பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/8

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருளதிகாரம் - களவியல்

மணம் எட்டனுள்ளும் துறையமை நல்யாழினை யுடையராகிய துணைமையோர் நெறி என்றவாறு.

மறையோர் என்றது அந்தணரை. தேஎம் என்றது அவரதாகிய நூலை. மணம் எட்டாவன: பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்திருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்பன. பிரமமாவது, கன்னியை அணிகலனணிந்து பிரமசாரியா யிருப்பானொருவனுக்குத் தானமாகக் கொடுப்பது. பிரசாபத்தியமாவது, மகட்கோடற் குரிய கோத்திரத்தார் மகள் வேண்டியவழி இருமுது குரவரும் இயைந்து கொடுப்பது. ஆரிடமாவது, ஒன்றானும் இரண்டானும் ஆவும் ஆனேறும் வாங்கிக்கொடுப்பது. தெய்வமாவது வேள்விக்கு ஆசிரியராய் நின்றார் பலருள்ளும் ஒருவற்கு வேள்வித்தீ முன்னர்க் கொடுப்பது. காந்திருவமாவது ஒத்த இருவர் தாமே கூடுங்கூட்டம். அசுரமானது, வில்லேற்றினானாதல் திரிபன்றி யெய்தானாதல் கோடற்குரியனெனக் கூறியவழி அது செய்தாற்குக் கொடுத்தல். இராக்கதமாவது, தலைமகள் தன்னினும் தமரினும் பெறாது வலிதிற்கொள்வது. பைசாசமாவது, களித்தார் மாட்டுந் துயின்றார்மாட்டுங் கூடுதல்.

“அறனிலை யொப்பே பொருள்கோ டெய்வம்
யாழோர் கூட்ட மரும்பொருள் வினையே
யிராக்கதம் பேய்நிலை யென்றிக் கூறிய
மறையோர் மன்ற லெட்டவை யவற்றுட்
டுறையமை நல்யாழ்த் துணைமையோர் புணர்ப்பினதன்
பொருண்மை யென்மனார் புலமை யோரே.”

என்பதனானுங் கொள்க. துறையமை நல்யாழ்த் துணைமையோராவார் கந்திருவர். அவர் இருவராகித் திரிதலின் துணைமையோர் என்றார். துணையன்பாவது அவர் ஒழுகலா றோடொத்து மக்கண்மாட்டு நிகழ்வது. ஈண்டுக் காமக்கூட்டமென வோதப்பட்டது மணவிகற்பமாகிய வெட்டனுள்ளும் கந்திருவமென்றவாறு. மாலைசூட்டல் யாதனுள் அடங்குமெனின், அதுவும் ஒத்த அன்பினராய் நிகழ்தலிற் கந்திருவப்பாற்படும்.

அறனும் பொருளு மின்பமும் என்னாது, இன்பமும் பொருளும் அறனும் என்றது என்னை[எனின்], பலவகை யுயிர்கட்கும் வரும் இன்பம் இருவகைப்படும். அவையாவன, போக நுகர்தலும் வீடுபெறுதலும் என. அவற்றுள் வீடுபேறு துறவறத்தினின்றார்க் கல்லது எய்தல் அரிதாயிற்று. போக நுகர்தல் மனையறத்தார்க் கெய்துவது. அவரெய்தும் இன்பமும் அவ்வின்பத்திற்குக் காரணமாகிய பொருளும் அப்பொருட்குக் காரணமாகிய அறனும் எனக்காரிய காரணம் நோக்கிவைத்தார் என்க.

இதனாற் சொல்லியது ஈண்டுக்களவென்றோதப் படுகின்ற ஒழுக்கம் அறம்பயவாத புறநெறி யன்று; வேதவிதியாகிய தந்திரம் என விகற்பமாகிய நெறி கூறியவாறு.

(க)

௯௰.ஒன்றே வேறே யென்றிரு பால்வயி
னொன்றி யுயர்ந்த பால தாணையி
னொத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப
மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே.

என்—னின், இது காமக்கூட்டத்தின்கண் தலைமகனும் தலைமகளும் எதிர்ப்படுந்திறனும் அதற்குக் காரணமும் உணர்த்துதல் நுதலிற்று.

ஒன்றே வேறே என்றிரு பால்வயின் என்பது—ஒருவனும் ஒருத்தியுமாக இல்லறஞ் செய்துழி, அவ்விருவரையும் மறுபிறப்பினும் ஒன்றுவித்தலும் வேறாக்குதலுமாகிய இருவகை ஊழினும் என்றவாறு.


1. ‘துணை...யல்பாவது’ என்றிருத்தல் வேண்டும் போலும்.