வைணவ சமயம்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
வைணவ சமயம் (ஆங்கிலம்: Vaishnavism) விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம். வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படும் இச்சமயம் இந்து சமயத்தின் ஆறு உட்பிரிவுகளுள் ஒன்றாகும். உலகில் தீமைகள் ஓங்கும் போது காக்கும் கடவுளான விஷ்ணு, மனித வடிவில் அவதாரம் எடுத்து அவற்றை அழித்து நல்லவரைக் காப்பார் என்பது வைணவர் நம்பிக்கை. வைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்கவையான மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசாவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உபநிடதங்களில் 14[சான்று தேவை] வைணவ உபநிடதங்களாகும்.
வைணவ சமயத்தின் முக்கிய நூல்கள் வேதம், உபனிஷத்து, பகவத் கீதை, பஞ்சரந்தர ஆகமம், மகாபாரதம், இராமாயணம், பாகவதம், விஷ்ணு, கருட, நாரதிய, பத்ம, வராக புராணங்கள் ஆகும்.
குப்தர் காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்த வைணவம் தெற்காசியா முழுவதும் பரவியிருந்தது.[1]
வைணவ தத்துவம்
தொகுஇராமானுஜர் விளக்கிய விசிஷ்டாத்துவைதம் என்ற தத்துவத்தில் ஆதி பரம்பொருள் நாராயணன் என்ற திருமாலே. அவன்தான் உபநிடதங்கள் கூறும் பிரம்மம். அவன் குணம் என்ற குன்றேறித் தாண்டியவன் என்று உபநிடதங்கள் கூறுவதன் உட்பொருள் அவனிடம் எல்லா நல்ல குணங்களும் இருக்கின்றன என்பதாம். அறம், ஞானம், சக்தி, அன்பு இவை யாவும் முடிவிலாத அளவுக்கு அவனிடம் உள்ளன. அவன் உயிரினங்களிடம் வைத்திருக்கும் எல்லையற்ற கருணையினால் அவ்வப்பொழுது அவதரித்து இடர் போக்கி தன்னுடன் சேர்ந்துகொள்ள வழி வகுக்கிறான். பிரம்மமும் சிவனும் உயிரும் உடலும் போல. சிவர்களனைவரும், மற்றும் பிரபஞ்சமனைத்தும் பிரம்மத்தின் உடலாகும்.
இதற்கு பிரமாணம் பிருகதாரண்யக உபநிடத்து (3-7-22):
யோ விஞ்ஞானே திஷ்டன், விஞ்ஞானாதந்தர:, யம் விஞ்ஞானம் ந வேத யசிய விஞ்ஞானம் சரீரம் யோ விஞ்ஞானமந்தரோ யமயதி ஏட்ஷ ஆத்மா அந்தர்யாம்யம்ருத:.
இதன் பொருள்: எவன் அறிவுக்குள் உறைபவனோ, அறிவுக்குள் அறிவாக இருப்பவனோ, எவனை அறிவும் அறியமுடியாதோ, எவனுக்கு அறிவே உடலோ, எவன் அறிவையும் உள்ளிருந்து ஆட்டிவைப்பவனோ அவன்தான் இவ்வான்மா, அழியாமல் உள்ளுறைபவன்.
உயிரும் உடலும் வெவ்வேறானதால் பிரம்மத்திற்கு தன்னுள் வேற்றுமை (சுவகத பேதம்) உண்டு. ஆனால் வேறு வேற்றுமைகள் கிடையா. பிரம்மத்திற்கு சமானமான வேறு உண்மைகள் இல்லை. அதனால் பிரம்மத்தினிடத்தில் செசாதீய பேதம் என்று கூறப்படும் பகுப்புக்குள்ளிட்ட வேற்றுமை கிடையாது. பகுப்புக்கும் பகுப்புக்கும் உள்ள வேற்றுமையும் (விசாதீய பேதம்) கிடையாது; ஏனென்றால் வேறு ஒரு பகுப்பு அறவே இல்லை. இதனால் இதுவும் ஒருவித அத்துவைதம் (இரண்டற்றது)தான். பிரம்மத்தினிடம் குணம் என்ற தன்மை உள்ளதா இல்லையா என்ற ஒரு ஆழமான கேள்வியின் இருவேறு விடைகள்தாம் இதை அத்வைதக் கோட்பாட்டிலிருந்து வேறுபடுத்துகிறது. அதனால் இராமானுஜரின் இக்கோட்பாட்டிற்கு விசிஷ்ட்டாத்வைதம் (விசிஷ்ட்டமான அத்வைதம்) என்று பெயர். விசிஷ்ட்டம் என்றால் சிறப்புற்ற என்று பொருள்.
ஶ்ரீ
தொகுவிசிஷ்ட்டாத்வைதத்தில் ஶ்ரீ என்ற அன்னை தத்துவம் மையத்திலுள்ளது. இதனால் தான் இந்த சமயப் பிரிவுக்கே ஶ்ரீவைணவம் என்ற பெயர். அன்னை தத்துவத்தை "தாயார்" என்று வைணவர்கள் அன்பொழுக அழைப்பர். இராமானுஜருடைய எல்லா நூல்களிலும் (முழுவதும் வேதாந்தம் பேசும் ஶ்ரீபாஷ்யத்தைத் தவிர) ஶ்ரீ என்ற மகாலட்சுமி, திருமாலின் மார்பில் அவருடன் என்றும் இருப்பதாகவே பேசப்படும். யாண்டும் கூட இருப்பவள் என்று பொருள்படும் அனபாயினி என்ற வடமொழிச் சொல்லை அடிக்கடி காணலாம். இராமானுஜருக்குப் பின் வந்தவர்கள் அன்னை ஶ்ரீயின் அருள் இல்லாமல் பெருமாளிடம் நம் வேண்டுதல் செல்லாது என்பர். அதனாலேயே இன்றும் வைணவத் திருக்கோயில்களில் ஆசாரியனை சேவித்த பின் தாயாரான திருமகளை சேவித்து அதன் பின்னரே கோயில் மூலவரை சேவிக்கும் வழக்கமுள்ளது.
வைணவத்தில் மோட்சம்
தொகுபடைத்தல் ஒரு மாயையல்ல; அது கடவுளின் ஓர் உண்மையான செய்கை. உலகப்பொருள், சீவன், ஈசன் ஆகிய மூன்று தத்துவங்களும் மூன்று படிகளிலுள்ள உண்மைகள். கீழ்ப்படியிலுள்ள பொருள் அறிவற்றது. சீவன் அறிவுள்ளது. ஆனால் இரண்டும் கடவுளுடைய எள்ளத்தனை பாகமே. மனிதனுடைய புலன்கள் கீழ்ப்படியில் உறையும் பொருள்களின் பலவித சேர்க்கையே. சீவர்கள் இப்புலன்களின் உந்துதலாலும் உதவியாலும் பொருள்களை அனுபவிக்கின்றன. அவர்களுடைய முந்தைய பிறவிகளில் செய்த தீவினை, நல்வினையைப் பொறுத்து அவர்களுக்கு பயன்களைக் கொடுத்து ஆள்பவன் ஈசன். மோட்சம் என்பது ஈசனான நாராயணனுடன் வைகுண்டத்தில் வசிப்பதே.
வைணவத்தில் முக்தியின் வகைகள் நான்கு என்று புராணங்கள் கூறுகிறது. அவைகள்: சாலோக்கியம், சாயுச்சியம், சாமீப்பியம் மற்றும் சாரூப்பியம் ஆகும்.
- சாலோக்கியம்: திருமாலின் வைகுந்த உலகத்தை அடைந்து தொண்டு செய்தல்.
- சாமீப்பியம்: திருமாலின் வைகுந்த உலகத்தை அடைவதோடு அல்லாமல், திருமாலின் அருகாமையில் இருந்து தொண்டாற்றும் பேறு.
- சாரூப்பியம்: திருமாலின் திருவுருவத்தையும், சின்னங்களையும் பெற்று, இறைவனுக்கு தொண்டு செய்தல்.
- சாயுச்சியம்: திருமாலுடன் ஒன்று படுதல். ஜீவாத்மா - பரமாத்மா ஐக்கிய நிலையை குறிப்பது.
வைணவத்தில் கடவுள்
தொகுஇறைவனுக்கெல்லாம் இறைவன் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணன் என்ற மந்திர நாமமுடைய மகாவிஷ்ணு, இராமர், கிருஷ்ணர் உள்பட அவருடைய பல அவதாரங்களும் யாவற்றையும் மீறிய பரம்பொருளாயிருந்தாலும் அவரே தன்னை சிலைகளில் கட்டுப்படுத்திக் கொண்டு அர்ச்சாவதாரமாக க���யில்களில் காட்சியளிக்கிறார். அர்ச்சாவதாரங்களை வணங்குவதே நாராயணனை அடைய எளிதான வழி. மாந்தரனைவருக்கும் தாயும் தந்தையுமாக இருக்கும் அவரை எவரும் சுலபமாக அடையலாம் என்பதை கிருஷ்ணராக அவதரித்தபோது தன்னுடைய லீலைகளால் காண்பித்தார். நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் இச்சுவையை நிறைய ருசிக்கலாம். இறைவனின் இச்சுலபத்தன்மைதான் வைணவத்தின் சிறப்பு.
பெரிய திருவடி, திருவடி
தொகுவைணவத்தில் கருடனை பெரிய திருவடி என்றும்[2][3]; அனுமானை திருவடி என்றும் போற்றுவர்.[4]
வைணவ அருளிச்செயல்கள்
தொகு- பொய்கையாழ்வார் - முதலாம் திருவந்தாதி
- பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி
- பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி
- திருமழிசையாழ்வார் - திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி
- நம்மாழ்வார் - திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி
- மதுரகவி ஆழ்வார் - கண்ணிநுண் சிறுத்தாம்பு
- குலசேகர ஆழ்வார் - பெருமாள் திருமொழி
- பெரியாழ்வார் - திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி
- ஆண்டாள் - நாச்சியார் திருமொழி, திருப்பாவை
- தொண்டரடிப்பொடியாழ்வார் - திருமாலை, திருப்பள்ளியெழுச்சி
- திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான்
- திருமங்கையாழ்வார் - திருவெழுக்கூற்றிருக்கை,சிறிய திருமடல்,பெரிய திருமடல்,திருநெடுந்தாண்டகம்,திருக்குறுந் தாண்டகம்,பெரிய திருமொழி
வைணவ ஆச்சாரியர்கள்
தொகுபுராண காலத்திலேயே தொடங்கிய ஶ்ரீவைணவம், ஆழ்வார்கள் காலத்துப் பாசுரங்களில் பெருமை பெற்றது. ஒன்பதாவது நூற்றாண்டில் இப்பாசுரங்கள் நாதமுனிகள் என்பவரால் தேடி ஒருங்கிணைக்கப்பட்டுப் புத்துயிர் பெற்றன. அதனால் நாதமுனிகளே தற்கால ஶ்ரீவைணவத்தின் முதல் ஆச்சாரியாராகக் கருதப்படுகிறார்.
சுந்தரசோழர் என்ற இரண்டாம் பராந்தகன் (பொ.ஊ. 956–973) காலத்தில் அன்பில் கிராமத்தைச் சேர்ந்த வைணவ ஆச்சாரியர் ஶ்ரீநாதர் என்பவருக்கு மான்யம் கொடுக்கப்பட்டதாக ஒரு செப்பேடு திருவரங்கம் கோயிலில் உள்ளது. இந்த ஶ்ரீநாதர் நாலாயிரப் பாசுரங்களைப் பாடமாகவே நடத்தி திருவரங்கம் கோயிலில் உற்சவங்களில் சேவை செய்தாராம். இவர்தான் நாதமுனிகளாக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. திருவரங்கம் கட்டுரை
நாதமுனிகளுக்குப் பிறகு ஆச்சாரிய பதவியில் வந்தவர்களில் சரித்திரப் பிரசித்தி பெற்றவர்கள் மூவர்: இராமானுஜர், பிள்ளை லோகாச்சாரியர், வேதாந்த தேசிகர்.
இராமானுஜரும், வேதாந்த தேசிகரும், மணவாளமாமுனிகளும் ஆழ்வார் பாசுரங்களை இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று வழிகளிலும் ஆந்திரம், கருநாடகம், ஒரிசா வரை கொண்டு சென்று ஆன்மீகத்தைப் பரப்பியுள்ளனர். அரங்கத்துறையும் இறைவனின் அருளும் அனுமதியும் பெற்று ஆகம வழிபாட்டிலும், கோயில் திருவிழாக்களிலும் ஆழ்வார்களின் தமிழை நடைமுறைக்குக் கொண்டு வந்தனர். நாதமுனிகள் காலத்திற்கு முன் ஆழ்வார்களின் பாசுரங்களை குடந்தை, தஞ்சை ஆகிய சில பெரிய ஆலயங்களில் மிகக்குறைவாகவே சொல்லி வந்தனர். பின்பு நாதமுனிகளால் அருந்தவயோக முறையில் நாலாயிரம் பாசுரங்களும் கிடைக்கப்பெற்ற பின், அவை பாரத தேசத்தின் பெரும்பகுதிகளில் பரப்பட்ட��.
தமிழ்ப் பாசுரங்கள் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், ஒரியா ஆகிய மொழிகளில் எழுதப்பட்டு, அந்தந்த தேசத்து வைணவப் பெருமக்களால் இசைக்கப்பட்டு வந்தன. வேதம், ஆகம வழிபாட்டில் சமஸ்கிருதத்தை ஓதும்போது பிழை இல்லாமல் இயம்புவது கடும்பயிற்சி இல்லாமல் இயலாது. ஒலிப்புப் பிழை ஏற்படின் தவறான பொருளாக அமையும். இவ்வாறு ஏற்படும் பிழைப்பொருளைக்கூட பைந்தமிழ்ப் பாசுரங்களை இசைத்துப் பாடும்போது கடவுள் பொறுப்பதாகக் கூறப்பட்டதால், தமிழின் மேன்மையை அறிந்த இராமானுஜர் அனைத்து வைணவ ஆலயங்களிலும் இல்லங்களிலும் பூசை முறைகளில் தமிழ்ப் பாசுரங்களைச் சொல்வதை நடைமுறைக்கு கொண்டு வந்தார். திருவிழாக்களின் போதும் கோயில்களின் அனைத்து வழிபாடுகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் திருத்தி அமைத்தார். இல்லப் பூசைகளிலும் ஆழ்வார்களின் பாசுரங்களை வேதத்துக்கு இணையாக வைணவர்கள் இசைக்கும் வழக்கம் இன்றளவும் உள்ளது.
ஆழ்வார்கள்
தொகுவடமொழியிலும் தென்மொழியிலும் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர்.
அவர்களில் பெண் என்பதால் ஆண்டாளையும், நம்மாழ்வாரைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் விடுத்து ஆழ்வார்கள் 10 பேர் எனக் காட்டுவாரும் உண்டு.[சான்று தேவை]
வைணவ இலக்கியங்கள்
தொகுவைணவச் சின்னங்கள்
தொகுதிருமண்
தொகுதிருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:
- வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம்
- தென்கலை திருமண் காப்பு: பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம்
பிற
தொகுவைணவ பிரிவுகள்
தொகுவைணவ சமயத்தில் ஶ்ரீவைணவம், மாத்வ சம்பிரயாதம், கௌடிய வைணவம், வர்க்காரி, சுவாமிநாராயண் சம்பிரதாயம், அரே கிருட்டிணா இயக்கம் எனப்பல பிரிவுகள் உள்ளன. ஶ்ரீவைணவத்தில் வடகலை, தென்கலை என இரண்டு பிரிவுகள் உண்டு.[5]
துணை நூல்கள்
தொகு- Swami Tapasyananda. Bhakti Schools of Vedanta.1990. Sri Ramakrishna Math. Mylapore, Chennai. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7120-226-8
- V.N. Gopaladesikan. A Dialogue on Hinduism. 1990. Vishishtadvaita Research Centre, Madras.
- Vatsya Ranganatha, Astadasabheda-nirnaya. Edited and translated by Suzanne Siauve. Pondichery: Intitut Francais D 'Indologie Pondichery, 1978
- Swami Krishnananda. A Short History of Religious and Philosophical Thought in India. 1970. Divine Life Society, Shivanandanagar.
- Cultural Heritage of India. Bharatiya Vidya Bhavan, Bombay. Article on ‘The Historical Evolution of Sri Vaishnavism in South India’.
- V. Krishnamurthy. The Ten Commandments of Hinduism.1994. New Age International. New Delhi.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-224-0628-9