குடியாட்சி
123
வாணிகக் கழகத்தார் மூலம் பிரிட்டிஷார் நேரடியாகக் கைப்பற்றிய இடங்கள் மாகாணங்களாகவும் துணை மாகாணங் களாகவும் வகுக்கப்பட்டன. தொடக்கத்தில் மூன்று மாகாணங் களும், இந்தியா முற்றும் ஆட்சி பரந்தபின் மாகாணங்கள் பத்தாகவும் ஆயின. அண்மையில் 1939-இல் பர்மா தனி நாடாகப் பிரிவுற்றது. அதற்கிடையே ஒரிஸா, வடமேற்கு எல்லைப்புறம் ஆகியவை சேர்க்கப்பட்டு இப்போது 11 முதல் மாகாணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தில்லி நகரமும் குடகும் தனி
மாகாணங்களாக விளங்குகின்றன.
பிரிட்டிஷார் ஆட்சியில் நேரடியாகச் சேராமல் பழைய மன்னர்கள் ஆட்சியிலேயே நின்ற பகுதிகள் உண்டு. அம் மன்னர்கள் பிரிட்டிஷ் மன்னர் பிரானுடன் பலபடியான உடன்படிக்கைகள் வகுத்துப் பேரரசின் கீழ்ப்பட்ட சிறு மன்னர்களாய் ஆள்கின்றனர். அவர்கள் ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டதாயினும் இந்தியாவிலிருந்து பிரிந்த ஆட்சியாகும். இவர்கள் ஆளும் பகுதியைச் சிலர் சிறப்புப்பட இந்திய இந்தியா என்று விதந்து கூறுவர். ஆனால் உண்மையில் இந்திய இந்தியா என்பதைவிட இந்திய இந்தியாக்கள் எனப்படுவதே பொருத்தம். ஏனெனில் அவற்றின் அரசியல் ஒருவகைப்பட்டது அன்று. சிறிதும் பெரிதுமான இவற்றின் தொகை ஏழு நூற்றுக்குமேலாகும்.
நேசநாடு, துணை மன்னர்கள் நாடு, பிரிட்டிஷ் இந்திய மாகாணங்கள் ஆகிய இவை எல்லாவற்றிலிருந்தும் வேறாகப் பழைய பண்படா மலைக் குடிகள் பகுதிகள் ஓர் ஆணையாளர் தலைமையில் நேரடியாக மன்னர்பிரான் ஆட்பெயரின் ஆட்சியிலிருக்கின்றன. இந்தியாவை அடுத்த நாடுகளிடையே பர்மா, பலுச்சித்தானம், இலங்கை, ஏடன் துறைமுகம் ஆகியவை பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டன. இவற்றுள் பலுச்சிஸ்தானம் ஒரு துணை மன்னர் ஆட்சியிலுள்ளது. பர்மா முதலிய பிரிட்டிஷ் இந்திய மாகாணங்களுள் ஒன்றாகிப் பின் தனி நாடாயிற்று என்பது கூறப்பட்டது. இலங்கை ஒரு தலைவர் ஆட்சியுட்பட்டு இந்தியப் பேரரசுடன் இணைந்தாலும் நேரடியாக மன்னர் பிரானுடன் தொடர்புடைய குடியேற்றமாய் விளங்குகிறது. அராபிக் கடலிலும் வங்கக்குடாவிலும் உள்ள தீவுகளும் இதுபோல் நேரடியான ஆட்சி உடையவை.