உள்ளடக்கத்துக்குச் செல்

சூழல் மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சூழ்நிலைமண்டலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பவளப் பாறைகள் ஒரு கடல்சார் சூழல்மண்டலத்திற்குச் சிறந்த எடுத்துக்க்காட்டாகும்[1]
மழைக்காடுகள் சூழல்மண்டலம் உயிரியற் பல்வகைமையை அதிகளவில் கொண்டுள்ளது. Niokolo-Koba National Park இலுள்ள Gambia River ஐ இந்தப் படம் காட்டுகின்றது.

சூழல் மண்டலம் (ecosystem, இலங்கை வழக்கு: சூழற்றொகுதி) என்பது, ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியிலுள்ள உயிரற்ற இயற்பியல் கூறுகளுடன் ஒருமித்துச் செயற்படும் எல்லாத் தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள், நுண்ணுயிர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உயிரினங்களையும் இணைத்த ஒரு இயற்கை அலகு ஆகும்.

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தாங்கள் வாழும் இடத்தின் சூழலைப் பொறுத்து, ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் உயிருள்ள இனங்களும், உயிரற்ற இயற்பியல் கூறுகளும், அவற்றிற்கிடையிலான இடைவினைகளும் இணைந்து சூழல் மண்டலம் எனப்படும்.

1930 ஆம் ஆண்டில் ரோய் கிளஃபாம் (Roy Clapham) என்பவர், சூழலின் இயற்பியல் மற்றும் உயிரியல் கூறுகளை அவற்றிடையேயான தொடர்புகளுடன் சேர்த்து ஓரலகாகக் கருதும்போது பயன்படுத்துவதற்காக சூழல் மண்டலம் என்பதற்குச் சரியான ecosystem என்னும் ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார். பின்னர் 1935 இல் ஆர்தர் டான்ஸ்லே (Arthur Tansley) என்னும் பிரித்தானியச் சூழலியலாளர், இச் சொல்லை, ஒரு குறிப்பிட்ட உயிரினத் தொகுதிக்கும், அவை வாழும் சூழலுக்கும் இடையே உருவாக்கப்பட்ட ஒரு ஊடுதொடர்பு முறைமையைக் {interactive system} குறிக்கப் பயன்படுத்தினார்.

உயிரினங்கள் அவை வாழும் சூழலில் உள்ள பிற கூறுகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவருகின்றன என்ற கருத்தே சூழல் மண்டலம் என்னும் கருத்துருவின் அடிப்படையாகும். சூழல் மண்டலங்களை எண்ணற்ற வழிகளில் வரையறுத்து விளக்க முடியும் என்பதுடன் எங்கெங்கெல்லாம் உயிரினங்களுக்கும் அவற்றின் சூழலுக்கும் இடையே தொடர்பு உள்ளதோ அவற்றையும் சூழல் மண்டல அடிப்படையில் விபரிக்க முடியும். எனவே எடுத்துக்காட்டாக, ஒரு வீடு போன்ற மிகச் சிறிய அலகையோ அல்லது ஒரு முழு நாட்டைப் போன்ற பெரிய அலகையோ எடுத்து அதனை ஒரு மனிதச் சூழ்நிலைமண்டலமாக விளக்க முடியும்.

சூழல் மண்டல அமைப்பு

[தொகு]

சூழல் மண்டலம் உயிர்க் காரணிகள் மற்றும் உயிரற்ற காரணிகள் என்பவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.[2].

உயிர்க் காரணிகள்

[தொகு]

சூழ்நிலை மண்டலத்தில் உயிரினங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பின்றி வாழ இயலாது. ஒவ்வொரு விலங்கும் தான் வாழும் இடத்தில் இருக்கும் மற்ற உயிரினங்களை உணவாகக் கொண்டு வாழ்கின்றன. நுகர்வோராக இருக்கும் உயிரினங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உற்பத்தியாளர்களான பச்சைத் தாவரங்களைச் சார்ந்துள்ளன. அதேவேளை பூச்சிகள், பறவைகள் போன்ற விலங்குகளின் துணையைக் கொண்டு சில தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை, வித்துக்கள் பரம்பல் போன்ற செயல்கள் நடைபெறுகின்றன.

உயிரற்ற காரணிகள்

[தொகு]

சூரிய மண்டலத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களும், தமது உயிர்வாழ்வுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உயிரற்ற காரணிகளை சார்ந்திருக்கின்றன. உயிரற்ற காரணிகளாவன:

வகைகள்

[தொகு]

உயிர்/உயிரற்ற காரணிகள் உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள், சிதைப்பவைகள் என வகைப்படுகின்றன

உற்பத்தியாளர்கள்

[தொகு]

நீர், நில வாழ் தாவரங்கள் மற்றும் தாவர மிதவை உயிரினங்கள் ஆகியவை உற்பத்தியாளர்கள் ஆகும்.

நுகர்வோர்கள்

[தொகு]
  • முதல்நிலை நுகர்வோர்கள்

தாவரங்களை உண்ணக்கூடிய விலங்குகள் மற்றும் விலங்கு மிதவை உயிரிகள் முதல்நிலை நுகர்வோர்கள் ஆகும். எ.கா: மான்கள், சிறிய மீன்கள்.

  • இரண்டாம்நிலை நுகர்வோர்கள்

தாவரஉண்ணிகளை உண்ணக்கூடிய தவளை, ஓநாய் போன்ற உயிரினங்கள் இரண்டாம்நிலை நுகர்வோர்கள் ஆகும்.

  • மூன்றாம்நிலை நுகர்வோர்கள்

இரண்டாம்நிலை நுகர்வோர்களை உண்ணக்கூடிய மாமிச உண்ணிகளான கழுகு, சிங்கம், புலி போன்ற உயிரினங்கள் மூன்றாம்நிலை நுகர்வோர்கள் ஆகும்.

  • சிதைப்பவைகள்

இறந்த தாவர மற்றும் விலங்குகளின் உடலங்களை சிதைத்து அழிக்கக்கூடிய பாக்டீரியா, காளான் போன்ற நுண்ணுயிரிகள் சிதைப்பவைகள் ஆகும்[3].

சூழல் மண்டலச் செயல்பாடுகள்

[தொகு]

தாவரங்கள் தாங்களே தங்களுடைய உணவினை உருவாக்கிக்கொள்ளக் கூடியவையாக இருக்கின்றன. ஆயினும் அவை உணவை உருவாக்க மூலப் பொருட்களான நீர், ஒளி காபனீரொக்சைட்டு மற்றும் தாது உப்புக்கள் போன்ற உயிரற்ற காரணிகளையே முழுவதும் சார்ந்துள்ளன. விலங்குகள், தாவரங்கள் இறக்கின்ற பொழுது அவைகளின் உடல்கள் நுண்ணுயிர்களினால் சிதைமாற்றத்திற்கு (decomposition) உட்படுத்தப்படும்போது, கனிமச் சேர்வைகளாக மாற்றப்படும். இத்தகைய கனிமச் சேர்வைகள் தாவரங்கள் தமது உணவைத் தயாரித்துக் கொள்வதற்கு உதவுகின்றது.

இவ்வாறு உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் இடையே விரைவாக மாறுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமநிலை' இடம் பெறுகிறது. இத்தகைய அமைப்பு முறையே சூழல் மண்டலம் அல்லது சூழல் முறை ஆகும்.

சூழல் மண்டலங்களுக்கான எடுத்துக்காட்டுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hatcher, Bruce Gordon (1990). "Coral reef primary productivity. A hierarchy of pattern and process". Trends in Ecology and Evolution 5 (5): 149–155. doi:10.1016/0169-5347(90)90221-X. https://archive.org/details/sim_trends-in-ecology-evolution_1990_5_5/page/149. 
  2. 10 ம் வகுப்பு அறிவியல். சென்னை: தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் மேம்பாட்டுக் கழகம். p. 120.
  3. Walt Whitman. "The Ecosystem and how it relates to Sustainability". பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழல்_மண்டலம்&oldid=4053091" இலிருந்து மீள்விக்கப்பட்டது