பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
68 ||

அப்பாத்துரையம் - 6



இதற்கிடையில் 1940-இல் அவர் தேசப்பணியிலீடுபட்டுக் காலவரையறையின்றிச் சிறைப்பட்டார். உண்ணாநோன்பின் மூலம் அரசியலாரையே பணிய வைத்து வெளியேறிய பின் இந்தியாவிலிருந்து வெளியேறி மாஸ்கோ செல்ல எண்ணினார். அவ்வாண்டு டிசம்பரில் போவதாக எண்ணிக் காபூலில் அதற்கான ஏற்பாடுகள் செய்யும்படி அங்குள்ள நண்பர்களுக்கு எழுதியிருந்தார். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் புறப்பட இரண்டு தடைகள் ஏற்பட்டன. ஒன்று கல்கத்தா நகர சபைக்கு அவர் பொறுப்பான சில காரியங்களில் உதவி செய்ய வேண்டியிருந்தது. மற்றொரு தடை அவர் வெளிச் செல்லுவதற்கான மாற்றுருவிற்கு இயற்கைத்தாடி வளர்ப்பது அவசியமாயிருந்தது. தாடி வளர்ப்பதற்குக் குறைந்தது ஆறு மாதம் வேண்டியிருந்தது.

மாய மறைவு

விடுதலை பெற்ற போஸ் கல்கத்தா எல்ஜின் ரோடிலுள்ள தம் வீட்டில் தங்கினார். சமய வழிபாட்டில் முழு நேரமும் ஈடுபடப்போவதால் எவரும் தம்மைப் பார்க்கக் கூடாது என்று திட்டப்படுத்தித் தனியறையிலேயே இரவும் பகலும் கழித்து வந்தார். படிப்படியாகப் பிறருடன் கடிதப் போக்குவரவு, தொலைபேசியில் பேசுவது ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டார். உணவு கொண்டு வருபவரும் வெளியே வைத்து விட்டுப் போய்விட வேண்டும். போஸ் அரசியலில் மன மலுத்து அரவிந்தர் போல் சமயப் பணியிலிறங்கிவிட்டார் என்ற எண்ணம் பரவிற்று. இதற்கிடையே திடீரென ஒருநாள் போஸ் காணாமற் போய்விட்டார் என்ற செய்தி எங்கும் பரவிற்று. பல நாளாகியும் வல்லமை மிக்க அரசாங்கப் போலீசார் அரித்துத் தேடியும் எவ்விதப் பலனும் கிட்டவில்லை. கல்லூரி வாழ்வில் துறவியாக இமயமலைக்குப் போனது போலவே போயிருப்பார் என்றே யாவரும் முடிவு செய்தனர். ஆனால் அரசியலார் மட்டும் அவர் இந்தியாவைவிட்டு வெளியே போய்விட்டார் என்றும், நாஜியர்களுடன் கூட்டாக வேலை செய்கிறார் என்றும் கூறி வந்தனர். முதலில் நாட்டு மக்கள் இதனை நம்பக்கூடவில்லை. இஃது எதிர்பார்க்கத் தக்கதே. ஆனால் நாளடைவில் இஃது ஓரளவு உறுதிப்பட்டது.