ஷோவான நாராயண்

இந்திய கதக் நடனக்கலைஞர்

ஷோவான நாராயண் (Shovana Narayan) என்பவர் ஒரு பிரபலமான இந்திய கதக் நடனக் கலைஞர் ஆவார். கதக் கலைஞரான இவர், இந்திய தணிக்கை மற்றும் கணக்கு பணி அதிகாரியாகவும், பணியாற்றினார். இவர் இந்தியாவிலும் உலகெங்கிலும் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார். மேலும் இவருக்கு இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டுள்ளது.[1] இவரது குரு பிர்ஜு மகாராஜ் ஆவார்.[2]

ஷோவான நாராயண்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு2 செப்டம்பர் 1950 (1950-09-02) (அகவை 74)
இந்தியா, மேற்கு வங்காளம்
தொழில்(கள்)நடனக் கலைஞர்
இசைத்துறையில்1970-தற்போதுவரை

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

நாராயண் இந்தியாவின் தில்லியில் உள்ள மிராண்டா ஹவுஸில் 1972 இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2008 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் எம்ஃபில் மற்றும் 2001 இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியலில் எம்.பில் ஆகியவற்றை முடித்தார். இவர் இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவைக்கான தொழில் அதிகாரியாகவும் பணியாற்றி [3] 2010 இல் ஓய்வு பெற்றார். இவர் இந்தியாவின் ஆஸ்திரிய தூதர் (ஓய்வு பெற்றவர்) டாக்டர் ஹெர்பர்ட் ட்ராக்ஸை மணந்தார்.[4]

நடன வாழ்க்கையில் சாதனைகள்

தொகு

' நிகழ்த்துநர், ஆசிரியர்' என்ற முறையில், ஷோவானா நாராயண் இந்தியாவின் தற்காலத்தின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் சிறந்த கதக் வல்லுனர்களில் ஒருவர்; நடன இயக்குநர் மற்றும் கலைஞர் என நன்கு அறியப்பட்டவர். இவர் ஆடல் கலையில் தனது தடத்தை ஆழமாகவும், முதிர்ச்சியுடனும் பதித்துள்ளார். இவர் மதிப்புமிக்க பல தேசிய மற்றும் சர்வதேச விழாக்களில் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்துள்ளார். இவர் பல நாட்டு மற்றும் அரசு தலைவர்களின் முன்னிலையில் ஆடலை நிகழ்த்தினார். மேலும் பல கதக் கலைஞர்களுக்கு பயிற்சியளித்துள்ளார். அவர்களில் சிலர் இளம் தலைமுறையின் முன்னணி கலைஞர்களாக உள்ளனர்.

ஒரு ' நடன இயக்குநர்-நிகழ்த்துநராக', ஷோவானா நாராயண், மேற்கத்திய செவ்வியல் பாலே, ஸ்பானிஷ் ஃபிளமெங்கோ, காற் கொட்டுத் தாள நடனம், பௌத்த பிக்குகளுடனான பௌத்த மந்திரங்கள் மற்றும் மேற்கத்திய செவ்வியல் இசை இசையமைப்பாளர்களுடன் சர்வதேச ஒத்துழைப்பு படைப்புகளை முன்னெடுத்து தயாரித்துள்ளார். 1994 இல் "தி டான் ஆஃப்டர்" இல் மேறகத்திய செவ்வியல் நடனம்-கதக்-ஸ்பானிஷ் ஃபிளமெங்கோ சம்பந்தப்பட்ட முதல் முத்தொகுப்பின் படைப்புத்திற இயக்குநர்-தயாரிப்பாளர்-நடனக் கலைஞராக இருந்தார். புது தில்லியில் 2003 ஆண்டு நடைபெற்ற 6 வது அபிலிம்பிக்சின் துவக்க மற்றும் நிறைவு விழாக்களின் படைப்புத்திற இயக்குநராகவும் இருந்தார். 2010 ஆம் ஆண்டில் தில்லியின் காமன்வெல்த் விளையாட்டு துவக்க மற்றும் நிறைவு விழாக்களை சிறப்பாக வழங்கினார். பல இந்திய செவ்வியல் நடன பாணிகளின் முன்னணி நடனக் கலைஞர்களுடன் பல இணைந்து பல படைப்புகளை இவர் முன்னெடுத்து வந்துள்ளார். படைப்புத்திற இயக்குநர்-தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

ஷோவானா தொண்டுள்ளம்படைத்த ஒரு நடனக் கலைஞர் ஆவார். இவர் கார்கில் போர், ஆழிப்பேரலை மற்றும் பீகார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ முயற்சித்தார். இவர் பெண்கள் பிரச்சினைகள் மற்றும் பிற சமூகப் பிரச்சினைகள் குறித்த கருத்தியல் சார்ந்த கூட்டு நடனங்களை ஆடியுள்ளார்.

ஆய்வு மற்றும் திரைப்படங்கள்

தொகு

கயாவுக்கு அருகிலுள்ள 8 கதக் கிராமங்களை ஆவணப்படம் மற்றும் அதிகாரப்பூர்வ பதிவுகளுடன் ஷோவானா ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளார். இவர் சமஸ்கிருதம் மற்றும் கல்வெட்டுத் துறை அறிஞரான டாக்டர் கே. கே. மிஸ்ராவின் ஒத்துழைப்புடன், கிமு 4 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தின் கதக் தொடர்பான அசோகன்-பிராமி எழுத்துக்களில் பிரகிருத கல்வெட்டைக் கண்டுபிடித்தார். 'Dance of the Temples' என்ற தலைப்பில் அழியாத கஜுராஹோ கோயில்களின் தத்துவம் மற்றும் தொன்மத்தைப் பற்றிய ஒரு நடன கானொளியை வெளியே கொண்டு வந்த முதல் நடனக் கலைஞர் இவர். "அக்பர்ஸ் பிரிட்ஜ்" (இந்தி) மற்றும் "தாஸ் கெஹெய்ம்னிஸ் டெஸ் இண்டிசெஸ் டான்ஸ்" (ஜெர்மன்) போன்ற படங்களில் முன்னணி பாத்திரமேற்று நடித்துள்ளார்.

ஆழ்ந்த ஆராய்ச்சியுடன் 80 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை பல தேசிய செய்தித்தாள்கள், பத்திரிகைகள் போன்றவற்றில் வெளியிட்டுள்ளார். அதாவது டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி ட்ரிப்யூன், தி ஆசியன் ஏஜ், சங்கீத நாடக அகாடமி, ராஜஸ்தான் பல்கலைக்கழகம், யுனெஸ்கோ மற்றும் பல இதழ்களில்.

புத்தகங்கள்

தொகு
ஷோவன நாராயண் எழுதிய புத்தகங்கள்
ஷோவான நாராயண் பற்றியவை

பெற்ற விருதுகள் மற்றும் கௌரவங்கள்

தொகு
  • பத்மசிறீ, 1992
  • சங்கீத நாடக அகாதமி விருது 1999–2000
  • டெல்லி அரசின் பரிஷத் சம்மன்
  • ராஜீவ் ஸ்மிருதி புராஸ்கர்
  • பீகார் கௌரவ் புராஸ்கர், 1985
  • இந்திரா பிரியதர்ஷினி சம்மன்
  • ராஜதானி ரத்னா விருது
  • சிருங்கர் ஷிரோமணி விருது
  • ரோட்டரி சர்வதேச விருது
  • பாரத் நிர்மன் விருது
  • தேசிய ஒருங்கிணைப்பு விருது
  • ஓஸ்கா விருது (ஜப்பான்), 1990-91
  • தாதாபாய் நௌரோஜி விருது, 1993
  • கெல்வினேட்டரின் ஜிஆர்எஸ் விருது
  • எப்ஐசிசிஐ இன் பெலோ விருது

குறிப்புகள்

தொகு
  1. "Famous Kathak Dancers". Bhavalaya. Archived from the original on 23 April 2012. பார்க்கப்பட்ட நாள் 25 January 2012.
  2. "Shovana Narayan Biography | Childhood, Family, Contribution to Kathak Dance, Facts". www.culturalindia.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-07.
  3. "Shovana Narayan". Miranda House's website. Archived from the original on 23 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Raising a Daughter.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷோவான_நாராயண்&oldid=4161435" இலிருந்து மீள்விக்கப்பட்டது