மௌத்கல்யர்

மௌத்கல்யர் அல்லது முத்கலர் (சமசுகிருதம்: मौद्गल्य) நளாயினியை மணந்த முனிவர். வறுமை மற்றும் இறையச்சம் கொண்ட வாழ்க்கையை நடத்தும் அவர், மோட்சம் எனும் நிர்வாண நிலையை அடைவதில் தேர்ச்சி பெற்றவராகக் கருதப்படுகிறார். மௌத்கல்ய பிராமணர்கள் இந்த முனிவரிடமிருந்து தங்கள் வம்சாவளியைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.[1]இவரது பெயரில் முத்கல உபநிடதம் மற்றும் முத்கல புராணம் உள்ளது.

முத்கலர்
மௌத்கல்ய முனிவரின் சிற்பம்
எழுத்து முறைमुद्गल
வகைஇந்து சமயம்
துணைநளாயினி
பெற்றோர்கள்பார்மியாசா (தந்தை)
குழந்தைகள்அகலிகை, திவோசன்
நூல்கள்முத்கல உபநிடதம், முத்கல புராணம் மற்றும் விநாயகர் புராணம்

மகாபாரதம்

தொகு

மகாபாரத இதிகாசத்தில் மௌத்கல்ய முனிவர் வெறும் அரிசி தானியங்களை மட்டுமே சாப்பிட்டு வந்ததாகவும், இஷ்டிகிரிதா எனப்படும் ஒரு சடங்கு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்திரனும், தேவர்களும் பௌர்ணமி மற்றும் அமாவாசை அன்று இவரது யாகங்களில் பங்கேற்பதற்க அவரது இல்லத்தில் நேரில் தோன்றியதால், அவர் மிகவும் பக்தி கொண்டவராக கருதப்படுகிறார். அவர் தனது கற்றறிந்த விருந்தினர்களுக்கு அரிசி தானியங்களை வழங்கும் போதெல்லாம், அவை நூறு மடங்கு அதிகரித்தன. அதனால் வருகை தந்த அனைத்து பிராமணர்களும் திருப்தி அடைய முடிந்தது..[2]

திரௌபதியின் பிறப்பிடம்

தொகு

புராணக் கதைகளின்படி, மௌத்கல்ய முனிவர் வயது முதிர்ந்த நிலையிலும், தனது இளம் மனைவி நளாயினி தன் மீது கொண்ட பக்தியால் மகிழ்ந்த அவர், அவளுக்கு விருப்பமான ஒரு வரத்தை வழங்கினார். நளாயினி அவருடன் காதல் வாழ்க்கை வாழ விரும்பினார். மௌத்கல்ய முனிவர் அவ்வாறே வரத்தை வழங்கினார். இருவரும் பாலியல் வாழ்க்கை முறையை அனுபவிக்க ஆரம்பித்தனர். முனிவர் மலையின் வடிவத்தை எடுத்தபோது, அவள் அவனிடமிருந்து ஓடும் நதியாக மாறினாள். இவ்வாறு ஆயிரமாண்டுகள் இத்தகைய சிற்றின்ப வாழ்க்கையை அனுபவித்த முனிவர் அதிலிருந்து சோர்வடைந்து, தனது கடுமையான வாழ்க்கைக்குத் திரும்பினார். இன்னும் சிறிது காலம் தன்னுடன் உடலுறவு தொடருமாறு நளாயினி கெஞ்சினாள். தன் மனைவியின் காம சுபாவத்தால் கோபமடைந்த மௌத்கல்ய முனிவர், அவள் அடுத்த பிறவியில் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் மகளாகப் பிறக்க வேண்டும் என்று சபித்தார். அவளுடைய தேவைகளை பூர்த்தி செய்ய ஐந்து கணவர்கள். இதனால், நளாயினி பூமியில் அடுத்த ஜென்மத்தில் திரௌபதியாகப் பிறந்தாள்..[3]

இராவணனை சபிப்பது

தொகு

மௌத்கல்ய முனிவர் ஒருமுறை சுவஸ்திகாசனம் எனப்படும் யோக நிலையில் ஈடுபட்டிருந்ததாகவும், அங்கு அவர் தனது கைத்தடியின் மீது தோள்களை ஊன்றியதாகவும் இராமாயணம் கூறுகிறது. இராவணன் கடம்ப வனத்தில் முனிவரைக் கண்டார். மௌத்கல்ய முனிவர் தியானத்தில் இருப்பதைக் கண்டு, விளையாட்டுத்தனமாக தனது வாளான சந்திரஹாசத்தால் முனிவரின் தடியைத் தட்டினார். மௌத்கல்யரின் தடி உடைந்தது, முனிவர் பூமியில் விழுந்ததால், முனிவரின் முதுகெலும்பு உடைந்தது. ஆத்திரமடைந்த முனிவர் இராவணனின் வாள் இனி செயல்படாதவாறு சபித்தார்.[4]

துர்வாசரின் சோதனை

தொகு

மகாபாரதத்தில் மௌத்கல்ய முனிவரின் கடுமையான வாழ்க்கை முறையைப் பற்றி கேள்விப்பட்ட துர்வாசா முனிவர் அவரைச் சோதிப்பதற்காக அவரது ஆசிரமத்திற்குச் சென்றார். முனிவரின் முன்னிலையில் நிர்வாணமாக தோன்றிய அவர் அவரிடம் உணவு கேட்டார். மௌத்கல்ய முனிவர், துர்வாசருக்கு தன்னிடமிருந்த அனைத்து உணவுகளையும் வழங்கினார். உணவைச் சாப்பிட்டுவிட்ட துர்வாசர் எஞ்சியதை உடல் முழுவதும் பூசிக்கொண்டார். துர்வாசனின் விசித்திரமான நடத்தைகள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு மௌத்கல்யர் கோபம் கொள்ளவே இல்லை. மகிழ்ச்சியடைந்த துர்வாசர், முத்கலா தனது தற்போதைய உடலுடன் சொர்க்கம் செல்ல வரம் அளித்தார். சொர்க்க லோக தேரோட்டி தனது விமானத்தை முனிவரின் முன் கொண்டு வந்து, தான் மோட்சம் (நிர்வாணம்) அடைந்துவிட்டதாகவும், இப்போது தேவர்களின் இருப்பிடத்திற்குச் செல்வதாகவும் அறிவித்தார். சுவர்கத்தில் இருப்பதன் சாதக பாதகங்கள் பற்றி விசாரித்த பிறகு, மௌத்கல்ய முனிவர் மீண்டும் பூமியில் தங்குவதைத் தேர்ந்தெடுத்தார்.[5] சுவர்கத்தின் குறைபாடுகள் இல்லாத ஒரு இடம் இருப்பதைப் பற்றி தேரோட்டியிடம் விசாரித்தார். தேரோட்டி அவரிடம் விஷ்ணுவின் வைகுண்டம் எனும் பரம பதம் என்று அழைக்கப்படும் ஒளியின் உன்னத இருப்பிடத்தைப் பற்றிக் கூறினார்..[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Kapoor, Subodh (2004). A Dictionary of Hinduism: Including Its Mythology, Religion, History, Literature, and Pantheon (in ஆங்கிலம்). Cosmo Publications. p. 260. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7755-874-6.
  2. The Mahabharata: Volume 3 (in ஆங்கிலம்). Penguin Books India. July 2012. p. 464. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-310015-7.
  3. Mani, Vettam (2015-01-01). Puranic Encyclopedia: A Comprehensive Work with Special Reference to the Epic and Puranic Literature (in ஆங்கிலம்). Motilal Banarsidass. p. 549. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0597-2.
  4. www.wisdomlib.org (2015-08-27). "Maudgalya: 9 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-19.
  5. www.wisdomlib.org (2019-01-28). "Story of Mudgala". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-19.
  6. Parmeshwaranand, Swami (2000). Encyclopaedic Dictionary of Upanisads (in ஆங்கிலம்). Sarup & Sons. p. 399. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7625-148-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌத்கல்யர்&oldid=3677697" இலிருந்து மீள்விக்கப்பட்டது