சென்னைக் குடிநீர் வாரியம்
சென்னைக் குடிநீர் வாரியம் என்பது சென்னைக் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியம் என்பதன் சுருக்கப்பெயர் ஆகும். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் அடங்கிய சென்னைப் பெருநகரப் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் பொறுப்பைக் கொண்டது. மேலும், இதே பகுதிக்குள் பாதுகாப்பாக கழிவுநீர் அகற்றல் பணியையும் இவ்வாரியமே மேற்கொள்கிறது.
குடிநீர் வழங்கல்
தொகுசென்னைப் பெருநகரப் பகுதிகளில் 1189 ச.கி.மீ.(சென்னை மாநகரம் மட்டும் 426 ச.கி.மீ.) பரப்பில் வாழும் 74.38 இலட்சம் இணைப்புதாரர்களுக்கு குடிநீரை வழங்குகிறது. (2019 நிலவரம்) சென்னைக்கு அருகிலுள்ள வேறு சில உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சில பெரிய ஆலைகளுக்கும் இவ்வாரியமே குடிநீர்த் தேவையை நிறைவுசெய்கிறது. நாளொன்றுக்கு சராசரியாக 985 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை பெறுகிறது. ஆனால், தேவையோ ஆயிரம் மில்லியன் லிட்டருக்கும் மேல் என்கின்றன புள்ளிவிவரங்கள்.
நீர்வள மூலங்கள்
தொகுஏரிகள் / நீர்த்தேக்கங்கள்
தொகுசென்னைக்கு மேற்பரப்பு நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் ஆகியவை மூலம் குடிநீர் பெறப்படுகிறது. சென்னையை அடுத்த புழல்(செங்குன்றம்) ஏரி, சோழவரம் ஏரி, திருவள்ளூர் அருகிலுள்ள பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், திருப்பெரும்புதூர் அருகிலுள்ள செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவையும் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியும் சென்னைக்குக் குடிநீர் தரும் நீர்நிலைகள் ஆகும். இவற்றின் மொத்த கொள்ளளவு 12,722 மில்லியன் கன அடி ஆகும்.
நீர்நிலை | கொள்ளளவு
(மில். கன அடி) |
---|---|
சோழவரம், | 1,081 |
புழல் | 3,300 |
பூண்டி | 3,231 |
செம்பரம்பாக்கம் | 3,645 |
வீராணம் ஏரி | 1,465 |
இத்துடன், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து ஆண்டுக்கு 12 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் பெறுவதற்கான ஒப்பந்தமும் நடைமுறையில் உள்ளது. ஆனால், பருவமழையைப் பொறுத்து உரிய காலத்தில் இந்த கொடுக்கல் வாங்கல் நடக்காமல்போவதும் உண்டு.
கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள்
தொகுஇவற்றைத் தவிர வடசென்னைக்கு வடக்கில் மீஞ்சூரிலும் தென்சென்னைக்குத் தெற்கில் நெம்மேலியிலும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலமும் குடிநீர் பெறப்படுகிறது. இவற்றின் சுத்திகரிப்புத்திறன் நாளொன்றுக்கு தலா 100 மில்லியன் கன அடியாக இருந்தது. பிறகு நெம்மேலி நிலையமானது, மேம்படுத்தப்பட்டு இதன் சுத்திகரிப்புத் திறன் 110 மி.க. அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-17, 2017-18, 2018-19 ஆகிய ஆண்டுகளில் பருவமழை பொய்த்தநிலையில், கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் இரண்டும் குடிநீர்த் தட்டுப்பாட்டைக் குறைக்க பெரிதும் உதவியாக விளங்கின.[1]
கூடுதலாக, நெம்மேலியில் 150 மில். லி. திறன்கொண்டதும் கிழக்குக் கடற்கரைச் சாலையிலேயே உள்ள சென்னையை அடுத்த பேரூரில் 400 மில். லி. திறன்கொண்டதுமாக இரண்டு புதிய கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நிலத்தடி நீர்
தொகுதாமரைப்பாக்கம், பூண்டி, கன்னிகைப்பேர், பஞ்செட்டி, மீஞ்சூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாரியத்தின் குழாய்க்கிணறுகளிலிருந்தும் பெருநகராட்சிப் பகுதியுடன் புதிதாக இணைக்கப்பட்ட சில இடங்களில் உள்ள கிணறுகளிலிருந்தும் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, சென்னைக் குடிநீருக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
தொகுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கான பணியில், மூலவளத்திலிருந்து பெறப்படும் நீரானது பலவகைகளில் சுத்திகரிக்கப்படுகிறது. வீராணம் ஏரிக்கு அருகில் வடக்குத்து, செம்பரம்பாக்கம், புழல், சூரப்பட்டு, சென்னைக்குள் கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் பெரிய குடிநீர் சுத்திகரிப்புநிலையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே வழங்கலுக்காக குடிநீர் அனுப்பப்படுகிறது. வாரியத்தின் தற்போதைய மொத்த குடிநீர் சுத்திகரிப்புத் திறன் நாளொன்றுக்கு 1504 மில்லியன் லிட்டர் ஆகும்.
கழிவுநீரகற்றல்
தொகுசென்னை மாநகரில் குடியிருப்புகள், பிற கட்டடங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரைச் சுத்திகரிப்பது மற்றும் அதை மறுசுழற்சியில் பயன்படுத்துவது, பாதுகாப்பாக வெளியேற்றுவது ஆகிய பணிகளும் சென்னைக் குடிநீர் வாரியத்தின் பொறுப்பு ஆகும். 3,529 கி.மீ. நீளம் குழாய்கள் மூலம் கழிவுநீரைச் சேகரித்து, 266 கழிவுநீரேற்று நிலையங்கள் ��ூலம் 12 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, சுத்திகரிக்கப்படுகிறது.
நிர்வாக முறை
தொகுவாரியத்தின் தலைமைப் பொறுப்பில் பெரும்பாலும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஒருவர், செயல்படுவார். வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் பொறுப்பிலேயே அவர் பணியாற்றுவார். (அரிதாக, ஆட்சியாளர்களின் முடிவுகளையொட்டி, அதிகாரி அல்லாத அரசியல்சார்ந்தவர்கள் வாரியத்தின் தலைவர் பொறுப்பிலும் அமர்த்தப்பட்டதும் நடந்துள்ளது.)
மேலாண்மை இயக்குநரை அடுத்த நிலையில், இயக்கம் மற்றும் பராமரிப்பு, வழங்கல், கணக்கியல், குடிநீர்த் திட்டங்கள் ஆகிய பிரிவுகளுக்கு தலைமைப்பொறியாளர்கள் பொறுப்பாகச் செயல்படுவார்கள்.
மொத்தமுள்ள பரப்பை சிறு அளவாக பணிமனை எனும் அலகாகவும் சற்று பெரிய அளவாக பகுதி எனும் அலகாகவும் அமைக்கப்பட்டுள்ளது. வாரியத்தில் 200 பணிமனை அலுவலகங்களும் 15 பகுதி அலுவலகங்களும் இருக்கின்றன.
உசாத்துணை
தொகு- http://www.chennaimetrowater.com/index.htm பரணிடப்பட்டது 2008-05-16 at the வந்தவழி இயந்திரம்
- https://chennaimetrowater.tn.gov.in/index.html