பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சத்து நிறைந்த பாலையே
தந்து காக்கும் ஆட்டினைக்
கத்தக் கத்த அறுத்துநாம்
களித்துத் தின்ன லாகுமோ?

கூவி நம்மை எழுப்பிடும்
கோழி நல்ல பறவையாம்.
ஆவி போக அதனைநாம்
அறுத்துத் தின்ன லாகுமோ?

தாகம் தீர்க்கும் நீரிலே
தங்கி நிற்கும் அழுக்கினைப்
போகச் செய்யும் மீன்களைப்
பிடித்துத் தின்ன லாகுமோ?

சாது வான உயிர்களைச்
சாக டித்துத் தின்பதோ ?
போதும், போதும், இன்றேநாம்
புத்தர் வழியில் செல்லுவோம்.


120