பெயரெச்சம்

பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும்

பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். அப்பெயரெச்சம் இருவகைப்படும். அவை

  • தெரிநிலைப் பெயரெச்சம்
  • குறிப்புப் பெயரெச்சம்

பெயரெச்சச் சொற்கள் அகரவோசையையோ உம் என்னும் ஓசையையோ கொண்டு முடியும்.

தெரிநிலைப் பெயரெச்சம்

தொகு

காலத்தையும் செயலையும் உணர்த்திநின்று, அறுவகைப் பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சவினைச்சொல் தெரிநிலைப் பெயரெச்சம் ஆகும்

எ.கா:

  • படித்த மாணவன்
  • படிக்கின்ற மாணவன்
  • படிக்கும் மாணவன்

இத்தொடர்களில் படித்த, படிக்கின்ற, படிக்கும் என்னும் சொற்கள் பொருள் முடிவு பெறவில்லை. அவை முறையே முக்காலத்தையும், படித்தல் என்னும் செயலையும் உணர்த்திநின்று மாணவன் என்னும் பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்துள்ளன. இவ்வாறு, காலத்தையும் செயலையும் உணர்த்திநின்று, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறு பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் எனப்படும்.

குறிப்புப் பெயரெச்சம்

தொகு

காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சச் சொல் குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.

எ.கா:

  • நல்ல மாணவன்
  • அழகிய மலர்

நல்ல, அழகிய என்னும் சொற்கள் காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்துள்ளன. காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது, குறிப்பினால் மட்டும் உணர்த்துவதால் இது குறிப்பு பெயரெச்சம் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெயரெச்சம்&oldid=4121533" இலிருந்து மீள்விக்கப்பட்டது