புல்லாங்குழல்
புல்லாங்குழல் (ⓘ) மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்தது. புல்லாங்குழல்கள் மிகப் பழங்கால இசைக்கருவியாகும். இவற்றில் கையினால்-துளையிடப்பட்ட துளைகள் கொண்ட பழங்கால புல்லாங்குழல்கள் கிடைத்துள்ளன. சுமார் 43,000 முதல் 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் வரையான பல புல்லாங்குழல்கள் இன்றைய ஜெர்மனியின் ஸ்வாபியன் ஜுரா பகுதியில் கிடைத்துள்ளன. இந்தப் புல்லாங்குழல்கள் ஐரோப்பாவில் நவீன கால மனிதனுக்கு முந்தைய காலத்தில் இருந்தே வளர்ந்துள்ள ஒரு இசை பாரம்பரியத்தின் சாட்சியாக உள்ளது.[1][2] புல்லாங்குழல்களில் புகழ்பெற்ற பன்சூரி உட்பட கு��ல்கள், கி.மு. 1500 முதல் இந்திய பாரம்பரிய இசையில் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இந்து சமயத்தின் ஒரு முதன்மைக் கடவுளான கண்ணன் புல்லாங்குழலைக் கொண்டிருப்பார்.
பொருளியல் மற்றும் சொல்
தொகு1150 - 1500 காலகட்டத்தில், ஆங்கிலத்தில் புல்லாங்குழல் முதன்முதலில் புளூட் (flute) [3] அல்லது else flowte, flo(y)te [4] எனவும், 9 முதல் 14 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பேசப்பட்ட பழைய பிரெஞ்சு மொழியில் ப்ளாட் (flaute) எனவும், பழைய ஆக்சிதம் மொழியில், அல்லது மற்றும் பழைய பிரெஞ்சு மொழியில் ஃபிளாட் (flaüt),[3] ஃப்ளூட்டெ ( fleüte), ஃப்லாட்டெ ( flaüte), ஃப்ளஹுட் ( flahute) எனவும் அழைக்கப்பட்டது. இடைக்கால உயர் ஜேர்மன் மொழியில் floite அல்லது இடச்சு மொழியில் fluit எனவும் வழங்கப்பட்டது. புல்லாங்குழலை குறிக்கும் புலூட் (flute) என்ற சொல் முதன்முதலில் 14 ஆம் நூற்றாண்டில் அறியப்படுகிறது.[5] ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியின்படி, இது ஜெஃப்ரி சாசர்ரின் த ஹவுஸ் ஆஃப் ஃபேமில், c.1380 இல் பயன்படுத்தப்பட்டது.[4]
இன்று, புல்லாங்குழல் குடும்பத்தைச் சார்ந்த எந்தவொரு கருவியையும் வாசிக்கும் ஒரு இசைக்கலைஞர் ஆங்கிலத்தில் flutist (அமெரிக்காவின் பொதுவான உச்சரிப்பு "FLEW-tist"),[6] அல்லது flautist (ஐக்கிய இராச்சியத்தில் பொதுவாக உச்சரிக்கப்படுவது "FLAW-tist"),[7] அல்லது வெறுமனே ஒரு புலூட் பிளேயர் (flute player) (மிகப் பொதுவாக) என அழைக்கப்படுகிறார். இப்போது கிட்டத்தட்ட வழக்கற்றுப் போன பிற ஆங்கில சொற்கள் ஃப்ளட்டர் (fluter) (15 -19 நூற்றாண்டுகள்) [8][9][10] மற்றும் புளூட்டினிஸ்ட் (flutenist) (17 -18 ஆம் நூற்றாண்டுகள்).[11][12]
வரலாறு
தொகுஇதுவரையான காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புல்லாங்குழலில் பழமையான புல்லாங்குழலானது, ஒரு இளம் குகைக் கரடியின் தொடை எலும்பால் ஆனதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதில் இரண்டு முதல் நான்கு துளைகள்வரை இருந்திருக்கலாம், இது சுலோவியாவின் டிஜீ பேபே பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் இது சுமார் 43,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இருப்பினும், இது சர்ச்சைக்குரியதாக உள்ளது.[13][14] 2008 ஆம் ஆண்டில் குறைந்தது 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மற்றொரு புல்லாங்குழல் மீண்டும் ஜெர்மனியின் உல்ம் நகருக்கு அருகில் உள்ள, ஹோஹெல் ஃபெல்ஸ் குகையில் காண்டெடுக்கப்பட்டது.[15] இந்தப் புல்லாங்குழலானது ஐந்து துளைகளுடன் V- வடிவ வாயைக் கொண்டதாக உள்ளது. இது ஒரு பிணந்தின்னிக் கழுகின் இறக்கை எலும்பில் செய்யப்பட்டதாகும். இந்தக் கண்டுபிடிப்பில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் 2009 ஆகத்தில் நேச்சர் பத்திரிக்கையில் தங்கள் கண்டுபிடிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.[16] இந்த கண்டுபிடிப்பானது, உலக வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட எந்தவொரு இசைக் கருவியையும்விட பழமையானதாகும்,[17] ஜெர்மனியின் ஜியாசென்ஸ்கொஸ்டெர்லேர் குகையில் காண்டெடுக்கப்பட்ட புல்லாங்குழல்கள் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தின அவை 42,000 முதல் 43,000 ஆண்டுகள் வரை பழமையான காலகட்டத்தவையாக கருதப்பட்டன.[2]
இலக்கியத்தில் புல்லாங்குழல்
தொகுஇந்தியாவின் பழைய இலக்கியங்களிலே இக்கருவியைப்பற்றிய ஏராளமான குறிப்புகள் உண்டு. தமிழின் சங்க இலக்கியங்களும் குழல் பற்றிப்பேசுகின்றன. சிலப்பதிகாரத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவையிலே கொன்றைக்குழல், ஆம்பர் குழல், முல்லைக்குழல் என 3 வகைக் குழல்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்துக்களின் கடவுளான விஷ்ணு பகவானின் அவதாரமான கண்ணனின் கையிலுள்ளதாகச் சித்தரிக்கப்படும் புல்லாங்குழலுக்கு சமய ரீதியான முக்கியத்துவமும் உண்டு.
முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் முருகன். கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் காலம் ஐயாயிரம் ஆண்டு. முருகப் பெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். திருமுருகாற்றுப் படையிலே,
- “குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்”
என வருகிறது. குழல் என்றால் புல்லாங்குழல் என்று அர்த்தம். யாழ் செயற்கை வாத்தியம். குழல் இயற்கை வாத்தியம்.
- “குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
- மழலைச்சொல் கேளா தவர்”
என்று வள்ளுவர், முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பிறகு யாழைச் சொல்லுகின்றார். எது முக்கியமோ அதை முதலில் சொல்லுகின்றார். முருகப்பெருமான் குறிஞ்சி நிலக் கடவுள். குறிஞ்சி நிலத்திலே (மலையிலே) வாழ்கின்ற தெய்வம், மலையிலே விளைகின்ற மூங்கிலை வெட்டி அதைத் துளையிட்டுப் புல்லாங்குழல் வாசித்தாராம் சுப்பிரமணிய சுவாமி.[18]
வகைகள்
தொகுஇந்திய புல்லாங்குழல்
தொகுஇந்திய பாரம்பரிய இசை வரலாற்றில் புல்லாங்குழல்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன.இவை மூங்கிலால் தயாரிக்கப்படுகின்றது.இந்துக்களின் கடவுளான கிருஷ்ணரே புல்லாங்குழலின் குருவாக கருதப்படுகிறார்.மேற்கத்திய புல்லாங்குழலினை விட இவை சாதாரணமாகவே இருக்கின்றன.இந்திய புல்லாங்குழல்களில் இரண்டு வகைகள் உள்ளன.ஒன்று பன்சூரி வகையாகும்.இதில் ஆறு விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும்.வட இந்திய ஹிந்துஸ்தானி இசைக்கு இவை பயன்படுகின்றன.மற்றொருவகை வேணு இவை தெனிந்திய கர்நாடக இசைகளில் பயன்படுத்தப்படுகின்றன.இவற்றில் எட்டு விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும்.தற்போது தென்னிந்திய புல்லாங்குழலாக கருதப்படுவது 20-ஆம் நூற்றாண்டில் சரப சாஸ்திரி என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஏழு விரல்துளைகள் கொண்ட புல்லாங்குழல் ஆகும்.
சீனப் புல்லாங்குழல்
தொகுசீனப் புல்லாங்குழல்கள் டிசி என அழைக்கப்படுகின்றன. இவை பல்வேறு அளவுகளிலும், பல்வேறு அமைப்புக்களிலும் காணப்படுகின்றன. இவற்றின் துளைகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 11 வரை வேறுபடுகின்றன. பெரும்பாலானவை மூங்கிலால் தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் மரம், எலும்பு, இரும்பு ஆக��யவற்றாலும் ஆக்கப்பட்டவையும் காணப்படுகின்றன.
நவீன சீன இசைநிகழ்ச்சிகளில் காணப்படக்கூடிய புல்லாங்குழல்களாவன பங்டி (梆笛), கூடி (曲笛), சிந்தி (新笛), டாடி (大笛) என்பனவாகும். நிலைக்குத்தாக வைத்து வாசிக்கப்படும் மூங்கிலாலான புல்லாங்குழல் சியாவோ (簫) என அழைக்கப்படுகின்றது.
ஜப்பானியப் புல்லாங்குழல்
தொகுஜப்பானியப் புல்லாங்குழல்கள் ஜப்பானிய மொழியில் பியூ (fue) (笛) (ஹிரகனா ふえ) என அழைக்கப்படுகின்றன. முடிவுப் பகுதியில் வைத்து வாசிக்கப்படுபவை, குறுக்க்காக வைத்து வாசிக்கப் படுபவை என இரு வகையிலும் பல சங்கீதப் புல்லாங்குழல்கள் ஜப்பானில் காணப்படுகின்றன.
சோடினா மற்றும் சுலிங்
தொகுசோடினா எனப்படுவது முடிவுப் பகுதியில் வைத்து வாசிக்கப்படும் ஒருவகைப் புல்லாங்குழல் ஆகும். இது இந்து சமுத்திரத்தில் உள்ள தென்கிழக்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த மடகஸ்கார் தீவுகளில் பரவலாகக் காணப்படுகின்றன. தென்கிழக்காசியாவிலும் இந்தோனேசியாவிலும் இது சுலிங் என அழைக்கப்படுகின்றது. சமகாலத்தில் வசித்த பிரசித்தி பெற்ற சோடினா வாசிப்பவரான இரகோடோ பிராவின் (இறப்பு2001) புகைப்படம் அந்நாட்டுப் பணத்தாள் ஒன்றில் அச்சிடப்பட்டுள்ளது.
அமைப்பு
தொகுபுல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் "மரத்தினால்" செய்யப்படுகின்றது. இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதிச் இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம் இவ் இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கருவி
புல்லாங்குழலின் நீளம் 15 அங்குலம்; சுற்றளவு 3 அங்குலம். இடப்பக்கம் மூடப்பட்டிருக்கும். வலப்பக்கம் திறந்திருக்கும். குழலில் மொத்தமாக 9 துளைகள் உண்டு. வாய் வைத்து ஊதப்படும் முதல் துளைக்கு முத்திரை அல்லது முத்திரைத்துளை என்று பெயர். இத்துளை, மற்ற எட்டு துளைகள் ஒவ்வொன்றுக்கும் நடுவில் உள்ள இடைவெளியை விட சற்றுத் தள்ளி இருக்கும்.
வாசிக்கும் முறை
தொகுகுழலின் 7 துளைகள் மீது 7 விரல்களை வைத்து வாசிக்க வேண்டும். 8 வது கடைசித்துளை பாவிப்பது இல்லை. இடது கை விரல்களில் கட்டை விரலையும், சிறு விரலையும்நீக்கி எஞ்சியுள்ள 3 விரல்களையும், வலது கை விரல்களில் கட்டை விரலைத்தவிர மற்ற 4 விரல்களையும் 7 துளைகளின் மீது வைத்து, முத்திரத் துளைக்குள் வாயின் வழியாகக் காற்றைச் செலுத்தி, துளைகளை மூடித் திறக்கும்போது இசை பிறக்கின்றது.
புல்லாங்குழலின் நீளம், உள்கூட்டின் அளவு கூடும் போது சுருதி குறையும். புல்லாங்குழலில் 7 சுரங்களுக்கு 7 துளைகள் இருந்தாலும் வாசிப்பவரின் மூச்சின் அளவைக் கொண்டே நுட்ப சுரங்களை சரியாக ஒலிக்க முடியும்.
பல்வேறு குழல்கள்
தொகுஉலகம் முழுவதிலுமுள்ள பல விதமான இசைகளுக்கு ஒத்ததாகப் பல்வேறு சிறிய மாற்றங்களுடன் வெவ்வேறு விதமாகப் புல்லாங்குழல்கள் செய்யப்படுகின்றன
பிரபல புல்லாங்குழல் மேதைகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Wilford, John N. (June 24, 2009). "Flutes Offer Clues to Stone-Age Music". Nature 459 (7244): 248–52. doi:10.1038/nature07995. பப்மெட்:19444215. Bibcode: 2009Natur.459..248C. Lay summary – The New York Times.. Citation on p. 248.
- ↑ 2.0 2.1 Higham, Thomas; Basell, Laura; Jacobi, Roger; Wood, Rachel; Ramsey, Christopher Bronk; Conard, Nicholas J. (2012). "Τesting models for the beginnings of the Aurignacian and the advent of figurative art and music: The radiocarbon chronology of Geißenklösterle". Journal of Human Evolution 62 (6): 664–76. doi:10.1016/j.jhevol.2012.03.003. பப்மெட்:22575323.
- ↑ 3.0 3.1 "Flute". The Free Dictionary By Farlex. பார்க்கப்பட்ட நாள் 2012-05-25.
- ↑ 4.0 4.1 Simpson, J. A. and Weiner, E. S. C. (eds.), "flute, n.1", Oxford English Dictionary, second edition. 20 vols. Oxford: Clarendon Press; New York: Oxford University Press, 1989. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0198611862.
- ↑ "Flute". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 2012-05-25.
- ↑ "Flutist". Oxford English Dictionary (American English). Archived from the original on 11 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 5 January 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Flautist". Oxford English Dictionary (British & World English). Archived from the original on 11 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 5 January 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Fluter (c.1400)". Oxford English Dictionary.
- ↑ "Fluter". Webster's Revised Unabridged Dictionary of the English Language. Archived from the original on 11 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 5 January 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Fluter". Random House Dictionary and Collins English Dictionary. பார்க்கப்பட்ட நாள் 5 January 2015.
- ↑ Smith, Fenwick. "Is it flutist or flautist?". Archived from the original on 16 January 2014. பார்க்கப்பட்ட நாள் 5 January 2015.
- ↑ "Flutenist". The Century Dictionary and Cyclopedia. பார்க்கப்பட்ட நாள் 5 January 2015.
- ↑ Tenenbaum, David (June 2000). "Neanderthal jam". The Why Files. University of Wisconsin, Board of Regents. பார்க்கப்பட்ட நாள் 14 March 2006.
- ↑ Flute History, UCLA. Retrieved June 2007.
- ↑ Ghosh, Pallab. (2009-06-25) BBC: 'Oldest musical instrument' found. BBC News. Retrieved on 2013-08-10.
- ↑ Nicholas J. Conard; Maria Malina; Susanne C. Münzel (August 2009). "New Flutes Document the Earliest Musical Tradition in Southwestern Germany". Nature 460 (7256): 737–40. doi:10.1038/nature08169. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:19553935. Bibcode: 2009Natur.460..737C.
- ↑ "'Oldest musical instrument' found". BBC news. 2009-06-25. http://news.bbc.co.uk/1/hi/sci/tech/8117915.stm. பார்த்த நாள்: 2009-06-26.
- ↑ கிருபானந்த வாரியார் எழுதிய செஞ்சொல் உரைக்கோவை நூல் பக்கம்: 78
வெளியிணைப்புகள்
தொகுஇவற்றையும் பார்க்கவும்
தொகுதொகு | தமிழிசைக் கருவிகள் |
---|---|
தோல் கருவிகள் | ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
|
நரம்புக் கருவிகள் | வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
|
காற்றிசைக் கருவிகள் | கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை|மோர்சிங்
|
கஞ்சக் கருவிகள் | தாளம் | சேகண்டி |
|
பிற | கொன்னக்கோல் | கடம் |
|