முடிச்சு
முடி அல்லது முடிச்சு என்பது, கயிறு போன்ற நீளவடிவப் பொருள்களை ஏதொன்றையும் பொருத்துவதற்கு அல்லது பற்றுவதற்குப் பயன்படும் ஒரு வழிமுறை ஆகும். ஒரு முடிச்சில் ஒரே கயிறோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கயிறுகளோ பயன்படலாம். நூல்கள், இழைகள், முறுக்குக் கயிறுகள், பட்டிகள், சங்கிலி போன்றவற்றைப் பயன்படுத்தி முடிச்சுக்கள் இடமுடியும் (முடிய முடியும்). முடிச்சுக்களை மேற்குறிப்பிட்ட பொருள்களிலேயே இடலாம் அல்லது கழி, வளையம் போன்ற பிற பொருள்களை அவற்றினால் கட்டுவதற்குப் பயன்படுத்தலாம். முடிச்சுக்களை மனிதர் மிகப் பழங்காலம் தொட்டே பயன்படுத்தி வருகின்றனர். இதனாலும், இவற்றின் மிகப் பரவலான பயன்பாட்டுத் தன்மையினாலும், முடிச்சுக் கோட்பாடு போன்ற கணிதக் கோட்பாடுகளோடு இவற்றுக்குள்ள தொடர்பு காரணமாகவும் முடிச்சுக்கள் மீது எப்போதும் ஆர்வம் உள்ளது. முடிச்சுகளை சரியாகப் புரிந்துகொள்ளாமல் தவறாகப் பயன்படுத்த நேர்ந்தால் உயிரிழக்கும் படியான பெருந்தீங்கும் ஏற்படும் ஆகையால் முடிச்சுகளைப் பற்றி சரியான அறிவு தேவைப்படுகின்றது.
பயன்பாடு
[தொகு]முடிச்சுக்கள் பல வகையினவாகக் காணப்படுகின்றன. ஒவ்வொரு முடிச்சும் தனித்துவமான இயல்புகளைக் கொண்டிருப்பதுடன், வெவ்வேறு வகையான தேவைகளுக்கும் பொருத்தமானவையாக அமைகின்றன. சில வகையான முடிச்சுக்கள் இன்னொரு கயிறு, பிடிகட்டைகள், வளையங்கள் போன்றவற்றோடு இணைப்பதற்கு மிகவும் பொருத்தமானவை. வேறு சில இன்னொரு பொருளைச் சுற்றிக் கட்டுவதற்கோ இரண்டு பொருள்களை இணைப்பதற்கோ பயன்படத் தக்கனவாக உள்ளன. அழகு முடிச்சுக்கள் என்பன பொதுவாக நூல்கள், கயிறுகள் போன்ற பொருள்களில் இடப்பட்டுக் கவர்ச்சியான பொருள்களை உருவாக்கப் பயன்படுகின்றன. தேவைக்குத் தகுந்த முடிச்சுக்களைத் தெரிவு செய்வது முடிச்சுக்களைச் சர���யாகப் பயன்படுத்துவது முதன்மையான தேவையாகும்.
பழகுதல்
[தொகு]பெரும்பாலானவர்களைப் பொறுத்தவரை முடிச்சுக்களை இடுவதற்குச் சிறப்பான பயிற்சிகள் தேவைப்படுவதில்லை. அன்றாட தேவைகளுக்கு அவர்களுக்குப் பயன்படக்கூடிய முடிச்சுக்களை பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஆகியோரிடம் இருந்தே படிப்படியாகக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், தொழில் முதலியன சார்ந்த சிறப்புத் தேவைகளுக்கான முடிச்சுக்களை வேலை பழகும்போது பழகிக் கொள்கிறார்கள் அல்லது சிறப்பான பயிற்சி பெற்று பெற்றுக்கொள்கிறார்கள். கடலோடிகள், மீனவர், சாரணர், மலையேறுவோர், சிக்கலில் இருந்து உயிர்காப்போர் போன்றோர் சிறப்பான முடிச்சு வகைகளைப் பயன்படுத்தி வருவதுடன், இதற்கான திறமைகளைப் பரப்புவதிலும் இவர்களது பங்கு முக்கியமானதாக உள்ளது.
பல்வேறு வகையான முடிச்சுக்கள் தொடர்பான நூல்கள் வெளிவந்துள்ளன. 1944 ஆம் ஆண்டில் கிளிபர்ட் டபிள்யூ ஆசிலி என்பவர் எழுதி வெளியிட்ட த ஆழ்ச்லி புக் ஆவ் நாட்சு (The Ashley Book of Knots) என்ற நூலில் ஏறத்தாழ 2000 வகையான முடிச்சுக்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. தற்காலத்தில், இணையத்தில் முடிச்சுக்கள் பற்றி ஏராளமான தகவல்கள் காணப்படுகின்றன. இவை முடிச்சுக்களைப் பழக விரும்புபவர்களுக்கு மிகவும் பயன் தருவனவான உள்ளன.
பல்துறைப் பயன்பாடு
[தொகு]முடிச்சுக்கள் பல்வேறு வீட்டுத் தேவைகள், தொழிற்றுறை, பொழுதுபோக்கு மற்றும் பல தொழில்சார் தேவைகளில் பெரும் பயன்படுகின்றன. பொருட்களைப் பைகளில் போட்டுக் கட்டுவது முதல், அவற்றை வண்டிகளில் ஏற்றுதல், வண்டிகளில் அவற்றை அசையாமல் கட்டுதல், ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் கொண்டு செல்லல், போன்ற பலவற்றுக்கு முடிச்சுக்கள் தேவையாக உள்ளன. இவ்வேளைகளில் சரியான முடிச்சுக்களைப் போடாவிட்டால், இவ்வேலைகளைச் செய்வதில் இடர்களை எதிர்நோக்க வேண்டி இருக்கும். சுமையுந்துகளில் பாரமேற்றிச் செல்வோர், சுமைகளைக் கட்டுவதற்கு "சுமையுந்துக் கண்ணிமுடிச்சு" எனப்படும் முடிச்சைப் பயன்படுத்துவர்.
மலையேறுதல், கடலில் கப்பலோட்டுதல் போன்ற வேலைகளிலும் சிறப்பாகப் பயன்படக்கூடிய முடிச்சுக்கள் உள்ளன. இவை அந்தந்த வேலைகளில் நீணட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருபவை. இதனால், இத்தகைய முயற்சிகளில் ஈடுபட விரும்புபவர்கள் அத்துறைகளில் பயன்படுத்தப்படும் முடிச்சுகளை முயன்று பயில்கின்றனர். இது அத் தொழில்களுடன் சம்பந்தப்பட்ட தீவாய்ப்புடைய வேலைகளைப் பாதுகாப்பாகச் செய்ய உதவுகிறது. சரியான முடிச்சுகள் பாதுகாப்பைத் தருவது மட்டுமன்றி, சில வேளைகளில் கயிறுகளை வெட்டவேண்டிய தேவையையும் இல்லாமல் ஆக்குகின்றது.
இயல்புகள்
[தொகு]வலிமை
[தொகு]முடிச்சுகள் அவை இடம்பெறும் கயிறுகளின் வலிமையைக் குறைக்கின்றன. முடிச்சிடப்பட்ட கயிறுகளை இழுத்து அறும் நிலைக்குக் கொண்டுவரும்போது, முடிச்சுக்களுக்கு அருகிலேயே அவை பெரும்பாலும் அறுகின்றன. முடிச்சுக்களை உறுதியாக வைத்திருப்பதற்கு உதவும் விசைகளும் கயிற்றின் இழைகளைச் சமனற்ற முறையில் பாதிப்பதால் கயிறுகளின் வலு குறிப்பிடத்தக்க அளவு குறைகிறது. இவ்வாறு வலு குறைதல், அறுதல் ஆகியவற்றை ஏற்படுத்தும் பொறிமுறைகள் சிக்கலானவை. அவை குறித்த ஆய்வுகள் இன்னும் நடந்து வருகின்றன.
ஒப்பீட்டளவிலான முடிச்சுக்களின் வலிமை "முடிச்சுச் செயற்றிறன்" எனப்படுகின்றது. இது, முடிச்சிடப்பட்ட கயிற்றின் "அறும் வலிமை"க்கும், முடிச்சற்ற அதே வகைக் கயிற்றின் அறும் வலிமைக்கும் இடையிலான விகிதம் ஆகும். ஒரு முடிச்சின் முடிச்சுச் செயற்றிறனை அளப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. பல நிலைமைகள் முடிச்சுச் செயற்றிறனைப் பாதிப்பதனாலேயே இச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. கயிற்றை உருவாக்கும் இழைகள், கயிற்றின் வகை, கயிற்றின் விட்டம், அது உலர்வானதா ஈரமானதா?, எவ்வளவு வேகமாக முடிச்சில் சுமை ஏற்றப்படுகிறது?, முடிச்சு தொடர்ச்சியாகச் சுமையேற்றப்படுகிறதா? போன்றவை இத்தகைய நிலைமைகள் ஆகும். எனினும் பெரும்பாலான பொதுவான முடிச்சுகள் 40% க்கும் 80% க்கும் இடையிலான முடிச்சுச் செயற்றிறனைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன.
தடங்கள் அல்லது தொடுப்பு முடிச்சுக்களை ஏற்படுத்தும்போது சில இழைப்பின்னல் முடிச்சுக்கள் சில கயிற்றின் முழு வலிமையையும் தக்கவைத்துக் கொள்கின்றன. வழமையான முடிச்சுக்கள் பெரும்பாலான நிலைமைகளில் நடைமுறைச் சாத்தியமானவை. முடிச்சுக்களின் வலுக்குறைப்பு, நீண்டகாலப் பயன்பாடு, பழுதடைதல், அதிர்ச்சிச் சுமையேற்றம் ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய வலிமைக் குறைவை ஈடுகட்டும் வகையில், கயிறுகளைத் தெரிவு செய்யும்போது கூடிய காப்புவீதத்தைப் பயன்படுத்துவது உண்டு. கயிறுகளின் கணிக்கப்பட்ட அறும் வலிமையின் 10% - 20% அளவுக்கே பாதுகாப்பான செயல்நிலைப் பளு இருக்கும்படி வடிவமைக்கப்படுகின்றது.
பாதுகாப்பு
[தொகு]உயிர், உடலுறுப்புக்கள், சொத்து ஆகியவற்றின் பாதுகாப்புத் தொடர்பான நிலைமைகளில் முடிச்சுக்களைப் பயன்படுத்தும்போது பட்டறிவு வாய்ந்தவர்களின் கருத்து அறிந்து செயல்படுதல் மிகவும் தேவை. கயிறுகள் முடிச்சுகளில் அறாவிட்டாலும்கூட அதற்கு முன்னமே அவை அவிழ்ந்துவிடவும் கூடும். வழுக்குதல், கவிழ்தல் (பிறழ்தல்), சறுக்குதல் போன்ற வழிமுறைகளால் முடிச்சுகள் அவிழ்கின்றன. முடிச்சுகளின் உறுதிக்கு, முடிச்சின் அமைப்பு மட்டும் அல்லாமல் கயிற்றின் சொரசொரப்பு அல்லது உராய்வுப் பண்பு முதன்மையானவற்றுள் ஒன்று.
கூறுகள்
[தொகு]முடிச்சிடுதல் தொடர்பில் பல கூறுகள் உள்ளன:
- நிலைமுனை
- முடிச்சிடுவதில் தொடர்புபடாத கயிற்றின் முனையை "நிலைமுனை" (Standing end) என்பது குறிக்கும்.
- நிலைப்பகுதி
- நிலை முனைக்கும் முடிச்சுக்கும் இடைப்பட்ட கயிற்றின் பகுதியே "நிலைப்பகுதி" (Standing part).
- செயல்முனை
- முடிச்சிடும் போது செயற்படும் கயிற்றின் முனை "செயல்முனை" (Working end) ஆகும்.
- செயற்பகுதி
- செயல் முனைக்கும், முடிச்சுக்குக் இடைப்பட்ட கயிற்றின் பகுதி "செயல்பகுதி" (Working part) எனப்படும்.
- இடைப்பகுதி
- செயல் முனைக்கும், நிலை முனைக்கும் இடைப்பட்ட பகுதி "இடைப்பகுதி" (Bight) எனப்படும்.
- தடம்
- செயல்முனையை முழு வட்டமாகச் சுற்றி மீண்டும் கயிற்றுக்குக் குறுக்கே கொண்டுவருதல் "தடம்" (Loop) ஆகும். இதனைப் பயன்படுத்தி உருவாக்கும் முடிச்சுவகை ஒன்றும் தடம் எனப்படுகின்றது.
- முழங்கைத்தடம்
- தடம் ஒன்றில் கயிற்றின் பகுதிகள் சந்திக்கும் இடத்தில் கூடுதலாக ஒரு முறுக்கு ஏற்படுத்துவதன் மூலம் "முழங்கைத்தடம்" (Elbow) உருவாகிறது. கயிற்றுச் சந்திப்பில் இரண்டு முழங்கைகள் கொழுவியிருப்பதுபோல் இருப்பதால் இதற்கு இப்பெயர்.
- திருப்பம்
- ஒரு பொருளுக்குப் பின்புறமாக அல்லது அதனூடாகக் கயிற்றைச் சுற்றி மீண்டும் அதே திசைக்குக் கொண்டுவருவது திருப்பம் (Turn) ஆகும். திருப்பங்கள்,
- "ஒற்றைத் திருப்பம்",
- "ஒரு சுற்றுத் திருப்பம்",
- "இரு சுற்றுத் திருப்பம்"
- என அமையலாம் (அருகில் உள்ள படத்தைப் பார்க்கவும்).