கத்திற்கு மாறான புதிய தந்திரோபாயங்களைக் கையாண்டனர். அப்போது லெஸ்போசுக்கு அருகில் நடந்த அர்ஜினுசி சமரில் வியத்தகு, எதிர்பாராத வெற்றியை ஏதெனியர்கள் பெற்றனர். எசுபார்த்தன்கள் கோனானை இட்டிருந்த முற்றுகை உடைக்கப்பட்டது. எசுபார்த்தன் படை கடுமையாக தோற்கடிக்கப்பட்டது. அப்போரின் போரின் போது காலிக்ராட்டிடாஸ் கொல்லப்பட்டார்.

மீண்டும் தளபதியாக

[தொகு]

இந்த தோல்விக்குப் பிறகு, எசுபார்த்தாவின் கூட்டாளிகள் லைசாந்தரை மீண்டும் தளபதியாக நியமிக்க முயன்றனர். என்றாலும், எசுபார்த்தன் சட்டப்படி ஒருமுறை கடற்படைக்கு தலைமை வகித்தவர் மறுமுறை தலைமை வகிக்க முடியாது. எனவே அரக்கஸ் என்பவர் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டார் லைசாந்தர் அவருக்கு துணையாக நியமிக்கப்பட்டார். ஆயினும்கூட, லைசாந்தரே நடைமுறையில் எசுபார்த்தன் கடற்படையின் தளபதியாக செயலாற்றினார்.[2][3] இதனால் மகி���்ச்சியடைந்த சைரஸ், மீண்டும் எசுபார்த்தன் கடற்படைக்கு நிதி உதவி வழங்கத் தொடங்கினார். மேலும் அவர் இல்லாத நேரத்தில் லைசாந்தரே தனது சாத்ராபி (பாரசிக ஆளுநர்) பதவியை ஏற்று நடத்த அனுமதித்தார்.[5]

மீண்டும் கடற்படையை வழிநடத்த வந்ததும், லைசாந்தர் எசுபார்த்தன் கடற்படையை ஹெலஸ்பான்ட் நோக்கி செலுத்தினார். ஏதெனியன் கடற்படை அவரைப் பின்தொடர்ந்தது. கிமு 404 இல், ஏதெனியர்கள் தங்கள் மீதமுள்ள கப்பல்களை ஈகோஸ்ப்பொட்டாமியில் ( திரேசியன் செர்சோனீசுக்கு அருகில்) திரட்டினர். கோனனின் தலைமையின் கீழ் இருந்த ஏதெனியன் கடற்படை பின்னர் ஈகோஸ்போடாமி சமரில் லைசாந்தரின் தலைமையிலான எசுபார்த்தன்களால் அழிக்கப்பட்டது. கோனான் சைப்பிரசுக்கு திரும்பினார்.

பின்னர், லைசாந்தரின் படைகள் பொசுபோரசுக்குச் சென்று பைசாந்தியம் மற்றும் சால்சிடன் இரண்டையும் கைப்பற்றி, அந்த நகரங்களில் வாழ்ந்த ஏதெனியர்களை வெளியேற்றின. பின்னர் லைசாந்தர் லெஸ்போஸ் தீவையும் கைப்பற்றினார்.[2][3]

ஏதென்சின் தோல்வி

[தொகு]
ஆசிய மைனரின் ஆளுநர் மற்றும் இரண்டாம் டேரியசின் மகனான இளைய சைரஸ் (இடது), மற்றும் எசுபார்த்தன் தளபதி லைசாந்தர் (வலது) சர்திசில் சந்திக்ககின்றனர். இந்த சந்திப்பு செனபோன் தொடர்புடையது. பிரான்செஸ்கோ அன்டோனியோ க்ரூ (1618–1673) வரைந்தது.

ஈகோஸ்ப்பொட்டாமி வெற்றியைத் தொடர்ந்து, எசுபார்த்தா இறுதியாக ஏதென்சை சரணடையச் செய்யும் நிலையில் இருந்தது. எசுபார்த்தன் மன்னன் பௌசானியாஸ், ஏதென்சின் முதன்மையான நகரத்தை முற்றுகையிட்டார். அதே நேரத்தில் லைசாந்தரின் கடற்படை ஏதென்சின் துறைமுகமான பிரேயசை முற்றுகையிட்டது. இந்த நடவடிக்கையானது ஹெலஸ்பான்ட் வழியாக ஏதென்சுக்கு தானியங்கள் போகும் வழியை திறம்பட அடைத்தது இதனால் ஏதென்சு பட்டினி கிடந்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து ஏதெனியர்கள், லைசாந்தருடன் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கினார். இந்த பேச்சுவார்த்தைகள் மூன்று மாதங்கள் நடந்தன, ஆனால் இறுதியில் லைசாந்தர் அவர்களின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டார். கிமு 404 இல் ஏதென்சு சரணடைவதற்கும் பெலோபொன்னேசியப் போரை நிறுத்துவதற்கும் உடன்பாடு எட்டப்பட்டது.

லைசாந்தரின் உத்தரவின் பேரில் ஏதென்சின் மதில் சுவர்கள் இடிக்கப்படுகின்றன

எசுபார்த்தாவின் உத்தரவின் பேரில் ஏதென்சு நகரத்தையும் துறைமுகத்தையும் (பிரேயஸ்) இணைக்கும் நீண்ட சுவர்களையும் ஏதெனியர்களால் இடிக்கப்பட்டன. மேலும் ஏதெனியர்கள் தங்கள் குடியேற்றங்களைக் கைவிட வேண்டும், மேலும் ஏதென்சு அவர்களின் பன்னிரெண்டு கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து கப்பல்களையும் எசுபார்த்தன்களிடம் ஒப்படைக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டன. ஏதென்சு நகரத்தை அழிவிலிருந்து காப்பாற்றிய பாதுகாப்பான விதிமுறைகளை தெரமீன்ஸ் செய்தார். ஐயோனியாவில் ஏஜியன் கடலுக்கு அப்பால் உள்ள கிரேக்க நகரங்கள் மீண்டும் அகாமனிசியப் பேரரசுக்கு உட்பட்டன.

ஏதென்சில் தளபதி

[தொகு]

லைசாந்தர் ஏதென்சில் ஒரு கைப்பாவை அரசாங்கமாக கிரிடியாசின் தலைமையிலான முப்பது கொடுங்கோலர்கள்களின் சிலவர் ஆட்சியை நிறுவினார். இதில் தேரமெனிஸ் முதன்மையான ஒரு உறுப்பினராக இருந்தார். பொம்மை அரசாங்கம் பல குடிமக்களைக் கொன்றது மேலும் ஏதென்சின் குடிமக்களாக இருந்த சிலரைத் தவிர மற்ற அனைவரும் அவர்கள் முன்னர் கொண்டிருந்த உரிமைகளை பறித்தது. எசுபார்த்தன் தளபதியின் கீழ் இருந்த துணைப்படைகள் (காரிசன்) காவலுக்கு நிறுத்தப்பட்டன.[6] இந்த நடைமுறைகள் எசுபார்த்தன் மேலாதிக்கக் காலத்தின் தொடக்கமாகும். [[படிமம்:La mort d'Alcibiade Philippe Chéry 1791.jpg|thumb| நாடுகடத்தப்பட்ட ஏதெனியன் ஜெனரல் ஆல்சிபியாடீசின் படுகொலை ல��சாந்தரின் வேண்டுகோளின் பேரில் பர்னாபசால் ஏற்பாடு செய்யப்பட்டது.[2][3] சமோசைத் தாக்கி கைப்பற்றிய பிறகு, லைசாந்தர் எசுபார்த்தாவுக்குத் திரும்பினார். முன்னாள் ஏதெனியன் தலைவரான ஆல்சிபியாடீசு, ஈகோஸ்ப்பொட்டாமியில் எசுபார்த்தன் வெற்றிக்குப் பிறகு, வடமேற்கு ஆசியா மைனரில் உள்ள பிரிஜியாவில், பாரசீக ஆளுநரான பர்னபாசிடம் தஞ்சம் புகுந்தார். மேலும் அவர் ஏதெனியர்களுக்கு பாரசீகர்களின் உதவியை நாடினார். இதனால் அல்சிபியாட்ஸ் கொல்லப்பட்ட வேண்டும் என்று எசுபார்த்தன்கள் முடிவு செய்தனர் மேலும் லைசாந்தர், பர்னபாஸசின் உதவியுடன் அல்சிபியாட்சை படுகொலை செய்ய ஏற்பாடு செய்தார்.[2][3]

லைசாந்தர் ஏதெனியர்களுக்கு எதிராக பெற்ற வெற்றிகளின் மூலம் பெரும் செல்வத்தை குவித்தார். அவற்றை எசுபார்த்தாவிற்கு கொண்டு வந்தார். பல நூற்றாண்டுகளாக லாசெடெமெனியாவில் பணத்தை வைத்திருப்பது சட்டவிரோதமானதாக இருந்தது, ஆனால் புதிதாக உருவாக்கப்பட்ட கடற்படைக்கு நிதி தேவைப்பட்டது மேலும் எப்போதும் பாரசீக நிதி உதவியை எப்போதும் நம்பி இருக்க முடியாது. ரோமானிய வரலாற்றாசிரியர் புளூட்டாக் லைசாந்தர் எசுபார்த்தாவில் செல்வத்தை கொண்டுவந்து குவித்ததை கடுமையாகக் கண்டிக்கிறார்.[2] செல்வம் மிகுந்ததால் ஏதெனியர்கள் கடைபிடித்து வாழ்ந்த எளிய வாழ்வு மாறியது. அதனால் ஊழல் விரைவில் நடக்கத் தொடங்கியது. தளபதி கிலிப்பஸ் செல்வத்தை நாட்டிற்கு கொண்டு செல்லும் போது, அவர் ஒரு பெரிய தொகையை அபகரித்தார் மற்றும் அவர் தப்பிச் சென்ற நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

ஏதென்சின் எதிர்ப்பு

[தொகு]

எசுபார்த்தன்களின் கைப்பாவை அரசாங்கத்தால் ஏதென்ஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஏதெனியன் தளபதி திராசிபுலசு, புதியதாக உருவான சிலவர் ஆட்சியின் அரசாங்கத்திற்கு எதிரான சனநாயகப் பிரிவினரை வழிநடத்தினார். கிமு 403 இல், அவர் அட்டிகாவை ஆக்கிரமித்த நாடுகடத்தப்பட்ட ஒரு சிறிய படைக்கு தலைமைதாங்கினார். மேலும் தொடர்ச்சியான போர்களில், முனிச்சியா போரில் முதலில் ஒரு எசுபார்த்தன் துணைப்படையையும் பின்னர் சிலவர் ஆட்சிக்குழு அரசாங்கத்தின் ( லைசாந்தர் உட்பட) படைகளையும் தோற்கடித்தார். முப்பது கொடுங்கோலர்களின் தலைவர் கிரிடியாஸ் போரில் கொல்லப்பட்டார்.

முப்பது கொடுங்கோலர்களின் அரசாங்கத்தை தோற்கடித்து, பிரேயஸை ஆக்கிரமித்த நாடுகடத்தப்பட்ட ஏதெனியன்களுக்கும் அவர்களை எதிர்த்துப் போரிட அனுப்பப்பட்ட எசுபார்த்தன் படைகளுக்கும் இடையில் பைரேயஸ் போர் நடந்தது. போரில், எசுபார்த்தன்கள் நாடுகடத்தப்பட்டவர்களை அவர்களின் கடுமையான போராட்டத்தையும் மீறி தோற்கடித்தனர். போருக்குப் பிறகு, லைசாந்தரின் எதிர்ப்பையும் மீறி, எசுபார்த்தாவின் மன்னர் பௌசானியாஸ், ஏதென்சின் இரு பிரிவினர்களுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்தினார், இது ஏதென்சில் சனநாயக அரசாங்கம் மீண்டும் ஏற்பட காரணமாயிற்று.

இறுதி ஆண்டுகள்

[தொகு]

ஏதென்சில் பின்னடைவுகளைச் சந்தித்தாலும் லைசாந்தர் எசுபார்த்தால் செல்வாக்கு கொண்டவராகவே இருந்தார். இரண்டாம் அகிசின் மரணத்தைத் தொடர்ந்து புதிய எசுபார்த்தன் மன்னராக இரண்டாம் அஜிசிலேயசைத் தேர்ந்தெடுக்க எசுபார்த்தன்களை அவர் வற்புறுத்தினார். மேலும் பாரசீக மன்னராக பொறுபேற்ற இளைய சைரசின் அண்ணனான இரண்டாம் அர்டாக்செர்க்சசுக்கு எதிராக போராடும் இளைய சைரசை ஆதரிக்க எசுபார்த்தன்களை வற்புறுத்தினார்.

கிமு 404 இல் ஏதெனியர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், சிலவர் ஆட்சிக்குழு பிரிவினர் தங்கள் ஆட்சியை மீட்டெடுத்துவிடுவர் என்ற நம்பிக்கையில் லைசாந்தர் அடுத்த விசயத்தில் பார்வையை செலுத்தினார். லைசாந்தர் கிமு 396 இல் பாரசீகத்திற்கு எதிராக போர்த்தொடுக்க எசுபார்தன் மன்னரான இரண்டாம் அஜிசிலேயசை தூண்டினார். அதேசமயம் பாரசீக அரசர் இரண்டாம் அர்தக்செர்க்சசுக்கு எதிராக போராடும் தங்களுக்கு உதவ ஐயோனியர்களால் எசுபார்த்தன்கள் அழைக்கப்பட்டனர். போர்த்தொடரில் சேராத எசுபார்த்தன் படைகளின் தலைமைப் பொறுப்பைப் பெறுவதற்கு லைசாந்தர் நம்பிக்கையுடன் இருந்தார். இருப்பினும், லைசாந்தரின் ஆற்றல் மற்றும் செல்வாக்கின் மீது அஜிசிலேயஸ் கோபமடைந்தார். எனவே அஜிசிலேயஸ் தனது முன்னாள் வழிகாட்டியான லைசாந்தரை விரக்தியடையச் செய்தார். மேலும் எசுபார்த்தா மற்றும் கிரேக்கத்தின் பிரதான நிலப்பரப்பில் இருந்து ஹெலஸ்பாண்டில் உள்ள துருப்புக்களின் தலைமைக்கு லைசாந்தரை விட்டுவிட்டார்.

கிமு 395 வாக்கில் எசுபார்த்தாவுக்குத் திரும்பி, லைசாந்தர் தீப்ஸ் மற்றும் பிற கிரேக்க நகரங்களுடனான போரைத் தொடங்குவதில் முக்கிய பங்கு வகித்தார். இது கொரிந்தியப் போர் என்று அறியப்பட்டது. ஏதென்ஸ், தீப்ஸ், கொரிந்து, ஆர்கோஸ் (அகமனசியப் பேரரசின் ஆதரவுடன்) ஆகியவற்றின் புதிய கூட்டணிக்கு எதிராக எசுபார்த்தன்கள் ஒரு படையை அனுப்பத் தயாராகி, கிரேக்கத்திற்குத் திரும்புமாறு அஜிசிலேயசை அழைத்தனர். அஜிசிலேயஸ் தனது படைகளுடன் எசுபா்த்தாவுக்குப் புறப்பட்டார். அவர் ஹெலஸ்பாண்டைக் கடந்து மேற்கு நோக்கி திரேசு வழியாக அணிவகுத்துச் சென்றார்.

இறப்பு

[தொகு]

எசுபார்த்தன்கள் இரண்டு படைகளை ஏற்பாடு செய்தனர். ஒன்று லைசாந்தரின் தலைமையின் கீழும் மற்றொன்று ப���சானியாசின் தலைமையின் கீழும், போயோட்டியாவில் உள்ள ஹாலியார்டஸ் நகரத்தில் சந்திப்பதற்கும் தாக்குவதற்கும் தயாராயின. லைசாந்தர் பௌசானியாசுக்கு முன்னதாகவே வந்து ஆர்கோமெனஸ் நகரத்தை பொயோட்டியன் கூட்டணியில் இருந்து வெளியேறி கிளர்ச்சி செய்ய வற்புறுத்தினார். பின்னர் இவர் தனது படைகளுடன் ஹாலியார்டசுக்கு முன்னேறினார். ஹாலியார்டஸ் போரில், லைசாந்தர் நகரின் சுவர்களுக்கு அருகில் தனது படைகளைக் கொண்டு வந்தபோது எதிர்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

குறிப்புகள்

[தொகு]
  1. Donald Kagan, The Fall of the Athenian Empire, Cornell University, 1987, p. 300.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Plutarch, Lives. Life of Lysander. (University of Massachusetts பரணிடப்பட்டது 2005-02-04 at the வந்தவழி இயந்திரம்/Wikisource)
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 செனபோன், Hellenica. (Wikisource/Gutenberg Project)
  4. "Spartans, a new history", Nigel Kennell, 2010, p126
  5. "Spartans, a new history", Nigel Kennell, 2010, p127
  6. Bury, J. B.; Meiggs, Russell (1956). A history of Greece to the death of Alexander the Great. London: Macmillan. p. 515.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலைசாந்தர்&oldid=4149568" இலிருந்து மீள்விக்கப்பட்டது