சாளுவன்குப்பம் புலிக்குடைவரை

சாளுவன்குப்பம் புலிக்குடைவரை என அழைக்கப்படும் குடைவரை ஒன்று தமிழ் நாட்டிலுள்ள மாமல்லபுரத்துக்கு வடக்கே சென்னை நோக்கிச் செல்லும் பாதைக்கு அருகே சாளுவன்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

சாளுவன்குப்பம் புலிக்குடைவரையின் ஒரு தோற்றம்

பெயர்

தொகு

புலி ( சிங்கம் ) ... புலிக்குடைவரை அல்லது புலிக்குகை என்ற பெயர் வழக்கில் வந்துவிட்டாலும், இங்கே புலிச் சிற்பங்கள் எதுவும் கிடையாது. இங்குள்ள சிற்பங்களைக் கருத்தில் எடுக்கும்போது இதை "யாளிக்குகை" அல்லது "சிம்மக்குகை" என்பதே பொருத்தமாக இருக்கும்.[2]

அமைப்பு

தொகு

கடற்கரையை அண்டி அமைந்துள்ள சிறிய பாறையொன்றைக் குடைந்து இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குடைவரை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒரு மேடை போன்ற அமைப்பில் உள்ளது. இங்கே கருவறைகள் எதுவும் இல்லை. இதன் தளம் நிலத்தில் இருந்து 2 மீட்டர் உயரத்தில் உள்ளது இத்தளத்தை அடைவதற்கு அதன் முன்புறத்தில் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குடைவரையில் அதிட்டானம், தூண்கள், கபோதம், கூடு, சாலை, நாசிகம் போன்ற அமைப்புக்கள் உள்ளன. எனினும் இவற்றுட் சில அம்சங்கள் முற்றுப்பெறாத நிலையிலேயே காணப்படுகின்றன. முகப்பில் இந்த மண்டபத்தைச் சுற்றி 11 யாளித் தலைகள் அரை வட்ட அமைப்பில் செதுக்கப்பட்டுள்ளன.[3]

பயன்பாடு

தொகு

தமிழ் நாட்டில் காணப்படும் ஏனைய குடைவரைகளினின்றும் வேறுபாடான அமைப்பைக் கொண்ட இக்குடைவரையின் நோக்கம் குறித்துப் பல கருத்துக்கள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு கோயில் என்று சிலரும், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ஒரு மேடையாக இருக்கலாம் என வேறு சிலரும், முன்னேயுள்ள வெளியில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது மன்னன் இருந்து பார்ப்பதற்கான மேடையே இது என இன்னொரு சாராரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதற்கு அருகில் உள்ள கல்வெட்டு ஒன்றில் இறைவன் அல்லது அரசன் எழுந்தருளும் இடம் எனப் பொருள்படும் "திருவெழுச்சில்" என்னும் சொல் காணப்படுவதால் இது ஒரு உற்சவ மண்டபமாகவோ, அரசன் அமரும் இடமாகவோ இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. YALI MANDAPAM - TIGER CAVE
  2. காசிநாதன், நடன., மாமல்லபுரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2000, பக். 31, 32.
  3. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடை��ரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000, பக். 65.
  4. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000, பக். 66.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tiger Cave (India)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.