அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)
அடி என்பது செய்யுள் உறுப்புகள் ஆறனுள் ஐந்தாவதாக அமைந்த ஒன்று ஆகும். ‘எழுத்து அசை, சீர், பந்தம், அடி, தொடை’ என்று அமிதசாகரரால் வைப்பு முறை சொல்லப்படுகின்றது. தமிழ்ப் பாக்களின் இலக்கணத்தைக் கூறும் யாப்பியல் நூல்கள், பாக்களின் உறுப்புகளாக, எழுத்து, அசை, சீர், அடி என்பவற்றைக் குறிப்பிடுகின்றன. எழுத்துகள் சேர்ந்து அசையும், அசைகள் சேர்ந்து சீரும், சீர்கள் சேர்ந்து அடியும் உருவாகின்றன.
விளக்கம்
[தொகு]மனிதன், விலங்கு முதலியன அடிகளால் நடக்கின்றன. நடக்கத் துணையாகும் அடியைப் ‘பாதம்’ என்கின்றோம். பாட்டும் அடியால் நடத்தல் ஒப்புமை பற்றிப் பாடலடியையும் அமிதசாகரர் ‘பாதம்’ என்கின்றார்.
“ | ‘... ... ... ; அத்தளை
அடுத்து நடத்தலின் அடியே; அடி இரண்டு தொடுத்துமன் சேறலின் தொடையே’ |
” |
என்னும் நூற்பா, ‘அடி’ என்றதன் பெயர்க்காரணத்துடன் அதன் விளக்கத்தையும் ஒருங்கே அறிவிப்பதாக அமைகிறது.
சீர்களின் தொடர் இயக்கத்தால் உண்டாகும் ஒலி ஒழுக்கை அல்லது ஒலிநடையைத் (Rhythm) தளை என்றால், சீர்கள் தொடர்ந்து இயங்கும் வடிவியக்கம் (concatenated on chain movement) அடி என்று சொல்லலாம் எனவும் அடிக்கு விளக்கம் தருகின்றனர். சுருக்கமாகச் ‘சீர்கள் தம்முள் தொடர்ந்து இயங்கும் செய்யுளியக்க அலகு அடி’ என்று சொல்லி வைக்கலாம்.
“ | "கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்"[1] |
” |
என்பது குறள் வெண்பா. இஃது, இரண்டு வரிகளால் ஆகியது என்று கூறக்கூடாது; இரண்டு அடிகளால் வந்தது என்றே கூறுதல் வேண்டும். இங்கு, அடி என்பது பாவின்அடி,
“ | ‘கற்றதனா லாய’ | ” |
என்பதில் இரண்டு சீர்கள் உள்ளன. இவை ஒரு தளையை உண்டாக்குகின்றன. ஒரு தளையை உண்டாக்குகின்ற இரண்டு சீர்களே பாவின் ஓரடியாகி நிரம்புவதும் உண்டு.
சான்று:
“ | ‘திரைத்த சாலிகை
நிரைத்த போல்நிறைந்(து) இரைப்ப தேன்களே விரைக்கொள் மாலையாய்’"[2] |
” |
இவ்வாறு வருவனவற்றைச் ‘சீர்அடி’ என்பர். சீர்கள் இரண்டினால் ஓரடி நிரம்பினால் அதைக் குறளடி என்றனர். சீர்கள் மூன்றினால் நிரம்பினால் அது சிந்தடி; சீர்கள் நான்கினால் நிரம்பினால் அளவடி அல்லது நேரடி; ஐந்தினால் நிரம்பினால் நெடிலடி; ஆறு, ஏழு, எட்டு என ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களால் நிரம்பினால் கழிநெடிலடி என்றனர் யாப்பிலக்கண நூலார். இவற்றையே சொல்லும்முறை மாற்றி இரண்டு சீர்களால் இயங்குவது குறளடி; மூன்று சீர்களால் இயங்குவது சிந்தடி; நான்கு சீர்களால் இயங்குவது அளவடி; ஐந்து சீர்களால் இயங்கும் அடி நெடிலடி; ஐந்துக்கும் மேற்பட்ட அடிகளால் இயங்கும் அடி, கழிநெடிலடி என்றும் கூறுவர்.
மேலும் யாப்பிலக்கண நூலார் சிலர், ஒருதளையான் வந்த அடி, ‘குறளடி’; இருதளையான் வந்த அடி ‘சிந்தடி’; மூன்று தளையான் வந்த அடி, அளவடி; நான்கு தளையான் வந்த அடி, நெடிலடி; நான்கு தளையின் மிக்கு ஐந்து தளையானும் ஆறு தளையானும் ஏழு தளையானும் வரும் அடி, கழிநெடிலடி என்றும் சொல்வதும் உண்டு.
“ | "குறள்ஒரு பந்தம்; இருதளை சிந்தாம்;
முத்தளை அளவடி; நால்தளை நெடிலடி; ஐந்தளை முதலா எழுதளை காறும் வந்தவும் பிறவும் கழிநெடில்; என்ப"[3] |
” |
இவ்வகையில் ‘சீரடி’ குறளடி, சிந்தடி,அளவடி(அ)நேரடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐந்து வகைப்படும்.
அடிகளின் உருவாக்கம்
[தொகு]- பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
- நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
- துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
- சங்கத் தமிழ்மூன்றுந் தா[4]
மேலேயுள்ள பாடலிலே ஒவ்வொரு வரியும் ஓர் அடியாகும். முதல் அடியானது 1. பாலும், 2. தெளிதேனும், 3. பாகும், 4. பருப்புமிவை என நான்கு பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் சீர் என அழைக்கப்படுகின்றது. இப்பாடலிலே முதல் மூன்று அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்துள்ளன. நான்காவது அடி மூன்று சீர்களால் அமைந்துள்ளது.
பொதுவாகப் பாடல்களின் அடிகளில் இரண்டு சீர்கள் முதல் பதினாறு சீர்கள் வரை காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு வெவ்வேறு எண்ணிக்கையான சீர்களைக் கொண்டு அமைந்த அடிகள் வெவ்வேறு பெயர்களினால் குறிப்பிடப்படுகின்றன. செய்யுள் அல்லது பாக்கள் யாவும் அடிகளைக் கொண்டு விளங்குபவையே. பாடலைச் சொல்லும் போது வரிகள் அல்லது சொற்கள் என்று கூறாமல், அடிகள், சீர்கள் என்றே விளிக்க வேண்டும். பொதுவாகப் பாவினங்களில் அடிகள் ஐந்து வகைப்படும்:
- குறளடி - இரண்டு சீர்கள் கொண்டது.
- சிந்தடி - மூன்று சீர்கள் கொண்டது.
- அளவடி - நான்கு சீர்கள் கொண்டது.
- நெடிலடி - ஐந்து சீர்கள் கொண்டது
- கழி நெடிலடி - ஆறு, ஏழு அல்லது எட்டு சீர்களைக் கொண்டது.
- இடையாகு கழி நெடிலடி - ஒன்பது அல்லது பத்து சீர்களைக் கொண்டது.
- கடையாகு கழி நெடிலடி - 11 முதல் 16 வரையான எண்ணிக்கைகளில் சீர்களைக் கொண்டது.