306
அப்பாத்துரையம் - 10
திட்ட வேலையை மேற்பார்வையிடவும் அறிவுரை கூறவும் சைமன் சங்கத்தார் மூவரடங்கிய ஒரு வல்லுநர் குழு அமைத்தனர். மூவரும் மூன்று நாட்டுக்குரியவர்கள்.திட்டத்தின் நிலப்பகுதியின் மூன்று அரங்கங்கள் அம்மூவர் பொறுப்பிலும் விடப்பட்டிருந்தன. நெக்ரெல்லி என்ற ஆஸ்டிரியர் நடுநிலக் கடற் பக்கமுள்ள வட அரங்கத்துக்கும், ராபர்ட் ஸ்டீபென்சன் என்ற ஆங்கிலேயர் செங்கடற் பக்கமுள்ள தென் அரங்கத்துக்கும், பாலின் தலபாட் என்ற பிரஞ்சுக்காரர் நடுவரங்கத்துக்கும் பொறுப்பளராக்கப் பட்டனர். திட்ட முன்னேற்பாடுகள் இவ்வாறு வெற்றிகரமாக விரைந்தன. ஆனால் அரசியல் சூழ்நிலைகள் அதை மேலே செல்லவிடாமல் தடுத்தன.
பிரான்சும் ஆஸ்டிரியாவும் இந்த அறவோர் சங்கத் திட்டத்துக்கு ஆதரவளித்தன. ஆனால் பிரிட்டன் கடலிணைப்பில் முற்றிலும் இரண்டக நிலையே கொண்டிருந்தது. அது கடலிணைப்பில் தானும் நம்பிக்கை கொள்ளவில்லை. அதே சமயம் பிறர் அதை மேற்கொள்ளவும் விடவில்லை. ஏனெனில் நன்னம்பிக்கை முனை வழிக்கு மாற்று வழி அமைவதையோ, நடுவுலகருகே வேறு எந்த வல்லரசும் வலுப்பெற்று விடுவதையோ அது விரும்பவில்லை. இக்காரணங்களால் அது கடற்கால் திட்டத்துக்கு எதிர்த்திட்டமாக அலெக்ஸாண்டிரியா - கெய்ரோ இருப்புப் பாதைத் திட்டம் ஒன்று வகுத்து அதற்கு 1834ஆம் ஆண்டு பாஷாவிடம் உரிமை பெற்றிருந்தது. கடற்கால் திட்டத்தைக் கெடுத்து இதை நிறைவேற்ற அது பாடுபட்டது.
இச்சமயம் பாஷா முகமத் அலி 80 வயதுடையவரா யிருந்தார். அவர் துணிந்து அரசியலில் எப்பக்கமும் சாயாமல், கடற்கால் திட்டம், இருப்புப் பாதைத் திட்டம் ஆகிய இரண்டுக்குமே இசை வளிக்காமல் காலங் கடத்தி வந்தார். ஆனால் 1849இல் அவர் மறைவுக்குப் பின் அடுத்து வந்த பாஷா அப்பாஸ் பிரிட்டிஷார் பக்கமே சாய்ந்தார். இதனால் இருப்புப்பாதைத் திறக்கப்பட்டது.கடற்கால் திட்டத்துக்கு விடிவு ஏற்படாமல் அது பின்னும் தூங்கிக் கொண்டிருந்தது.
தூய திரு சைமன் சங்கத்தினரின் ஆர்வத்திட்டம் பிரிட்டனின் எதிர்ப்பால் இவ்வாறு கருவிலே முறிவுற்றாலும்,